வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா?
கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்?
மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி
பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார்
தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை
காசுபணம் கூடவரா கேளிர் வருவார்
ஏசிடவா இவ்வுலகில் பிறந்தோம் நாமே
கூசுதடா கவிதைக்கும் கட்டணம் உண்டோ
அன்பு செய்தால் போதுமப்பா அதுவேசெல்வம்
இன்புறவே இவ்வுலகு தந்தான் இறைவன்
துன்பத்தில் வீழ்வாயே விற்பனை செய்தால்
அன்பகத்தில் இருந்து விட்டால் ஆனைபலமே
மாம்பழம் விளைகிறது மண்ணில் நன்றாய்
ஆமதற்கு விலை வைத்தோர் நிலக்கிழாரே
மரமவரைக் கேட்கிறதா வீசை எதுவும்
தரமான மண்ணிருந்தால் தானே விளையும்
இன்னிசையால் இவ்வுலகில் இன்பம் மேவும்
தன்னிசைக்கு பேசுகின்றார் தூக்கும் விலையை
பண்ணிசைக்கும் பறவையினம் பணமா கேட்கும்
நுண்ணிசையாம் விலை வைப்பார் நூறுனூறாய்
இலட்சமாய் பாடினின்றார் புரந்தர தாசர்
விலைகேட்டா அருள்செய்தான் பண்டரி நாதன்
கலைக்கிங்கே காசுபெற்றால் கற்பனை வருமோ
அலைவீசும் கடற்காற்று தடையா சொல்லும்
தியாகேசர் பாட்டிசைத்தார் திருமால் வந்தான்
மாயம்மா பாடினின்றார் மனதில் வந்தான்
தோய்ந்திடும் அன்பிற்கே தெய்வம் தோன்றும்
வாயிலிலே கட்டணத்தை வைத்தால் நகரும்
கண்ணில்லா சூர்தாசர் கண்ணனைக் கண்டார்
கண்ணிருந்தும் நம்முன்னே ஏனோ வரலை
பண்ணிசைக்க பலகோடி பேசி நின்றால்
என்னெதிரே கண்ணனுக்கு வரவா தோன்றும்
ராமா க்ருஷ்ணா என்று சொன்னால் நாவினிக்கும்
இனிக்காமல் கசந்துவிடும் விலையை வைத்தால்
மனிதரே மனம்தன்னில் இராமனைப் பாடு
இனியேனும் விழித்துக்கொள் இன்னல் தீண்டா
பகவானே போக்கிடுவாய் என்மனதில் பணத்தினாசை
தக்கவன்தான் தீர்த்துவிடு தனத்தில் மோஹம்
வக்கனையாய் கவிபாடும் வரத்தை அருள்வாய்
தக்கணை ஏதும்வேண்டாம் துதியைச் செய்ய
போதுமப்பா போதுமப்பா பணத்தில் ஆசை
காதினிக்க கவிபாடும் வரத்தை அருள்வாய்
மேதினியில் பணத்தாலே என்றும் துன்பம்
சாதிஞ்சநெ இசைக்கவென் காதினிக்க வேண்டும்
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 24