இன்றே மிக நல்லநாள்
நாளை நாளை நாளை என்று நாளை கடத்தும் மாந்தரே
வேளை வந்த போதிலே நமனும் அன்று வருவனே
தூளாய் போகும் உடலிதை தாங்கி நிற்கும் மாந்தரே
ஆளான பெண்டிர்போல அந்தகன் கை பரிசமே
நாலும் நாலும் எட்டு என்று கணக்கிடும் மாந்தரே
காலும் கையும் இழுத்து நிற்க கணக்கு வந்துதவுமோ
பாலும் தேனும் கலந்து உண்டு கொழுத்திடும் உடலிதை
நூலுபோட்டு இழுத்திடும் காலன் கை பாசமே
ஆறுகுணம் கொண்டு இங்கு அரசாளும் மாந்தரே
கூற்று வந்து அழைக்குமுன்னர் ஆறதை கடப்பீரே
சாற்றும் மாலை வாடுமே நாறுமிந்த உடலிலே
சேற்றில் நின்று கொப்பளித்தல் ஜகமிது அதுபோலவே
குருவும் வந்தார் குணமும் தந்தார் மனமதில் கவலை ஏன்
திருவருள் துணையிருக்க கருவிலே செல்வமோ
அருவருக்கும் கருக்குழியில் இன்னுமேன் ஆசையோ
வறுத்தெடுக்கும் வினையெலாம் வாக்கினாலே வருவதே
வாக்கில் நல்ல வார்த்தைகள் வரவேண்டும் என்றுமே
ஆக்கிரோஷம் ஏனப்பா அன்பு சொற்கள் இருக்குதே
மக்கிபோகும் மண்ணிலே மானுடரின் காயமே
சொக்கி நின்று சொக்கன்பாதம் பணிய அருள் கிடைக்குமே
இன்றுதான் மிகநல்ல நாள் இறைவன் பாதம் பணியுமே
என்றுதான் அக்ஞான இருட்டு இங்கு மறையுமோ
கன்றுதேடி பசுவின் பால் அருந்துவதை அறிவீரோ
மன்றுள் நாதன் நிற்கையில் கன்றுபோல காணுமின்
![]()





Users Today : 84
Users Yesterday : 88
Total Users : 58660
Views Today : 1117