குரு காட்டுவார்!
வேட்டைக்காரனுக்கு வனம் கண்டு பயமில்லை
மாட்டை அடக்குவோற்கு கொம்பிலே பயமில்லை
வீட்டினுள் இருக்கையிலே வான்மழை பயமில்லை
தேடுமொரு சாதகன் நான் மனம் கண்டு பயமில்லை
தேடுபொறி கூகுளிலே தேடாதே மந்திரத்தை
வீடுதேடி வருவாரே வித்தகராம் குருநாதர்
தேடும்பொருள் மந்திரத்தை திருவாயால் தருவாரே
கூடுதற்கு குருவைவிட்டால் காட்டுவார் எவருமிலை
தேனான மந்திரத்தை தினம்தினம் செப்பென்பார்
வானான வானுக்குள் வீசிடும் அவரின் ஒளி
மானாய் அலையும் மனம் மந்திரத்தால் கட்டுபடும்
சேனாபதியாகி சுற்றும் வினை சுட்டுவிடும்
அருட்சக்தி என்ற பெயர் அவர்குருவும் தந்துவிட்டார்
அருட்சக்தி அவரும் நம் அஹங்காரம் அழித்துவிட்டார்
இருட்டினிலே ஏன் மயக்கம் இதயத்தில் ஒளியிருக்க
பொருட்டல்ல போகும் வினை அருகினிலே அவரிருக்க
தனித்திருந்து பசித்திருந்து திரும்பியுள்ளே பார்த்துவிடு
கனியை விட இனிப்பொன்று கடவுளாக கிடக்குதுள்ளே
பனிவாழும் பரமசிவம் பக்கத்திலே வந்துனிற்க
இனியென்ன தாமதமோ இற்று விழும் காமனையும்
காமத்தின் ஈசனவர் கண்ணெதிரே வந்து நிற்க
காமத்தின் கொட்டெமெலாம் கடுகேனும் எடுபடுமோ
சாமத்தில் எழுந்திருந்து சன்னதியில் பூசைசெய்ய
சேமத்திற் கென்னகுறை செகமெல்லாம் மகிழ்ந்திடுமே
பதுமத்தின் விளக்கத்தை பதமாக அவர்சொல்ல
அதமமான பேர்களுக்கும் ஆவாஹனம் புரியும்
இதமான காற்றினிலே இன்பமது கிடைப்பதுபோல்
விதவிதமாய் விரித்துரைக்க செவியின்பம் நமக்கிங்கே
சினம் வரும்தான் மறுக்கவில்லை, சீரான செயல் துறந்தால்
அனவரதம் அவருக்கு அவர் குருவின் நினைவேதான்
இனமதிலே இணைந்து விட்டோம் இனி நமக்கும் அதுவேதான்
கனமான பொருள் மனந்தான் அருட் கிணற்றினிலே அமிழ்த்திவிடு
வெளிசெயலை கண்டு மனம் மாறிடத் தேவையில்லை
உளிகொண்டு செதுக்கயிலே கல்லினுள்ளே உயிருண்டு
பளிங்குபோல் மனமிருந்த்தால் பார்ப்பதற்கு மிக அழகு
களித்திடும் மனமவர்க்கு காதிவித்தை ஜபிக்கையிலே
இன்றைய நாள் மிக இனிமை ஏற்றமிகு பிரதிஷ்டையினால்
என்றுமே அதற்கு பூசை பூசலாரைப் போலச் செய்வோம்
மன்றுவாழ் மகாதேவி மேருக்குள் புகுந்து விட்டாள்
நன்றுதான் நானங்கில்லை நினைவென்றும் மாறவில்லை
மேருக்குள் இறைவி உள்ளாள் மேதினி அறிந்த உண்மை
தேருக்குள் தலைவி உள்ளாள் தரணியும் அறிந்ததுதான்
ஊனுக்குள் இனிக்கும் உண்மை பொருளாருக்கும் புரிந்திடுமோ
தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்புதானோ
குரு வந்தார் குணம் தந்தார் குற்றமெலாம் காததூரம்
இரு என்றார் தத்துவத்தில் ஆறத்துவா கடக்க வைத்தார்
பிறகென்ன செய்வதிங்கே பார் கண்ணில் மறைந்ததப்பா
உறவென்ன பகையென்ன உள்ளுக்குள் ஒன்றே பிரம்மம்
பொழுதும் விடிஞ்சாச்சு புலபுலவென புலர்ந்தாச்சு
அழுகை மறைந்தாச்சு அன்புமனம் நிறைஞ்சாச்சு
தொலைதூரம் இருந்தாலும் மனமிங்கே மறைஞ்சாச்சு
சிலையாக இருந்ததெல்லாம் சின்மயமாய் ஆயாச்சு
சின்மயப் பூஜை செய்ய சீராக மனமாச்சு
என்னெதிரே நிற்பதெல்லாம் ஏற்றமிகு குருவாச்சு
விண்ணதிர வேதகோஷம் காதினிலே விழலாச்சு
கண்ணதிர குருபாதம் காட்சியிலே வரலாச்சு
திரிபுரையின் ஸித்தாந்தம் சந்ததமும் மனதாச்சு
சிரியான சக்கரத்தில் சின்மயியும் சேர்ந்தாச்சு
சரியான பிரதிஷ்டை சென்னையிலே நடந்திருக்க
திரிபோட்டு விளக்கேற்றி என்மனதில் ஒளியாச்சு
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 68