வேரை மறந்த விழுதுகள் !
(முதியோர் நலம்)
பத்துமாதம் சுமந்து நம்மை பாதுகாத்து வளர்த்தவர்
முத்தே மணியே என்று நம்மை முத்தம் தந்து மகிழ்ந்தவர்
அத்தனையும் மறந்து விட்டு பித்து பிடித்து விட்டதென்று
சத்திரத்தில் சேர்த்துவிட்டு சாத்திரத்தை மறப்பரே !
விடுதலைக்கு வேராக விளங்கினரே பலருமே !
துடுப்பு போட்டு சுதந்திரம் தோதாக தந்தவர் !
விடுப்பு தர வில்லை என்று சுட்டிடவோ சுதந்திரம் ?
பாடம் தன்னில் அவர்பெயர் போனவிதம் எவ்விதம்
தாய் வயிற்றில் சுமந்தவர் ! தந்தை தோளில் சுமந்தவர் !
வாயும் வயிறும் வேறானாலும் வாய்க்கு ருசியாய் தந்தவர் !
சாய்ந்த கொள்ள சுகம் வரவும் மாய்கை வந்து மறைத்ததோ?
நொய்ந்து போன மனத்துடன் நாளை அவர் கடப்பரோ ?
தொங்குகின்ற விழுதுகள் தொலைத்ததுவோ பாதையை ?
அங்குமிங்கும் அலைந்தலைந்து ஆதிவேரை மறந்ததோ ?
மங்கிடாமல் மண்ணிலே மீண்டும் வேராய் ஆகிட
பங்களித்த பெற்றோரை பாதுகாக்க வேண்டுமே !
நல்ல மனம் கொண்டு நம்மை நலம் பெறவே வைத்தவர்
அல்லவற்றை அகற்றி நம்மை ஆற்றல் பெற வைத்தவர்
கல்வியும் கலைகளும் கரை காண வைத்தவர்
தொல்லைஎன்று இல்லத்திலே துரத்திட மனம் இயலுமோ?
வேண்டுமென்றால் ஓர் வகை வேண்டாமென்றால் பெரும் பகை
ஆண்டவனாய் அவரிருக்க அர்ச்சனைக்கு ஏன் தொகை?
வண்டியிலே ஓர் இருக்கை வழி விடுமோ சனத்தொகை ?
மண்டிவிட்டதோர் சுமை என மனதிலே ஏன் நகை ?
மின்னணு அட்டையாலே மிகவே பொருள் வாங்கலாம் !
தன்னை பெற்ற தாயாரின் அன்பை அட்டை தாருமோ ?
அன்னை தந்தை கடவுளென ஆசி பெற்றால் போதுமே !
பண்ணை வீடும் வேண்டுமோ பசி துறந்தால் போதுமே !
நாய்கள் கூட சோறுவைத்தால் நன்றியோடு வாலாட்டும் !
பேய்கள் கூட பூசை செய்தால் பக்கம் விட்டகன்றிடும் !
நோய்கள் உடலில் வந்தபோது நாற்றம் என்று அகன்றிடும்
நேயமில்லா மக்களை எந்த பெயரில் அழைப்பதோ?
காலை தினம் வணங்கிவிட்டால் காட்சி நன்றாய் மாறுமே !
தோள் சுமந்த மனிதரை பின் தன் மனதில் சுமப்பமே !
நாள் நகர்ந்து விட்டன ! நமக்கும் நரை வந்திடும் !
கள்ளமின்றி மனத்தை வைத்து காத்திட்டால் போதுமே !
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 62