மஞ்சள் சொன்ன மந்திரம்

மஞ்சள் சொன்ன மந்திரம்
பாரதியிடம் அன்று கயிறு பேசியது.
(November 23, 2011 இன்று என்னிடம் மஞ்சள் செடியொன்று பேசியது)
ஓர்நாள் மாலை
தோட்டந்தனில் அமர்ந்திருந்தேன்
தோட்டமென்றால்
ரோஜா முல்லை மலர்கள் பலவும் என்று
கற்பனை செய்யவேண்டாம்.
காய்ந்த செடிகள் இரண்டு
அதனோடு மஞ்சள் செடியும் உண்டு.
மஞ்சள் செடியைப் பார்த்தேன்,
நெஞ்சத்தில் நல்லதாய் ஓர் எண்ணம்
உதித்திட கண்டேன் உயர்வாய்.
சகதீச சந்திர போசு
சொன்னது சத்தியம்தானோ ?
தாவரம் தனக்கும் இங்கே
உயிர்உண்டு என்றே பகர்ந்தார் !
இந்த மஞ்சள் செடிக்கு உயிர் உண்டோ?
சந்தேஹம் சரிதான் என்று
சோதித்திட எண்ணம் கொண்டேன்.
இரண்டு மாதம் முன்பு போட்ட
மஞ்சள் கிழங்கு இன்று
மேலெழும்பி வந்தது உண்மை.
உயிர் உண்டு நம்பிடலாம்.
பயிர் அது பச்சை நிறத்தில்
இலையுடன் வளர்ந்தது உண்மை.
உயிர் உண்டு நம்பிவிட்டேன்.
உயிர் மட்டும் தான் உண்டு.
மனிதரைப்போல் பேசிடுமோ?
பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்.
“மண்ணிலே பிறந்து வளர்ந்தாய் !
மனமுண்டோ மண்ணில் என்றேன்.”
வாயைத் திறக்கவில்லை.
காற்றினால் சிறிது அசைவு.
அத்துடன் நின்றுவிட்டது.
பேசவொரு வாயில்லை என்று
புரிந்துகொண்டேன் இன்று.  ஆனால்
காற்றின் வேகம் தன்னை
அசைவாலே உணர்த்தி நிற்கும்.
வசைபாட தெரியாது அதற்கு.
இசைபாடி அதன்முன் நின்றால்
இதமாக வளர்ந்து நிற்கும்.
மனிதனுக்கு ஆறறிவு.
மண்ணிதிலே தெரிந்த உண்மை.
மற்றய உயிரினம் தனக்கு
சிற்சில அறிவு என்று
சாத்திரம் சொல்வதுண்டு.
மஞ்சளுக்கு பேசத்தெரிந்தால்?
கொஞ்சம் நின்று யோசித்திருந்தேன்.
“என்னை வளர்த்த மண்ணில்
எந்தன் வேர்களை பரப்பி நிற்பேன்.
மண்ணைவிட்டு பிரித்தெடுத்தால்
உயிரையும் விடத்துணிவேன்.
மனிதரைப் போல நாங்கள்
காப்பகத்தில் விடுவதில்லை.
சொந்தம் என்று பக்கம் வந்து
புதராக வளர்ந்தால் கூட
எங்களுக்கு வேண்டிய சத்தை
அதற்களித்து நாங்கள் அழிவோம்.
புல்பூண்டு வளர்ந்தால்கூட
மனிதரைப்போல நாங்கள்
பொறாமை கொள்வதில்லை.
தண்ணீர் தந்த மனிதரிடம் நாங்கள்
தராதரம் பார்ப்பதில்லை.
யார் தண்ணீர் விட்டால் கூட
இயல்பாக பயனை அளிப்போம்.
சாதிச் சண்டையில்லை.
மோதிக்கொள்வதில்லை.
ஆத்திரம் வந்து நாங்கள்
அடித்துக்கொள்வதில்லை.
படிக்காமல் இருந்தால்கூட
பக்குவம் நிறைய உண்டு.
ஒளிதரும் கதிரவன் எங்கள்
உயிர் என்று உணர்ந்து கொள்வீர்.”    இப்படி
