வருவாய் வருவாய் குருனாதா

ஸ்ரீகுருபூஜை
வருவாய் வருவாய் குருனாதா
வந்தெனுளந்தனி லமர்ந்திடுவாய்
தினமும் சொல்வேன் உன்னாமம்
கணமும் மறவா வரம் தருவாய்
கர்ப்பக் க்ரஹத்தின் உள்ளிருக்கும்
கடவுள் தன்னை காட்டியவா
தன்னை அறிவதே முக்தியென்பாய்
உன்னைப் பணிவதே என் மோட்சம்
எதிரே இறைவி வந்தாலும் நீ
துதியென்றாலே துதித்திடுவேன்
கதியென காலைப்பிடிப்பதுவே
விதியாம் புதுவிதி நான் செய்வேன்
கோயில் மற்றும் குளமெல்லாம் உன்
வாயில் வருகின்ற வழியாகும்
தோய்ப்பது உந்தன் துணியெல்லாம்
வாய்ப்பதே எந்தன் வாய் மந்தரம்
வாயிலில் நின்றான் பண்டரியும்
தாயாம் தந்தையாம் உன் பணிசெய்வேன்
ஐந்தரை மணிசெய்யும் ஆவரணம் (நொடியில்)
பந்தத்தை போக்கும் உன் சரணம்
தானம் தர்மம் தலைகாக்கும் (உன்)
சன்னிதானமே என் தர்மம்
தாகத்தை தீர்க்க நீர் தருவேன்
அதுவே பதினாறு உபசாரம்
மலை மலையாய் மல்லிகைப்பூ (பாதம்)
தலையில் வைத்திட தரும் வாசம்
ஆவாஹனத்தை நானறியேன் ஆனால்
என்னில் உன்னை உள் வைப்பேன்
சஹஜ யோகம் வேண்டாவே உனை
அஹத்தில் அமர்த்திடல் பெரும் யோகம்
பிறவி போக்கும் பதம் வேண்டாம் மறு
பிறவியில் நீயே குருவாய் வரவேணும்
அந்தியில் செய்யும் சந்தியெலாம் உன்
உந்தியில் உணவை அளிப்பதுவே
வேத சாத்திரம் பலகோடி அவையுன்
பாதம் தொட்டால் மனதில் வரும்
ஆடிப்பாடும் அந்த கந்தர்வம் (அனைத்தும்)
அடிதொழ சடுதியில் தேர்வாகும்
அஸ்திரம் சஸ்திரம் தொடுப்பதெல்லாம்
வஸ்திரம் தோய்க்க அறிவில்வரும்
தோடகர் எந்தன் வழிப்பாட்டன்
பாடத்தை கேட்டிட ஏது நேரம்?

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments