ஜயசக்தி.
துறப்புப் பாடல்
(ஆதாரம் : நிர்வாணாஷ்டகம், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள்)
நீரைப்பாய்ச்சி நிலத்தை வளர்த்தேன்
நெல்லோ எனதல்ல
சாரைப்பிழிந்து சக்கரை எடுத்தேன்
இனிப்பும் எனதல்ல
புரையை ஊற்றி பாலைக் கெடுத்தேன்
தயிரும் எனதல்ல
தரையை மெழுகி சாணம் இட்டேன்
தூய்மை எனதல்ல
பருத்தியை வளர்த்து நூலை நெய்தேன்
புடவை எனதல்ல
விருத்தம் எழுதி ஆயிரம் நூல்செய்தேன்
கவிஞன் நானல்ல
நருத்தனம் ஆடும் நங்கையைக் கண்டேன்
கலையும் எனதல்ல
விருத்தரும் ஆவார் பாலர் என்றார் அந்த
சித்தியும் எனதல்ல
சந்தம் பலகொண்டு சாத்திரம் செய்தேன்
சூதரும் நானல்ல
சிந்தையில் சேதியை சந்ததம் கொண்டேன்
மனதும் நானல்ல
நிந்தையும் நன்மையும் நாளும் பேசுவேன்
நாவும் நானல்ல
பந்தயக் குதிரையாய்ப் பாய்ந்து செல்வேன்
பாதமும் நானல்ல
கைவினை ஆற்றி கடமையைச் செய்வேன்
கரங்கள் நானல்ல
சாவினை எதிர்கொண்டு சக்கரம் சுழல்வேன்
ஊழ்வினை எனதல்ல
கோவிலைச் சுற்றி கும்பிடு போடுவேன்
பக்தனும் நானல்ல
தூவியே மலரை தோத்திரம் செய்வேன்
பூசனை எனதல்ல
அன்புடன் பேசும் அகத்தின் துணை கொள்வேன்
அவளும் எனதல்ல
இன்முகம் கொண்டு ஈஷணை தந்திடும்
புத்திரன் எனதல்ல
பன்முகம் கொண்டு பாசத்தைக் கொட்டும்
பந்தங்கள் எனதல்ல
துன்பங்கள் தந்திடும் தூக்கத்தில் வீழ்ந்திடும்
நோயுடல் எனதல்ல
பின் நான் யார்? எனது எது?
நானல்ல எனதல்ல என்றே பேசும் வேதம் பொய்யாமோ
ஊனல்ல உயிரல்ல உண்மைப் பொருளென்னும்
உபனிஷத் பொய்யாமோ
கனவிது காட்சியாம் கருத்தில் அழியெனும்
கீதையும் பொய்யாமோ
மனதிது மாய்கை மெய்யிது பொய்யெனும்
மதமது பொய்யாமோ
என்றும் நிலைத்திடும் ஏகாந்தமான இறைவன் யானாவேன்
கன்றுக்கூட்டும் கருணைப் பசுபோல்
கடவுள் யானாவேன்
தென்றல் போல தண்மையைத் தந்திடும்
தெய்வம் யானாவேன்
கொன்றை மலரை சென்னியில் தரித்திடும்
கொற்றவை யானாவேன்
குணங்கள் எட்டு கொண்ட இறைவனின்
குணமும் எனதாமே
கணங்கள் தோறும் காட்சிகள் மாறும்
திரையினை போட்டேனே
கணகணவென்று மணிதனை அடித்து
அசுரனை அழிப்பேனே
உணவினை செரிக்கும் ஊனுள்ளே அக்கினி
ஓங்காராம் நானாவேன்
சிவனும் நானே சக்தியும் நானே சகலமும் நானாவேன்
பவனும் நானே பத்தினி நானே பிறவேன் இனி நானே
தவத்தை செய்யும் முனிவன் நானே தத்துவம் நானாவேன்
அவத்தை கடந்த அறிவும் நானே ஆதியும் நானாவேன்
ஓம் சக்தி!
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 112