ஸ்ரீராஜமாதங்கி கானம்

ஸ்ரீராஜமாதங்கி கானம்
ராகமாலிகை
பல்லவி
அவதாரம் எடுத்தனளே ஸ்ரீராஜ மாதங்கி
நவமணி நிறைந்த கற்பகக் காட்டில்                       (அ)
அனுபல்லவி
தசமஹா வித்தையில் ஒன்பதானவளாம்
மதங்க முனிவரின் தவ மகளாம்                               (அ)
சரணங்கள்
லலிதையின் கரும்பு வில்லில்
லலிதமாய் தோன்றியவள்
பலிதமாகும் மந்திரத்தை
பக்தருக்குத் தருபவள்                                                   (அ)
சும்ப நிசும்பரை கொன்றவளாம்
நல்ல சப்தசதியின் நாயகியாம்
துஷ்ட விஷங்கனை வதைத்தவளாம்
இஷ்ட விருப்பதை அருள்பவளாம்                        (அ)
அரியாசனம் அமரும் அரசருடன்
சரியாசனம் தருவாள்
புரியாத மொழியையும் நமக்கு
புரிய வைத்திடுவாள்
மரியும் இந்த உடலில்
மாதங்கி வீற்றிருப்பாள்
விரியும் இந்த உலகில் பீஜம்
தொண்ணுத்தெட்டானவள்                                        (அ)
பச்சை நிறத்தொரு வண்ணம் கொண்டாள்
இச்சை யாவையும் திண்ணம் தருபவளாம்
பச்சை காளியெனும் பெயருடைத்தாள்
விச்சையின் உள்ளே இருப்பவளாம்                       (அ)
மாதங்கி மந்திரம் மனதில் கொண்டால்
வேதவேதாந்தங்கள் விகசிக்குமே
மதங்க மனுகோசம் விவரிக்குமே
எதற்கும் அவள் அருள் துணை நிற்குமே              (அ)
சரஸ்வதியே அவள் சங்கரியே
பரமேச்வரிக்கும் அவள் மந்திரியே
ரதத்தில் வந்தால் கேயசக்ர ரதத்தில் வந்தால்
சுரம் கேட்குமே சரிகம பதனியின் சுரம் கேட்குமே         (அ)
கற்பக மலரினை சிரம் சூடுவாள்
பொற்பதம் பணிந்திட புன்னகைப்பாள்
கற்சிலையல்ல கடவுளப்பா அவள்
பற்பல கலையெல்லாம் புரிய வைப்பாள்                           (அ)
மடியிலே வீணையை கரத்தினால் மீட்டினால்
கடிதான வினையெல்லாம் தூர ஓடுமே
படிப்பின் அரசியை பார்த்த கண்கள்
துடிப்பினை மறந்து துதித்திடுமே                                            (அ)
மேலிரு கரங்களில் மின்னும் கதிர்கள்
நாலிரு குணங்களும் நாடி வருமே
சூல்கொண்ட மேகமாய் கருணை உள்ளம்
நாலான வேதங்கள் நாடி வருமே                                             (அ)
கஸ்தூரி திலகம் தரித்து நிற்பாள்
பசுமையாய் சந்திர கலை தரிப்பாள்
பசுமையின் நிறமவள் பதமளிப்பாள்
நிசப்தமாய் மனமதை நிற்க வைப்பாள்                                (அ)
வலது பாதத்தை மடித்த மவர்வாள்
சலிக்கும் மனமதை சூடிடுவாள்
மலராய் சூடிடுவாள்
ஒலிக்கும் ஓங்கார உட்பொருளாள்
கலீர் கலீரென ஒலிக்கும் காதணியாள்                                   (அ)
சகல கலா வல்லியெனும் சகப்பெயராள்
சகல கலைகளும் சேர்த்து வைப்பாள்
பகலவன் ஒளியென பிரகாசிப்பாள்
அகலுமே வினையெலாம் அன்றுடனே                               (அ)
ஏழு சுரங்களின் ஏற்றிரக்கம்
வழுவாமல் வீணையில் மீட்டிடுவாள்
பழுதான மனமெல்லாம் புதிதாகுமே
தொழுதிட திருவெல்லாம் தான் தருவாள்                           (அ)
பேறான அவள் பெயர் அனுசரிப்பார்
சேறாம் அவித்தையில் அமிழ மாட்டார்
மாறாக மண்ணிதில் தினம் வாழ்வார்
வேறான வீண் எண்ணம் விலக்கிடுவார்                               (அ)
சிருங்கார நாயகி அவள் சித்தம் வைப்பார்
பெருங்காட்சி தன்னை பார்த்திடுவார்
உருங்காட்சி எல்லாம் உணர்ந்திடுவார்
பேரின்ப சுகத்தினை பேணிடுவார்                                         (அ)
பூபுரம் மூன்று இதழ் பதினாறு
அப்புரம் எட்டிதழ் ஐங்கோணம்
தப்பாமல் முக்கோணம் பிந்துவுடன்
நிப்பது அவளின் சக்கிரங்கள்                                                     (அ)
பெருமாட்டி புகழினை புகழ்ந்திடுவார்
அருள்பெற்ற அபிராமி பட்டருமே
குருவென கலைகளை கொடுத்திடுவாள்
சிருங்கார பட்டரின் சிந்தனையாள்                                         (அ)
சர்வ தீர்த்தமவள்,
சர்வ மந்த்ரமு மவள்,
சர்வ சக்தியுமவள்,
சர்வ பீடம் அவள்,
சர்வ தத்வம் அவள்,
சர்வ வித்யை அவள்,
சர்வ யோகமும்,
சர்வ நாதமுமவள்,
சர்வ சப்தம் அவள்,
சர்வ லோகம் அவள்,
சர்வ தீக்ஷை யுமே! (அ)
லலிதையின் நகரம் ஸ்ரீநகரம் அதை
வலிமையாய் காக்கின்ற வீரமகள்
ஒலிக்கும் மந்திரத்தின் உட்பொருளாம்
மெலினமாய் அதனுள் மேவியவள்                                        (அ)
வசமாகுமே வியனுகெல்லாம் நம் வசமாகுமே
நிசமாகுமே நம்மனதிலே நினைப்பதெல்லாம் நிசமாகுமே
தூசாகுமே துன்பங்கள் தரணியில் தூசாகுமே
பேசலாகுமே வாயெல்லாம் பேசலாகுமே
பொன்னே மணியேயென பேசலாகுமே                              (அ)
மதுரையம்பதியில் மீனாக்ஷியாம்
உதிரத்தில் உணர்வுறும் உத்தமியாம்
குதித்தெழும் குண்டலி அவள் யோகம்
அதிர்ந்தெழும் அர்த்தத்தை அளிப்பவளாம்                        (அ)
நகுலியாய் நாக்கில் நலம் சொல்லுவாள்
வெகுளியை வேருடன் விழச்செய்பவள்
பகலிலே ஜபித்திடும் பெரும் மந்திரம் அவள்
அகத்தினில் அருள்தரும் அருட்சக்தியாம்                            (அ)
உத்திஷ்ட புருஷியே உயர்ந்தெழுவாய்
புத்திக்குள் பரமென புகுந்திடுவாய்
எத்திக்கும் வெற்றியை எமக்கருள்வாய்
பத்திக்கு மட்டுமே நீ வசப்படுவாய்                                       (அ)
கூடமான பொருளெல்லாம் கூடி வரும்
கூடஸ்த நிலையினை கொடுத்து விடும்
கேட்டிடும் ரஹசியம் காதிலுறும்
பாட்டிலே ஞானமாய் மகிழ்ந்து விடும்                                 (அ))
யோகினியெல்லாம் இவள் புகழ் பாடுவார்
மோகிக்கும் மனதினை நிலை நிறுத்துவாள்
தேகத்தின் உள்ளே தரிசிக்கலாம்
மேகத்தின் வடிவாய் முன்னிருப்பாள்                                   (அ)
சங்கீத யோகினி சியாமளையாம்
அங்கத்தில் சுகம் தரும் சுகபிரியாள்
பங்கமில்லா ஒரு வைணிக்கியாம்
தங்கமாய் மின்னிடும் முத்திரிணியாம்                                  (அ)
புஷ்பிக்கும் மலரென புன்னகையாள்
இஷ்டமாய் சேருவார் இல்லறத்தில்
கஷ்டமும் பயமும் சிற்தும் தராள்
உஷ்ணம் தணித்திடும் உள்ளத்தினாள்                                   (அ)
மல்லிகை ஜாதி மல்லியினால்
எல்லாரும் அருச்சனை செய்திடுவோம்
வில்வமும் பதுமமமும் போட்டிடுவோம்
எல்லா நலங்களும் பெற்றிடுவோம்                                       (அ)

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments