புன்னகை மாறா புவனேசி

புன்னகை மாறா புவனேசி
தாயும் நீ! தந்தையும் நீ!
தரணியிலே எங்கள் பரணி நீ!
உலகம் நீ! உள்ளம் நீ!
கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ!
நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும் காவிரிக்கரையில்!
ஆனால் உனை நினைத்தாலே பாவம்
போகும் மனக்கரையில்!
நீ வளர்ந்தது, உத்தமர் வாழும் உத்தமதானபுரத்தில்!
எங்களுக்கு உன் உத்தமமான
உறவு கிடைத்தது இப்புரத்தில்!
அப்புறம் என்பது உனது
அகராதியில்
இல்லாத வார்த்தை!
தப்பிதம் இல்லாத
தரமான நடத்தை உன் வாழ்வில்!
கொட்டும் தேள்
குளத்தில் வீழ்ந்தாலும்
பட்டென அதனை
பிடித்துக் காக்கும்
கருணை உள்ளம் உன்னது!
கடிந்து பேசும் காய்குணம் என்றும்
உந்தன் வாக்கில்
வந்தது அறியோம்!
மாமியாருக்கும்
மாதாவாய் காட்சி!
மேதினி இதனில்
அருமையிலும் அருமை!
பொறாமை குணமோ?
பேச்சுக்குக்கூட
பக்கத்தில் இல்லை!
அருட்சக்திக்கே கூட
ஆற்றலைத் தருமுந்தன்
அழகிய விழிகள்!
பொறுமைக்கு பூமாதேவி என்பார்!
இல்லையில்லை,
எங்களுக்கு புவனாதேவிதான்!
அண்டியவருக்கும்
அண்டை வீட்டாருக்கும்
அண்ணபூரணி நீ!
நீ நான்கு பேருக்கு சமைத்தால்
நாற்பது பேருண்பார்,
அது சித்தும் வியக்கும் சித்தி!
நீ நாகரசன்பேட்டையின்
தாகம் தீர்த்தவள்!
விடயல் கருப்பூருக்கு
விடியல் தந்தவள்!
கும்பகோணத்தில்
கோலம் வரைந்தவள்!
அயனாவரத்தில்
அன்பைச் சுமந்தவள்!
தில்லியில் பூத்த
மல்லிகை பூ நீ!
குழந்தைகள் மத்தியில்
குழந்தையாய் கமழுவாய்!
பெண்டிர் மத்தியில்
உண்டியைப் பேசுவாய்!
உறவின் மத்தியில்
உண்மையைப் பகருவாய்!
உபாசகர் மத்தியில்
உத்தமியைப் புகழுவாய்!
நீ வத்தல் குழம்பு வைத்தால்
வழியெல்லாம் வீசும் வாசம்!
காய்கறி இல்லாவிடினும், உன்
கைமணம் இருக்கும்!
நீ பாடும் பாடலில்
பாடம் படிக்காவிட்டாலும்
பாவம் இருக்கும்
பக்தியுடன் நீ பாடுகையில்
பக்குவமாய் பதம் இருக்கும்!
விருந்தினர் வந்து
செல்லுகையில்
வாசல் வரை வழியனுப்புவாய் அதில்
வாஞ்சையுடன் வரம் இருக்கும்!
ஆவரண பூஜை செய்வார்
அருட்சக்தி குருவும்
சமையலில் இருந்தாலும்
சம்ப்ரதாயம் தொடங்கி
சாந்திஸ்தவம் வரையிலும்
நீ உடனிருப்பது அதிசயம்!
கை வைத்த இடத்தில்
கைப்பொருள் இருக்கும்!
பண்புமிக்க பரணியே
பணிந்தோம் பாதமதில் !
வம்புக்கு இழுத்தாலும்
பதில் நோகாமல் உரைப்பவளே !
தெம்புக்கு நீ உண்ணும்
தேநீர் கருணையன்றோ !
கொம்புத்தேன் ஞானமதை
கை நோகாமல் எடுத்தவளே !
அன்னையென்றால்
அரவனைப்பாய்
பெண்ணென்றாள்
பொறுமை காப்பாய்
அழைப்பவர்க்கு அருகில் வந்து
குழைந்து அமுதளிப்பாய்
நோயின் துன்பத்திலும் மனம்
நோகாத நல்லவளே
கோயில் குளமெல்லாம்
கும்பிடத் தேவையில்லை
ஆயுள் முழுதும் உந்தன்
அருகினில் இருந்தால்போதும்
வேயுறு தோளி பங்கன்
வடிவாய் நீ இருப்பாய்
மெய்ஞானம் பெற்றவளே
பொய்மை பேசும் எங்கள்
புலம்பலைக் கேட்டுவிடு !
அனுதினம் உன் நினைவு
எப்போதும் இருக்க என்றால்,
அக்ஞானம் அதுகூட
அருகிலே இருக்கட்டும்
பூஜை செய்திடுவோம்
பூக்கள் சொரிந்திடுவோம்
மக்கள் எங்கள் மனதிலென்றும்
மாறாமல் நின்று வீடு
இனியொரு பிறப்பு
எனக்கில்லை என்றாயே
என்றாலும்
இனி நாள் பிறக்கையிலே
என் தாயாய் வந்துவிடு
ஸ்ரீ மாதா சகஸ்ரநாமம்
செவிதன்னில் பாடிவிடு
இமயத்தில் செல்லும் முன்பு
சமயத்தில் தடுத்தவளே
குமையாமல் குன்றாமல்
குடும்பத்தில் குணம் தந்தாயே
கிள்ளுக்கீரை இல்லை
குடும்ப வாழ்வேன்று
அள்ளி அளித்தாயே
அறிவுரை எமக்கிங்கு
துள்ளும் மனமெல்லாம்
உன் மடியில் தூங்கிடுமே
வள்ளல் குணம் கொண்டு
வையத்தில் வாழ்ந்தாயே
புற்று நோய் இருந்தாலும் உன்
புன்னகை மாறவில்லை !
கற்று தேர்ந்தவர்க்கும்
கிடைக்குமோ அந்த நிலை ?
சற்று நீ இவ்வுலகில்
சுகமாய் இருந்திடலாம்
குற்றம் உனதில்லை
கூற்றுவனுக்கு அவசரம்தான்
ஸ்ரீ நகரம் விளங்கும்
அந்த ஸ்ரீ மாத நீயன்றோ
புவனம் பதினான்கும்
பெற்றவள் நீயன்றோ
தவளம் போல மணம்
மனதில் கொண்டவளே
கவளம் கிடைக்குதென்றால்
கருணை நின்னதன்றோ
குழந்தைகள் எமைக் காக்க
கடவுளாய் இருப்பவளே
பழுத்த அறிவெமக்கு
பாங்காய் அருளிடுவாய்
எழுத்தில் இருப்பவளே
எங்கும் நிறைந்தவளே
வழுத்தினோம் எம் வாழ்வினில்
வீசும் ஒளி நீயே

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments