எரியும் நிலவுகள்

எரியும் நிலவுகள்

(பதினைந்து நிமிடங்களில் எழுதிய கவிதைத் தொகுப்பு)

 

விலகல்

 

நிலவு கூட எரிகிறது,

நீ

என்னிடமிருந்து

விலகும்போது !

 

விடியல்

 

விடியலில் எழுந்திருக்க

அலாரம் வைக்கிறாய் நீ !

நிலவு எரிகிறது

விடியலே நீதான் என்பதை அறியாமல் !

 

ஏக்கம்

 

விவசாயி ஏங்குகிறான்

மழை வரட்டும் என!

காதலி ஏங்குகிறாள்

காதலன் வரட்டும் என!

எரியும் நிலவு ஏங்குகிறது

பொழுது விடியட்டும் என !

 

எதிர்பார்ப்பு

 

மகன் நாளையாவது வருவான்,

எதிர்பார்ப்புடன்

தந்தை

முதியோர் இல்லத்தில்,

எரியும் நிலவுக்கு தெரியும்

அவன் வரமாட்டான் என !

 

இப்போதுதான் பார்க்கிறேன்!

 

பகலில் கிடைத்த பதவி உயர்வுக்கு

இரவு வாழ்த்து

தெரிவிக்க வந்தார்

பக்கத்து வீட்டுக்காரர்!

எரியும் நிலவை

இப்போதுதான் பார்க்கிறேன்!

 

ஒரே மாதிரி

 

அன்பாய் இருந்தால்

அக்ஞானி என்கிறார்கள்,

பட்டும் படாமல் இருந்தால்

புத்தன், ஞானி என்கிறார்கள்,

எரியும் நிலவே

எப்படி நீ மட்டும் எப்போதும்

ஒரே மாதிரி

குளிர்ச்சியாய் இருக்கிறாய்?

 

புதிய பகைவன்

 

நண்பன் விரோதியாவது

எப்போதாவது நடந்து விடுகிறது.

எரியும் நிலவே நீ மறையாதே,

என் புதிய பகைவனை

நாளை நான் பார்க்க வேண்டாம்!

 

மறைவு

 

நிலவே சற்று மறைந்து கொள்!

நான் காதலியிடம்

மண்டியிடுவதை

இந்த உலகம் கண்டுவிடப்

போகிறது!

 

நிலவு மகள்

 

உன்னிடம் பொறுமை

இருப்பதால் நீ நிலமகள்!

நீ எப்போதும்

குளிர்ந்து இருப்பதால்

உன்னை நிலவு மகள் என

அழைக்கட்டுமா?

 

காதலியின் தூக்கம்

 

பின் தூங்கி முன்னதாக எழுவாய்

என்கிறார்கள்,

ஆனால் எனக்கு மட்டும்

நீ ஏனோ

இரவில் தோன்றி

பகலில் மறைகிறாய்,

நிலவைப்போல்!

 

யோகமும் போகமும்

 

யோகம் பகலவன் போல்

வெளிச்சம் தரும்

என்பார்கள்!

எனக்கு யோகம் தெரியாது!

நிலவின் வெளிச்சமே

எனக்குப் போதும்!

 

ஓவர் டைம்

 

நான் மட்டும் பெரிய அதிகாரியாக

இருந்தால்

சூரியனை விடுப்பில் அனுப்பி

நிலவுக்கு ஓவர் டைம்

அளித்து விடுவேன்,

ஏனென்றால்

இரவு கொஞ்சம் நீளட்டுமே!

 

தேவை

 

பகலவனே உன் வெளிச்சத்தின்

பயனை விட

நிலவின் பயன்தான் அதிகம்

ஏனெனில்,

இரவுக்குத்தான் வெளிச்சம் தேவை!

 

அலாரம்

 

எல்லோரும் காலையில்

விழிக்க மட்டும்தான்

அலாரம் வைக்கிறார்கள்,

உறங்க அல்ல,

ஏன் என்று

யாரேனும் விளக்குங்களேன்!

 

பரிசவேதி

 

நிலவே நீ செம்பை பொன்னாக்கும்

பரிச வேதிக் கல்லோ,

பகலில்

சுள்ளென்று வீசும்

வெய்யிலை வாங்கி இரவில்

சில்லென்று மாற்றுகிறாய்.

 

இரவின் அதிகாரி

 

பகலில் வேலை செய்பவர்கள்

உறங்கி விடுவதுண்டு,

நைட் ஷிஃப்ட்டில் மட்டும் யாரும்

உறங்குவதில்லை!

நிலவே நீதான் சிறந்த அதிகாரி!

 

படைப்பவனின் படைப்பு

 

பகலில் பல்வேறு படைப்புகள்

உருவாகின்றன.

சூரியன் காரணமாக இருக்கலாம்

ஆனால் அந்த

படைப்பவனையே படைக்க

காரணமாக இருப்பது

நிலவுதான்!

 

 

விடுப்பு

 

எரியும் நிலவு ஒரு நேர்மைான

காவல் அதிகாரி போலும்!

அமாவாசை விடுப்பில் மட்டும்

அதிகம் திருட்டுக்கள் நடக்கின்றன,

என்கிறது புள்ளி விவரம்!

 

நிலவும் மனமும்

 

எரியும் நிலவு

மனதின் அதிபதி என்பது

உண்மைதான்,

இரண்டுமே

தினமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

 

நிலவே முகம் காட்டு

 

பெண்ணே உன் முகம்

எரியும் நிலவு

என்று சொல்கிறார்கள்,

நான் என்ன சூரியனா?

ஏன் என்னைக் கண்டவுடன்

மறைகிறாய்?

 

கறை

 

பெண்களே உங்கள் முகம்

எரியும் நிலவு போலத்தான்,

கறை படுத்தும் ஆண்கள்

இருக்கும் வரை,

 

சொந்தம்

 

நிலவுப் பெண்களே

அடுப்பங்கறையை விட்டு

வரவேற்பு அறைக்கு வாருங்களேன்,

எரியும் நிலவு என்றதனால்

இரவுக்கு மட்டும் நீங்கள்

சொந்தமல்ல!

 

நம்பிக்கை

 

எந்த பிரச்சினை வந்தாலும்

விடிந்தால் சரியாகி விடும்

என்கிறார்கள்,

எரியும் நிலவே உன் மேல்

அவ்வளவு நம்பிக்கை!

Loading