விலகல்
விலகும் என்ற நம்பிக்கையில்
மேகங்களில் சந்தோஷமாக
மறைகிறது சூரியன்!
கேள்வி
“எப்படி இருக்கிறீர்கள்”
இந்த ஒரு கேள்வியில்
குளிர்ந்து விடுகிறேன்,
எப்படி இருந்தாலும் கூட!
உதயம்
உதிக்கும் போதே
ஒளிர்ந்து விடுகிறது சூரியன்
பிறக்கும் போதே
தெரிந்து விடுகிறது
பெரியோர் யாரென்று!
முகம்
முதலாளி கொடுக்கும்
பத்து ரூபாயில்
ஒளிர்கிறது
நாள் முழுதும் உழைத்த
ஏழை வேலைக்காரனின்
முகம்,
மலை முகட்டில் மறையும்
மாலைச் சூரியன் போல!
உக்கிரகம்
எழுந்திருக்கும் போதே
உக்கிரகம்
சூரியனும் அப்பாவும்!
பகவான்
விடிந்தவுடன்
இருட்டில் இருந்த உண்மைகள்
வெளிச்சத்திற்கு வருகின்றன
சூரியன் உண்மையில் பகவான்தான்!
கிரணமும் கண்களும்
காதலியின் முகத்தில்
சூரிய கிரணங்கள்!
ஒளிருகிறது காதலனின்
கண்கள்!
கடமை
நாற்பது டிகிரி வெய்யில்,
இருந்தாலும்
மாலையில்
இன்றைய கடமை முடிந்தது என
உறங்கப் போகிறார்கள்
சூரியனும்
விவசாயியும்!
குளிரும் சூரியன்கள்
சுட்டெரிக்கிறது சூரியன்
என்கிறார்கள்
கடலின் குளிர்ச்சியை உள்வாங்கி
மேகங்களாக்கி
மழைக்குக் காரணமாக
இருப்பதை அறியாமல்!
பொறுமை
எதிர்காலம்
ஒளிமயமானது என்கிறார்கள்,
அதற்கு
எரியும் வெய்யிலை
பொறுத்துதான் ஆக வேண்டும்
என்பது சிலருக்குத்
தெரிவதில்லை!
இருட்டு
கண்களை மூடிக் கொண்டால்
ஒளிரும் சூரிய வெளிச்சம் கூட
இருட்டுத்தான், அதுபோல்
நீதி தேவதையின்
கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன,
ஒளிரும் சில உண்மைகளுக்கு
மத்தியில்!
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 190