எது ஸித்தி? யார் ஸித்தர்?
ஸித்தியென கண்டிடுவார் காசினி இதிலே
ஸத்தியமாய் இருக்கிறார் ஸித்தர் உலகில்
பொத்தி பொத்தி வைத்திடுவார் இரஹஸியமாம்
உத்தியது இனிமேலும் உதரத்தில் பிறக்க மாட்டார்
கண்கட்டு வித்தையல்ல செப்புமல்ல
மண்விட்டு மறைந்திடுவார் மேலாம் ஸித்தி
விண்ணுறையும் வேதாந்தம் அரிய ஸித்தி
கண்ணப்பன் செய்ததுவோ மிகக்கடின ஸித்தி
பிள்ளைக்கறி சமைத்தார் பெரிய ஸித்தி
கள்ளமில்லா உள்ளத்தார்க்கே கிடைக்கும் ஸித்தி
பள்ளம்விழு மாந்தருக்கு ஸித்தி புரியாதப்பா
கள்ளமென பறைந்திடுவார் கூற்றிற்காவார்
பாதரஸம் கட்டிடுவார் பழகிய ஸித்தர்
சாதாரஸம் வைப்பதுவும் ஸித்தியென்பேன்
ஏதென்றால் எனக்கதுவும் தெரியாதன்றோ
அதைப்போல்தான் அவர்களது ஸித்தியாமே
தெரியாத நேரத்தில் நெடுதூரம் செல்வார்
புரியாத போக்கதுவே ஸித்தன் போக்கு
விரிவான உலகத்தில் விழுந்த பேர்க்கு
கரியாகும் புடம்போட்ட காசும் கனவு
தேகமது ஸித்தருக்கு வெற்றுக் கூடு
சோகமில்லை சொந்தமில்லை ஓட்டு வீடு
தாகமது மிகுந்த பேர்க்கு தெரியும் உண்மை
மோகமதில் மூழ்கியோர்க்கு மறையும் கண்மை
கண்ணெதிரே நின்றாலும் காட்சி இல்லை
மண்மீதில் முழுகியோர்க்கு மயக்கும் ஸித்தி
விண்மீதில் விரைந்து போகும் விமானத்தேகம்
விண்ணிற்கும் மண்ணிற்கும் ஸித்தர் பாலம்
மண்கொடுத்தால் பொன்னாக்கும் மிகவும் ஸித்தி
திண்ணையிலே அமர்ந்தவரோ தொலைவில் செல்வார்
புண்ணாக்கு தின்றுதரும் பாலை பசுவும்
எண்ணிடலோ இதுகூட ஏற்ற ஸித்தி
ஸித்தருக்கு மறைவில்லை மரணமில்லை
பித்தரென திரிந்திடுவார் பாரும் தொல்லை
முத்தரான பிறகேது மறையும் ஸித்தி
அத்தனவன் அருகிருந்தால் அன்பே ஸித்தி
பாடல் அவர் கூற்றெல்லாம் பாடம் பாடம்
தேடல் அவர் செய்வதெல்லாம் வேடம் வேடம்
கனக வைப்பில் சொன்னதெல்லாம் தங்கம் தங்கம்
மனதாலே படித்தாலோ மோகம் மங்கும் மங்கும்
சினமதனை வென்றாலோ பக்தி பொங்கும் பொங்கும்
சனக்கூட்டம் மயங்கிடுமே பணத்தாக்கம் தாக்கம்
தனையறிய காண்பதுவே ஊக்கம் ஊக்கம்
ஸித்தியினில் மயங்கி விட்டால் தேக்கம் தேக்கம்
ஆற்றல் மிகு ஸித்தருக்கு அருளின் சக்தி
போற்றி நின்ற பேர்களுக்கு புரியும் உக்தி
காற்றினிலே மறைந்து விடும் கர்மம் சுத்தி
சேற்றினிலே இருந்தாலும் தங்கம் சுத்தி
அலையும் மனம் அதனை நீ உற்றுப்பாரு
வலைவலையாய் அது அலையும் பாதை பாரு
சிலையினிலே நிலை நிறுத்தி நேராய்ப் பாரு
மலைமலையாய் குவிந்தவினை மாறும் பாரு
விழுங்கிய உணவெல்லாம் உள்ளே செரிப்பது ஸித்தி
மழுங்கிய மனதிற்கு நன்றாய் உறைக்குமோ ஸித்தி
பழுத்திடும் பழங்களெல்லாம் இயற்கையின் ஸித்தி
வழுத்திடு தாளையெனில் வந்திடும் முத்தி
ஸித்தரவர் செய்வதெல்லாம் ஸாரம் ஸாரம்
பத்தி கொண்டு பார்த்துவிடில் ஆரம் ஆரம்
எத்திக்கும் செல்லாமல் நிற்றல் வேதம் வேதம்
வித்தையது கூறுவதோ குருவின் பாதம் பாதம்
ஸித்தி கண்டு வியப்புறுமே கூட்டம் கூட்டம்
ஸித்தியதை அறிந்தபேர்க்கு ஏது வாட்டம் வாட்டம்
பத்தியதை செய்துவிடு விலகும் மூட்டம் மூட்டம்
குத்தமிலா கர்மத்தால் வினைகள் ஓட்டம் ஓட்டம்
மண்ணெடுத்து கைகொடுத்தால் சந்தன மாகும்
கண்ணெடுத்துப் பார்த்தாலோ வினைகள் வீழும்
கண்மூன்று சிவனாரின் கோலம் கோலம்
மும்மூன்று வினையெல்லாம் மாளும் மாளும்
பெரியோரின் சொற்கேட்டு நடத்தல் வேதம்
அரிய ஸித்தி அனைவருக்கும் அன்பே தெய்வம்
புரிந்து கொண்ட பேர்களுக்கு மாயம் மாயம்
தெரிந்து கொள்ள தந்தேனே கவி பாயும் பாயும்
![]()




Users Today : 140
Users Yesterday : 188
Total Users : 46367
Views Today : 575