தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை
நன்றிக்கடன்      (இறைவன் நமக்கு)
கொடுப்பதற்கு கை கொடுத்தான்
நடப்பதற்கு கால் கொடுத்தான்
காண்பதற்கு கண் கொடுத்தான்
பூண்பதற்கு பொன் கொடுத்தான்
நினைப்பதற்கு மனம் கொடுத்தான்
நனைப்பதற்கு நீர் கொடுத்தான்
சொல்வதற்கு வாய் கொடுத்தான்
வெல்வதற்கு வாள் கொடுத்தான்
வாழ்வதற்கு பார் கொடுத்தான்
உழுவதற்கு நிலம் கொடுத்தான்
நிமிர்வதற்கு தலை கொடுத்தான்
அமர்வதற்கு மனை கொடுத்தான்
ரசிப்பதற்கு இசை கொடுத்தான்
ருசிப்பதற்கு பழம் கொடுத்தான்
மணப்பதற்கு மலர் கொடுத்தான்
மணப்பதற்கும் பெண் கொடுத்தான்
அனுப்பதற்கு மடல் கொடுத்தான்
அணைப்பதற்கு உடல் கொடுத்தான்
எண்ணுதற்கு எண் கொடுத்தான்
விண்ணிலேற விமானம் கொடுத்தான்
அன்புசெய மகள் கொடுத்தான்
வன்மையுடை தோள் கொடுத்தான்
பாட்டிசைக்க பொருள் கொடுத்தான்
மீட்டிசைக்க யாழ் கொடுத்தான்
பெய்வதற்கு மழை கொடுத்தான்
காய்வதற்கு கொடுவெயில் கொடுத்தான்
வெய்யிலுக்கு மரனிழல் கொடுத்தான்
உய்வதற்கு உபனிடதம் கொடுத்தான்
பிறப்பதற்கு உயர்தாய் கொடுத்தான்
கறப்பதற்கு காராம்பசு கொடுத்தான்
செலவிற்கு செல்வம் கொடுத்தான்
நிலவிற்கு தண்மை கொடுத்தான்
அளவிற்கு அதிகமாய் அவனும் கொடுத்தான்
உளமாற அவனுக்கு நீ எதை கொடுத்தாய்
பகை கொடுத்தாய் பாரில் புகை கொடுத்தாய்
வகைவகையாய் வதை கொடுத்தாய்
மரம் வெட்டி நன்னிழல் கெடுத்தாய்
சிரம் உயர்த்தி சினம் கொடுத்தாய்
பெற்றோரை பேணாது பயம் கொடுத்தாய்
உற்றவரை ஏசியே நலம் கெடுத்தாய்
கர்வமிக தான்கொண்டு தனம் கொடுத்தாய்
வர்மமது மனம்கொண்டு வன்மை கொடுத்தாய்
சாதிசனம் வேறென்று இனம் பிரித்தாய்
மேதினியில் மதம்பலவும் மாற்றி விட்டாய்
ஆதியிலே சொந்தமான அவன் தாள் மறந்தாய்
பாதியிலே வந்தபகை குணம் கொண்டாய்
நன்றிக்கடன் பட்டோம் நானிலத்தீரே
அன்புடனே சிறு மலரை அவன் பாதம் போட்டால்
கனிவுடனே ஏற்றிடுமே கருணை தெய்வம்
மனிதனே உனக்கெதற்கு வீணாய் கர்வம்

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments