அமைதி கொள் என்மனதே
விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள்
விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற
துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை
களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன் கருணை செய்வாய்.
என்மனிதர் இவர்என்று என்னெதிரில் அனைவரையும் அன்புடனே எண்ணியே
அன்னமிட்டு ஆதரித்து அறம்செய்ய வேண்டுமென்று அடிமனதில் நினைத்தே
உன்னெதிரில் உன்னுருவை உள்ளத்தில் உன்னுகின்றேன். உத்தமனே உதவிடுவாய்
தன்னிகரில்லாத தலைவனே நீஎன்று தந்திரங்கள் கூவிடுமே நானறிவேன்.
ஐம்பத்து அகவை நானின்று கடந்து விட்டேன் நல்நினைவை
நீதந்தாய் பொற்பதத்தை புந்தியிலே பொருத்தி விட்டேன் பக்குவத்தை நீதந்தாய்.
கற்பதற்கு பலகோடி காசினியில் உண்டன்றோ கருத்தில் உணரவைத்தாய்.
உற்பத்தி ஆகின்ற ஒருசொல்லும் உன்னதன்றோ உனக்கடிமை செய்வேன்.
எண்பத்தி நான்ககவை இன்னும் இருக்க ஆசை கொள்வேன்.
எண்ணிச் சிறக்க உந்தன் இனிய பெயர் இருக்குதன்றோ.
மண்ணில் வாழ்கையிது நன்றாய் மனப்பாடம் ஆகுதற்கு எண்ணுவையோ ?
எண்ணமெலாம் நீயன்றோ விண்ணில் சென்றாலும் இவ்வாழ்க்கைகிணைஉண்டோ ?
கைலாசம் வைகுந்தம் உண்டென்பார் இல்லையென்பார் இப்பாரில் உள்ளவர்கள்.
கைகொடுத்து தூக்கிவிட உன்னருள் உள்ளதனால் எனக்காசையில்லை.
கைலாசம் வைகுந்தம் அவ்விடமே இருக்கட்டும் கவலையில்லை எனக்கிங்கே
கைக்குழந்தை நான்என்று கருத்துடனே எனைக்காப்பாய் தும்பிக்கை ஆண்டவனே.
புவனத்தின் நாயகி பொக்கிஷமாம் உயிர் தந்தாள்
அருட்சக்தி குரு வந்து அன்பதனைக் கற்பித்தார்!
அன்னையவள் பாதம் அனுதினம் தொழுதிட மனமுண்டு.
உற்றார் உறவினர்கள் உண்மையாய் உதவி செய்தார்!
நட்புக் கூட்டமது நல் நினைவை நன்றாய் விதைத்தது!
ருதம்பரா சபையினரோ சுற்றமென சுகம் தந்தார்!
மைதிலியாம் மனைவியவள் வெற்றிக்கு பின்னொரு பெண்ணானாள்!
ஆதிப்பரம்பொருளே அன்பு செய்ய வந்துதித்தான்!
கவிதைப் பதிவிடவோ இருக்கவே இருக்கிறது கைபேசி!
எனக்கிங்கே பின்னெது வேண்டும்? அமைதிகொள் என்மனதே!
![]()




Users Today : 26
Users Yesterday : 88
Total Users : 58602
Views Today : 231