வந்து மறைந்தனள்
(இறைக்காட்சி கண்ட பக்தனின் நிலை)
ஆங்கொரு நாளில் அந்தியின் பொழுதில்
பங்கய கண்ணாள் பக்கலில் வந்தனளே
இங்கிவள் யாரெனெ எவரும் வினவினால்
சங்கை நீக்கிட வந்தனள் அவளென்பேன்
எங்கிருந்தாள் அவள் எப்படி வந்தனளோ
சிங்கத்தின் மேலவள் அமர்ந்து வந்தனள்
தங்கனகை தன்னை தரித்தே வந்தனள்
மங்கிய என்மனம் மலர்ந்திட வந்தனளே
பட்டாடை சிவப்பினில் பராசக்தி வந்தனள்
கட்டங்கள் தொலைந்து கருத்தும் வந்ததுவே
இட்டமெலாம் பூர்த்தி ஆகிடும் என்றுநவின்றனளே
துட்டாசுரர்கள் தூரவிலகுவர் தாயவள் முன்னேயே
பாசம்கை கொண்டு பாவத்தை தொலைத்தனளே
வாசனை எல்லாம் விரைவில் மங்கியதே
பூசனை செய்வாய் பூசலார் போலென்றாள்
நாசமாகின என்வினை எல்லாம் நாசமாயாகினவே
தலையிலே கிரீடம் திருவென தரித்தனளே
மலைமலையாக மேவும் பிறப்புகள் போயினவே
சிலையில்லை சிலையில்லை சின்மய உருவினளே
கலைகள் அனைத்தும் ஒருங்கே இணைந்தனவே
தாயவள் சரணத்தை தன்மனம் கொண்டால்
போயபிழையும் விட்டுப் போகிடும் போகிடுமே
மாய மனதே மருளும் மனதே
சாய்ந்திடு சரணத்தில் சாய்ந்திடு சாய்ந்திடுவாய்
துட்ட மனமதில் தரணியும் தெரிந்திடவே
காட்சியும் சட்டென மறைந்து மறைந்ததுவே
ஆட்சி செய்தவள் எவ்விடம் சென்றாளோ
வட்டத்தில் சுழன்றியே வாழென்று உரைத்தனளே
திரும்பவும் வருவாள் தீஞ்சொல் மொழியாள்
பொறுமையாய் இருந்திடு போக்கிடம் வேறில்லை
பாரினை மறந்து பரத்தினில் நின்றிடுவாய்
வேறொருநாளில் வேடம் தரித்தவள் வருவாளே
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 481