நைனிடால் போன க(வி)தை

நைனிடால் போன க(வி)தை
இரயிலுக்கு நேரமாச்சு!
விரைந்து போய் நின்றால்
கரைந்து கூவுகிறார்
இரண்டு மணி தாமதமாம்!
தரை முழுதும் குப்பைகள்!
தரையில் அமர்ந்து விட்டோம்,
செய்தித்தாள் தனை விரித்து!
செய்தித்தாள் முன்பக்கம்
சொச்ச பாரத்தின்
சிறப்பான விளம்பரங்கள்!
டுவிட்டர் சுட்டுரை போல்
மைத்துனரின் கிண்டலுடன்
மிச்ச நேரத்தில் மெதுவாகப்
பேசி நின்றோம்!
வாட்சப்பில் ஸ்மைலி போட்டு
விரைவாக நகர்ந்த நேரம்
இரண்டு மணி தாமதமாய்
இரயில் வண்டி விரைந்து(?) வர
அமர இடமில்லை
அப்பப்பா பெருங்கூட்டம்!
மூன்று மாதம் முன்பே
முன்பதிவு செய்த சீட்டை
கண்குத்தி பாம்பாக
கலெக்டர் சரிபார்த்தார்,
வெயிட்டிங் பயணி
நீட்டிய டிக்கட்டை
வாங்காமல் நகர்ந்து சென்று!
கால்வைக்க இடமில்லை
இடையிடையே
போனவாரம் பொரித்தெடுத்த
போண்டா வியாபாரம்!
இத்தனையும் தாண்டி
இடித்தபடி பலருறக்கம்!
முடிவெட்டா வீர சிங்கர்
வெடிசரமாய் பேசினிற்க
எமக்குறக்கம் வந்திடுமோ!
அப்பப்பா ஒருவழியாய்
அர்த்த ராத்திரியில்
ராம் நகரும் வந்ததப்பா!
சொச்ச பாரத்தில்
சொலித்தது இரயில் நிலையம் !
அறையினிலே படுத்துறங்கி
அதிகாலை எழுந்துவிட்டோம்!
பொதிசுமக்கும் ஷார் ஆட்டோ
அதிர்ந்து எம்மை அழைத்து செல்ல
பயணித்தோம் நயினிட்டால்
பாதையெல்லாம் வளைசுழற்சி!
பாதி வழியினிலே பேருந்தில்
பயணிக்க காலாதூங்கியதில்
தூங்காமல் இறங்கி விட்டோம்!
மீதிப் பயணிக்க
ஆயிரமாய் பணம் கேட்டார்
ஆங்கிருந்த காரோட்டி!
அவ்வழியே வந்தவொரு காவலரும் அவரின் வண்டியிலே
அழகாக அழைத்து சென்றார்!
அங்கங்கே மனிதனேயம்
அழியவில்லை
அதையறிந்தோம்!
சர்க்காரின் சர்ச்சைகள்
சிறிதும் சிக்காமல்
சர்க்கார் விடுதியிலே
சேர்த்து விட்டார் அக்காவலரும்!
அழகுமிக்க விடுதியிலே
அரசாங்க அட்டை பார்த்து
அதிக நாள் பழகியதாய்
அன்பாக அறைதந்து
அக்கரையாய் உபசரித்தார்!
மைத்துனரும் மன்னியாரும்
மணியாலே அலங்கரித்து
மக்களுடன் பழகி நின்றார்!
மெதுவாக என் மனைவியுடன்
பதமான புல்தரையில்
பேசிநின்றோம் சில நேரம்!
தூசியில்லை தும்புமில்லை
தூய்மைமிகு தரையங்கே!
பூரி சப்ஜியினை
பூரணவர் படைத்திட்டார்!
வந்துனின்றார் வேகனாரில்
பாந்தமாக காரோட்டி!
நயினிட்டால் நகருக்கு
நகர்ந்திட்டோம் நல்வழியில்!
அரசியலார் அறிக்கைபோல்
வளைவு சுழிவாக
விரைந்து பயணித்தோம்!
அரசியலே ஆட்டம் காண
பரபரப்பாய் அன்று (வாக்குப்)
பதிவு நாள்!
பலகடைகள் அடைந்திருக்க
திறந்த சில கடையில்
திண்பண்டம் வாங்கித் தின்றோம்!
வெண்மை மிகு சோளத்தை
வேகவைத்து விலை வைக்க
தின்பதற்கே பிறந்ததுபோல்
உண்டு களைத்திட்டோம்!
உடைகள் கண்ணுறுத்த
இடையிடையே எடுத்திட்டோம்!
மடையாகும் ஏரியது
நைல் நதிபோலத் தோன்றியது!
குடை விரித்த தேவியவள்
கோயிலுக்கு சென்று வந்தோம்!
படைப்பவளும் அவளேதான் பாறை
குடைந்த பெருமலையும் அவளேதான்!
உடையவளும் அவளேதான் மனத்தகத்துக்
குடைபவளும் அவளேதான்!
பைரவரும் அவளேதான் வானில்
விரைபவளும் அவளேதான்!
நைனா தேவியெனும் நற்பெயராள்!
நைந்த பேர்களுக்கு
நலனும் தாந்தருவாள்!
பைந்தவத்தின் கூடத்தில்
சிந்துபாடும் சிவத்தோடவளிருப்பாள்!
