மனத்தகத்தே ஓர் கோயில்
பெரிய புராணம்
கோயில் கட்ட வேணுமென்று கருத்திலே நினைத்துமே
வாயில் நின்று வானளாவி நிற்கும் கலசம் கண்டரே
ஆயிரமாய் கல் கொணர்ந்து ஆளால் கட்டலாகுமோ
துயரமதை மனத்தில் கொண்டார் பூசலார் என்பவர்
அந்த நாட்டு அரசனும் ஆலயம் கட்டவே
சிந்தனை செய்துமே செயலிலே இறங்கினான்
விந்தையான கற்களை வேணமட்டும் கொணர்ந்துமே
சுந்தரமாய் மண்டபம் சூழ கோயில் அமைக்கிறான்
கற்களின்றி கோயிலை கட்டுவது எவ்விதம்
பொற்காசு வேண்டுமே பூசலார் வருந்தினார்
கற்களின்றி பொன்னுமின்றி கடவுளுக்கு ஆலயம்
சுற்றுகின்ற மனத்தகத்து சாற்றவே நினைத்திட்டார்
ஆயிரம் ஆனைகளை அனுப்பினார் மனத்தினால்
தூய்மையான பாறைகள் தூக்கி வர சொல்லிட்டார்
வேயும் கூரை பொன்னினால் விரும்பினார் மனத்திலே
சாயும் பொழுதில் திண்ணையில் சாய்ந்து கொண்டு கட்டுறார்
கரணமென்ற கொத்தனார் மனத்தின் பாறை வெட்டினார்
சரணம் வைத்த மனத்தின் நீரை சேர்த்து கலவை ஆக்கினார்
சுரணைகொள்ளும் ஐம்புல தூண்களை சமைத்திட்டார்
கரணையான வாக்கினால் சுடுசொல்லை சுரண்டினார்
ஆயிரங்கால் மண்டபம் அகத்தினுள்ளே அமைதிட்டார்
சாயந்திரம் ஆனபின்னும் சந்தி ஜபம் மறந்திட்டார்
காயத்தினுள் கடவுள் வைத்து கோபுரத்தை எழுப்பினார்
வாயிலுக்கு வந்து நின்று வியப்புடன் நோக்கினார்
சிவாய நம என்று சன்னதியை கட்டினார்
பவாய நம என்று பிராகாரம் படைத்திட்டார்
சர்வாய நம என்று சாற்றும் கொடி சுற்றினார்
பரபரப்பாய் வேலைசெய்து பொன்னாலே வேய்ந்திட்டார்
அன்னைக்கு சன்னதி அருளும் சண்டீசர் சன்னதி
பின்னாலும் முன்னாலும் பக்கலிலும் கோபுரம்
விண்ணை மிட்டும் அளவிலே வாய்கொண்ட நந்தியும் (மனக்)
கண்ணாலே கட்டினார் மாந்தர் காண வல்லரோ
வேதம் நான்கும் வாசல்படி தர்மப்படி படிகட்டினார்
காததூரம் ஓடுவார் கட்டியதை ரசிப்பாரே
சாதமுண்ண மறந்திட்டார் சிவனை என்றும் மறந்திலார்
சேதம் ஏதும் ஆனதா சிந்தை தன்னில் வருந்துவார்
மூலவரின் சன்னதியை முழுக்கவும் கட்டினார்
காலுயர்த்தி ஆடும் ஆட்டம் கற்பனையில் காணுவார்
மேலும் மேலும் கோபுரம் மனதில் திருப்தி கொண்டிலார்
நாலும் நாலும் எட்டு என்று நாட்களும் கடந்தது
வாணுயர்ந்து கோயிலும் மனத்தகத்து வந்தது
தூண்கள் கொண்ட மண்டபம் இதயத்தில் நின்றது
கண்கள் திறந்து கும்பத்தில் அபிடேகம் பாக்கிதான்
எண்கள் கூட்டி நாளை குறித்து மனத்தகத்து மகிழ்வுற்றார்
ஆங்கு அந்த அரசனின் ஆலயமும் முடிந்த்தது
இங்கிவர் குறித்த நாளை கொற்றவனும் குறித்திட்டான்
தூங்கி நிற்கும் தலைவனின் கனவிலொரு காட்சியாம்
சங்கரனாம் சிவனாரும் சக்தியோடு தோன்றினார்
“நின்றவூர் பூசலன்பன் நெடிதுனாள் நினைத்து செய்தான்
அன்றந்த ஆலயத்தின் அட்டபந்தம் ஆனதால்
உன்றன் கோயில் உற்சவத்தை வேறுபட்சம் கொள்”ளென்று
சென்றுரைத்து சென்று நின்றன் சிந்தை செய்த ஆலயம்
திடுக்கிட்டு எழுந்தனன் திருநின்றவூர் சென்றனன்
அடுக்கடுக்காய் ஆலயம் ஆங்கொன்றும் காணிலன்
விடுத்தனன் கேள்வியை பூசலன்பன் யாரென
உடுப்பில் ஓட்டை கொண்ட அந்த உத்தமரைக் கண்டனன்
ஆயிரங்கால் மண்டபத்தோடமைத்த ஆலயம் எங்கையா
வேய்த்திடும் கூரையோடு வேட்ட கோயில் ஏதய்யா
அய்யனவன் கனவில் வந்து அட்டபந்தம் மாற்றினான்
பையப்பைய கட்டிய பரமன் வாழ்வதெவ்விடம்
கேள்வி கேட்ட கொற்றவனை பூசலாரும் நோக்கினார்
ஆளுயர கோபுரம் அதோ கண்ணில் தெரியுது
மூளும் அக்னி சாலையில் மூலமந்திரம் ஒலிக்குது
கேளுங்கள் கேளுங்கள் கோயில் என் மனத்துளே
ஐயன் வந்து அமர்ந்துளான் ஆசையாயென் அகத்துளே
பொய்மை கொண்ட மனத்திலே புகவறியா பகலவன்
மெய்யினுள்ளே பொற்கோயில் மீளவும் அமர்ந்துளான்
வைத்திடுங்கள் அவன் பாதம் வேதசிகை கூறுதே
நவின்ற அந்த வார்த்தையை நாயகன் கேட்டனன்
புவிமீது வீழ்த்தனன் பூசலாரை போற்றினன்
அவியினிலே சிறந்த அவி பாட்டவியே என்றனன்
சிவிகையிலே அவரை ஏற்றி சிறப்புகள் செய்தனன்
பூசலாரை போல மாந்தார்காள் பூசைசெய்வதறிவீரோ
பூசலாரை போல கோயில் மனத்தில் கட்டவல்லீரேல்
ஆசையாக அந்த ஈசன் அகத்தில்வந்து அமர்வனே
மாசுயாவும் அகன்றிடும் மீண்டும் மண்ணில் பிறப்பரோ
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 66