(வைராக்கிய தசகம்)
இன்பம் தேடி வெளியிலே பெரும் ஏக்கமாக அலைவரே
இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிகிலார்
இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிந்திடில்
துன்பம் யாவும் அகன்றிடும் தூய்மை உள்ளம் ஆகுமே. – 1
பண்டு வாழ் முனிகள் சொன்ன பாதை நேராய் நிற்குதே
ஆண்டு அதை சேராது சோர்ந்து போவார் சகத்திலே
பண்டு வாழ் முனிகள் சொன்ன பாதை நேராய் சென்றிடில்
மீண்டும் மண்ணில் பிறப்பரோ மேதினியும் மறையுமே. – 2
வேதாந்தம் பேசுவோர்கள் வீண்சோம்பரென்று கூறுவார்
வேதாந்தம் என்பதிங்கே வேதத்தின் சிகையலோ
வேதாந்தம் என்னவென்று உண்மையினை உணர்ந்திடில்
வேதாந்தி அவருமிங்கே விவேகம் கொண்டு வாழுவார். -3
தங்கை வாழ்க்கை வாழவென்று தங்கம் வெள்ளி தேறுவார்
கொங்கை நங்கை பாகரை கும்பிட்டு வாழ்ந்திட
தங்கை வாழ்க்கை தங்கமாய் சொலித்திடும் சொலித்திடும்
இங்கும் அங்கும் ஓட்டமேன் ஈசன் துணை நிற்பரே. – 4
குட்டி போடும் வட்டியென்று வங்கி கணக்கில் போடுவார்
பட்டை நாமம் போட்டு வங்கி பாதியிலே போகுமே
சட்டை நாதர் சன்னதியில் சின்ன காசை வைத்திடில்
கட்டை வேகும் போதிலே கணக்கு போட்டு காக்குமே. – 5
மனைவி மக்கள் வாழவென்று மனையில் வீடு கட்டுவார்
கனவு போல காலம் ஓடி கடைசி நாட்கள் வந்ததும்
வனத்தைப்போல விருத்தரின் குடிசை வாழ்க்கை ஆனதே
மனத்தை மாதர் பாகரின் மேலே வைத்தால் மகிழ்ச்சியே. -6
பிரண்டை ரசம் வைப்பாய் என்று பத்தினியை கூறுவார்
திரண்டு உடல் திடமுமாக தினம் பயிற்சி செய்குவார்
உருண்டு போகுமிவ்வுடல் உற்ற காலன் வருகையில்
இருண்டு போகும் முன்னர் ஈசன் இணையடியைத் தொழுமினே. – 7
பிள்ளை பெண்டிர் சுற்றம் எல்லாம் பேணிக் காத்து நிற்பரே
கள்ளத் தோணி ஏறி வந்து காலன் முன்னிற்கையில்
பிள்ளை பெண்டிர் சுற்றம் வந்து பிரான் பெயர் கூறுமோ
உள்ளம் தன்னில் உமையினை உருவேற்றி வைப்பீரே. -8
கருமம் செய்வான் என்று எண்ணி கொள்ளுப் பேரன் கொஞ்சுவார்
கருத்த பிள்ளை காலன் வந்து காலடியில் நிற்கையில்
தருமம் அன்றோ காத்திடும் தாயாதி துணை வருவரோ
மருமம் தன்னை உணர்ந்தபேர்க்கு மண்ணில் என்றும் பேரலோ. -9
கண்ணில் தூசு விழுந்திட்டால் காதில் தேடலாகுமோ
மண்ணில் நிலையாய் வாழ்ந்திட மக்கள் பெறலாகுமோ
எண்ணம் தன்னில் இறையினை இருத்தி வைத்து வணங்கிடில்
கண்ணில் விழும் காட்சியை கருத்தாய் காணலாகுமே. -10
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 102