வியக்கின்றேன் விடைதருவாய்
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
பாரும் நீரும் பரந்த வெளியும்
பாரும் பாரும் உலகத்தோரே
மணத்தை வீசும் சந்தனக்கட்டை
கணக்கும் மரங்கள் காணுங்கள்
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
தீயின் வெம்மை தகிக்கும் வெய்யில்
மேயும் மான்கள் மலரும் பூக்கள்
தாயின் உள்ளே சேயின் படுக்கை
மாயை என்றே தள்ளத் தகுமோ
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
நதியும் கடலும் நாணும் பெண்ணும்
உதிக்கும் நிலவும் உண்ணும் உணவும்
மிதிக்கும் காலும் மேவும் விரலும்
எதிலே செய்தாய் இறைவா அறியேன்
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
கண்ணில் பாவையும் விண்ணில் வில்லும்
மண்ணில் காயும் மரமும் இலையும்
எண்ணிலா விண்மீன் இதமாய் தென்றல்
நுண்ணிய முறையில் எதனால் செய்தாய்
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
மனதில் மகிழ்வும் மரணித்தால் துக்கமும்
சினமும் சீற்றமும் செய்தது எதனால்
கனமிகு மாயையால் கிட்டியதிதுவோ
எனதுனதென்னும் அகந்தையால் ஆனதோ
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
விண்ணில் பாயும் விசையினை செய்வார்
கண்ணில் காணும் காட்சியை செய்வரோ
எண்ணிலா மின்னியல் இயக்குதல் செய்வார்
நுண்ணிய செந்நெல் நிலமதில் செய்வரோ
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
படைத்தாய் காப்பாய் பலவிதம் செய்வாய்
உடைப்பாய் உண்பாய் உயர்நிலை நின்றாய்
வடையும் தேனும் வாகுற படைப்பேன்
விடைதந்தெனக்கு வேதப்பொருள் தா
பரமா உன்னை துதிக்கின்றேன்
படைப்பை எண்ணி வியக்கின்றேன்
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 73