விந்தைதான் சில மக்கள்
சிந்தை செய்யாதிருப்பதுவும்!
பந்தமெனும் மாயையிலே
படுத்துறங்கும் மாக்களுக்கு
பாஸார் தான் தெரியும் மனப்
பாஸாங்கு தான் செய்யும்!
தூசாக்கும் துன்பத்தை
துர்க்கையவள் தாள் வணங்கு!
காசாக்கும் நம்மையிந்த
காசினியில் விலைபேசும்!
கார்கால மேகம்போல்
இருண்டதுவே அவ்வானம்!
திரும்பினோம் தங்குமிடம்!
இரவு உணவுண்டு
இனிதாய் நல்லுறக்கம்!
பனிசூழும் காலையிலே
அனிருத்து இசைபோல
அதிர்ந்து பயணித்தோம்
ஆங்காக்கு சுயபடங்கள் (ஸெல்பி)!
திரைப்படத்தின் பாடல் போல
வளைந்து வளைந்து செல்லும் பாதை!
களைப்பு இல்லா காரோட்டி
காட்டிச்சென்றார் மலையின் கோடி!
போட்டிபோட்டு படத்தை எடுத்தோம்
ஊட்டி போன்ற ஊசி வளைவை!
தற்கொலையின் முனையிது என்றார்
தவித்து விட்டது தாயாய் மனதில்!
உற்பவித்தோம் இந்த உலகில்
உயிர்விடவோர் உரிமை இல்லை!
கற்றதனால் ஆய பயன்
கொற்றவளை கும்பிடவன்றோ?
கொலை தொழில் கூற்றுவன் வேலை!
நிலைபெறுத்தல் நமது கடமை!
அலையாக இந்த எண்ணம்
அங்கிருந்து பின் மலரின் மன்றம்!
மலைத்தோட்ட மலர்கள் கொஞ்சும்!
கலை நோக்கில் காமரா கெஞ்சும்!
“சிலைபோல சிந்தனையற்று
அலையாதீர் அகிலத்தோரே
மலைமீது இந்த மலர்கள்
மணம்வீசி நிற்குது பாரீர்!
சினம் என்ற சரக்கை ஏற்றி
மனம் மாறும் மானிலத்தீரே
மலர்போல மணத்தை வீசும்
மங்களமாய் வாழ்க்கை வாழ்வீர்!”
இப்படியே பேசிப்பேசி
இறங்கினோம் இடத்தை விட்டு!
பின்பு ஏறினோம் இமாலயம் காண!
தென்பு வந்தது நம் தேசம் உயர்வு!
கண்ணுயர்த்தி கண்டோம் கயிலை!
பெண்ணுயர்த்தி! பாரீர் பரசிவத்தை! முக்
கண்ணுயர்த்தும் முதல்வன் கூட
பெண்ணுக்கு தன் பக்கம் தந்தான்!
இமாலயத்தில் இருக்கின்றானோ?
இங்கிருந்து தெரியவில்லை எனில்
யானறியேன் என் மனத்துளானே!
இல்லாளை இறையாய்க் கண்டால்
கல்லானும் கடவுள் காண்பான்!
பொல்லாப்பு ஏதும் வேண்டாம்!
போதும் இந்த வேதாந்தம்தான்!
ஆதவன் உச்சி வந்தான்
அடிவயிறு பசிக்கலாச்சு!
அடிமலையில் இறங்கி வந்து ஒரு
பிடிபிடித்தோம் பைங்கன் பர்த்தா!
பொடி நடையாய் பின்பு பர்ச்சேஸ்!
நெடிதுயர்ந்த நமது இறைவர்
தரிசித்தோம் அனுமன் கோயில்!
பரிதவிக்க விடுவாரோ எம்மை?
பஸ் டிக்கட் வாங்கி விட்டோம்!
காரோட்டி நல்ல மனிதர்
தேரோட்டும் கண்ணன் போல
பாராட்டி பணத்தைக் கொடுத்தோம்!
வழி நெடுக துணியும் மணியும்!
பழி எதற்கு ? பார்க்கட்டும் நன்றாய்!
கழிவிரக்கம் என்னில் வைத்து
விரைவீர்காள் என்றேன் நானும்!
இரைந்து கிடக்கும் பலபொருள் அங்கே
தரையூர்ந்து பேருந்து வந்தோம்!
விரைந்தெடுப்பாய் வண்டி என்றோம்!
நிறையட்டும் பாஸஞ்சர் என்றான்!
ஒருவழியாய் காட்கோதாம் வந்தோம்!
பெரிதான பேருந்து ஏற
பல்லக்காய் படுக்கும் வசதி!
வசதி என்று வாகாய் படுத்தால்
வழியெங்கும் விரைவு தடுப்பு!
விழிபிதுங்கும் விலங்கைபோல
விழிமூடி வந்து சேர்ந்தோம்!
விரைந்தப்பா இரண்டு நாட்கள்
நைனிட்டால் ஓர் நல்ல பயணம்!
கற்பதற்கு நிறைய உண்டு
காசினியை சுற்றி வந்தால்!
நைனிட்டால் சென்று வந்த
கதையை நான் கவியாய்ச்
சொன்னேன்
கதையில்லை வாழும் வாழ்க்கை
கருத்தினுள் உணர்ந்து கொண்டேன்!

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments