ஸ்ரீமத் பாகவதத்தின் தேன் துளி சில கவிதைத் துளிகளில்……
(தெளித்தோன் : நாகசுந்தரம்)
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
தரமில்லை தத்துவ மில்லை நெஞ்சில்
உரமில்லை ஊத்துக்காட்டார்போல் பாட்டில்
சுரமில்லை சூக்குமமில்லை சுந்தரவதனா
வரமில்லையென்று வஞ்சனை செய்யாமல்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
வெண்ணையில் பக்ஷணம் வேணது தருகிறேன்
மண்ணை உண்ண வேண்டாம் மணிவண்ணா
திண்ணையில் அமர்ந்து ஆசைதீரத் தின்பாய்
விண்டுரைத்து வேதம் உரைக்காத என்மீது
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
காளிங்கன் தலைமேல் கூத்தாடினாயே தகுந்த
ஆளில்லை இவனென்று அகன்று விட்டாயோ
தோளியர் மேல்வைத்த காதலுன்மேல் திரும்புதே
வேளியனும் உன்னைக் காண வேடமிட்டு வந்தாரே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
பொன்னும் மணியும் பூவையரும் சதமென்று
கண்ணும் கருத்துமாய் காத்து வந்தேனே
மின்னுதெல்லாம் பொன்னல்ல என்றறிந்தேனே
இன்னும் தாமதம் ஏனென்று தெரியவில்லை
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
யசோதை போலொரு யக்ஞம் நான் செய்யவில்லை
ஆசையாய் அருகில் வந்து அந்த வெண்ணெய் தரவில்லை
பாசமுடன் கோபியர்போல் புக்ககத்தை துறக்கவில்லை
மோசம் போனேனோ முழுவதும் அறியவில்லை
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
ஊழிப்பெருவெள்ளம் போல் ஓங்கி மழை பொழிய
தாழிவெண்ணெய் தின்று தாங்கினாய் திருமலையை
ஊழென்மீதின்னமும் தீர்ந்திட வில்லையா
வாழ்வை உன்னிழலில் வைத்து விட்டேனல்லவா?
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
அன்னை வேடமிட்டு அரக்கி அருகில் வர
ஊனை உறிஞ்சி உலகை விட்டனுப்பினாய்
மனமென்னும் பூதனையாய் மண்ணில் ஆசை வைத்தேனே
மன்னும் காமக்ஷீரம் உறிஞ்சி அழிப்பாயே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
உருண்டு சக்கரமாய் உன்னை அழிக்கவர
உருத்தெரியாமல் அழித்தாய் உருண்டான் சகடாசுரன்
கருப்பொருள் ஏதுமின்றி காலமெல்லாம் சுற்றி வரும்
விருத்தன் என்மீதுன் விழியது விழவில்லையா?
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
ஆனிரை கவர்ந்தானே ஆலயம் இல்லாதோன்
மானிற வண்ணா மதியைத் தருவோனே
ஊனிதற்கு மதியை உண்மையாய் எழுதினான்
மேனி விழுமுன்னே மாற்றி எழுதிடுவாயே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
பாம்பைப் போலரக்கன் பாய்ந்து வந்தானே
தேம்பி அழவிடாமல் துணைவர்களைக் காத்தாயே
நம்பி வந்தேன் உன்னடியை தயவு காட்டிடுவாய்
பாம்பென்னும் சம்சாரம் பாய்ந்துண்ண வருகுதே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
கரைமேல் துணியை காயப்போட்டு வைத்தார் கோபிகள்
மறைத்து வைத்தவரை மாயையில் மூழ்க்கினாய்
உரைத்துப் பார்த்தாலுண்மை என்னென்று தெரியுதே
மறைத்து வைத்ததெல்லாம் மறுகும் அஹங்காரமே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
யமுனைக் கரைதனில் யாமத்தில் வருகவென அன்பு
கமழும் கோபியரை கட்டளை இட்டழைத்தாயே
குமுறும் எந்தன் மனம் கரையேற்ற அழைப்பாயோ
அமிழ்ந்து அவனியில் ஆழ்வேனோ அறியேனே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
புண்ணியம் செய்ததுவே புனலான யமுனையும்
பெண்ணியம் போற்றிய பெம்மான் நீ அல்லவோ
கண்ணியமாகவே கடமை ஆற்றுகின்றேன்