ஆயிரம் விஷயம் அந்த
செப்பியது செப்பியதுண்மை.
ஓர் அறிவு இருந்தால்கூட
ஓர் அமைதி அதற்கு உண்டு.
ஆறறிவு இருந்தால் கூட
ஆத்திரம் நமக்கு வருவதுண்டு.
செடியது உணர்த்தி உண்மை
செவியிலே ஏற்றிட வேண்டும்.
புவியிலே நம்மைப் போன்றே
பிறரையும் எண்ணிட வேண்டும்.
அடிதடி வேண்டாம் மனிதா!
படித்தபின் அடக்கம் வேண்டும்.
தண்ணீர் ஒருவர் தந்தால்
அவரின் தயை எண்ணி குளிரவேண்டும்.
அதைவிடுத்து
அவர் தராதரம் என்ன என்று
துப்பிடவேண்டாம் என்றும்.
அப்பா அம்மா இவர்கள்
இப்பாரில் உயிரைத்தந்தோர்.
அப்பால் அவரை தன்னிடம்
அரவணைத்து வாழவேண்டும்.
முதியோர் இல்லம் எல்லாம்
ம்யூசியமாய் மாற வேண்டும்.
மென்மேலும் வளர வளர
மஞ்சள் அது மண்ணில் வேரை
அதிகரித்து செல்வது போல
மென்மேலும் வளர வளர
அன்பு அது அதிகரித்து
பெற்றோரைப் போற்ற வேண்டும்.
பக்கத்தில் வந்தாள் மனைவி.
“மஞ்சள் செடியைப் பார்த்து
மனதிலே என்ன எண்ணம்?
நட்டது நல்லதாய் ஆச்சு,
பொங்கல் தினத்து அன்று  பிடுங்கி
பானையிலே கட்ட வேண்டும்.”
என்றவள் சொல்லிச்சென்றாள்.
சோர்ந்துதான் போனேன் நானும்.
நம்முயிரும் ஒர்நாள் இங்கு
நமனவன் கொண்டு போவான்.
அதற்குள் அந்த செடியைப்போன்று
அன்புடன் வாழ வேண்டும்.
தன்மக்கள் தன் பெற்றோர்
தயவுடன் தண்ணீர் அளித்தோர்
இவர்களுக்கு என்ன செய்தோம்?
உதவிபல ஆற்றி இந்த
உலகினிலே வாழ வேண்டும்.
பொங்கல் பானையிலே
பிடுங்கி கட்டினால் கூட
சுயதர்மம் அன்பு என்று
சுதந்திரமாய் வாழ வேண்டும்.
வாழ்நாள் முடிந்த உடனே
தீ மூட்டி தனயன் சுடுவான்.
சுட்டாலும் மாற மாட்டேன்.
இட்டமுடன் என்னை அறிவேன்.
கட்டம் போட்டு வாழும் வாழ்க்கை
கசந்திடும் ஓர்நாள் இங்கு.
உசத்தியாய் வாழ வேண்டும்,
உண்மையை உணர வேண்டும்.
என்நோற்றான் எந்தன் தந்தை
என்றே உலகத்தோர் போற்ற வாழ்வேன்.
அவையத்து முந்தி எந்தன்
அருமை மைந்தனை ஆக்கி
பெருமை பலவும் அடைவேன்.
கருமை முடி இல்லை என்று
கவலை படவும் மாட்டேன்.
உயிர் தரும் தண்ணிர் தன்னை
புற்பூண்டு உறிந்தால் கூட
மஞ்சள் செடியைப்போல
மலர்ச்சியை மனதில் கொள்வேன்.
இவ்விதம் பலவாய் எண்ணி
எழுந்துநான் சென்றுவிட்டேன்.
அகன்று நான் சென்ற பின்னும்
அந்த மஞ்சள் செடியை மறக்கவில்லை.
நெஞ்சம் நன்றாய் ஆச்சு.
நேர்வழியை பற்றலாச்சு.

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
TM Hemalatha
TM Hemalatha
5 years ago

மிக அருமை