விண்ணப்பம் ஏற்றென்னையும் கடைத்தேற்ற
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
மதுரை மாநகரில் மெல்ல மெல்ல நீ நடக்கையில்
பதீத பாவனனாம் பரந்தாமன் உன்னைக் கண்டார்
க்திவேறில்லையப்பா கடவுள் நீயேயப்பா
விதிமாற்றி எந்தனுக்கு விவேக மருள்வாயே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
கோணல் நிமிர்த்திய கோபால எந்தன் மனக்
கோணலும் நிமிர்த்துவாயே நான் குழந்தை அல்லவோ
மணலை உண்ட வாயில் மேதினியை காட்டினாயே
தணலைபோல் தகிக்கும் தாபத்தை தணிப்பாயே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
குவலயாபீடத்தை குனிந்து அடித்தாயே
கவலையால் குமுறும் எந்தனைக் காப்பாயே
திவலையும் தர்மத்தை காப்பேனோ அறியேனே
சவலையால் உனைக் காணாது வாடும் என்மீது
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
தாமதம் செய்யாமல் தீமையை அழிக்க
மாமன் கம்சனை மடிமீது கொன்றாயே
சாமத்தில் எழுந்துன்னை சோத்திரம் செய்கிலேன்
காமத்தில் வீழாமல் காத்திடுவாய் இன்றே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
அன்னை தந்தையினை மீட்டுவந்தாய் சிறையைவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டு கவலையெல்லாம் தீர்த்து வைத்தாய்
சன்மம் தந்தவரை சுதந்திரமாய் சுற்ற வைத்தாய்
சன்மம் எடுத்த என்னை சத்தியத்தில் தோய்ப்பாயோ
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
அக்ரூரரை அழைத்து அந்த கோகுலம் செல்ல வைத்தாய்
விக்கித்து நின்றாரே அக்கோபியரின் அன்பதனில்
பக்திக்கு பின்னேதான் முக்தியென்று அறிந்தாரே
தக்கார் யானில்லையென தயங்கி நிற்பதேனோ
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
தேரில் கவர்ந்து வந்தாயே திருமகளாம் ருக்மிணியை
பாரில் பழிபாவம் சுமந்தாயே சியமந்த மணியதனால்
பாரினிலே ஜாதியை வீழ்ந்திடவே செய்தாயே (பாரிஜாதம்)
பாரினிலே உறவெனக்கு பார்த்தனின் சாரதியே
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
பாரதத்தின் கதையது பாரெல்லாம் அறியுமே
சாரதியாய் வேலைசெய்து சாதித்தாய் தர்மத்தை
சாரமான கீதையை சீவனுக்கு சொன்னாயே
பாரமென்று என்னையும் பார்க்காமல் இருப்பையோ
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
துரியோதனன் தனக்கும் தரிசனம் தந்தாய் நீ
பரிவுனகென்மீது இல்லையா புரிபடவுமில்லையே
விரிவாய் என்ன சொல்வது வியப்பாக உள்ளதே
துரிய நிலை அடைந்திட தோத்திரம் செய்கிறேன்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
போர்முடிந்து போயினரே பரலோகம் அனைவருமே
கார்முகில் வண்ணனே உன் காலில் அம்பு தைத்ததே
மார்பில் அந்த இலக்குமியை மீளவும் கொண்டாயே
சோர்வுற்று இருக்கும் என்னை ஒரு க்ஷணம் பார்ப்பாயோ
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல் நீல வண்ணக்
கண்ணா உனக்கென்மேல் கரிசனம் உண்டோ சொல்
கோவிந்தா என்று சொன்னேன் கோடிவினை அகன்றதுவே
பாடியுந்தன் பாகவததை பரவசமும் அடைந்தேனே
கூடியுன்னை பஜிப்போமே (கீத)கோவிந்தம் பாடுவோமே
வாடினின்றும் எம்மிடம் வாஞ்சை உனக்கு உள்ளது
கண்ணா உனக்கென்மீது கரிசனம் மிகவுண்டறிவேன்
பண்ணாய் பாடவைத்தாய் பாக்களில் நீயே உள்ளாய்
கண்ணா உனக்கென்மீது கரிசனம் மிகவுண்டறிவேன்!🙏💐
சுபம் !
முற்றிற்று!
![]()

Users Today : 23
Users Yesterday : 88
Total Users : 58599
Views Today : 203