மெய்ஞானவேட்கை என்கிற ஆன்மபோதம்
(ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்)
பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம்
சித்தனடா சிவனைபோல் சித்தம் சித்தம்
சுத்தனடா சொரூபத்தின் மொத்தம் மொத்தம்
முத்தனடா முக்தி நிலை முழுதும் பெற்றோன்
பிறப்பில்லை என்று சொல்லும் வேதம் வேதம்
இறப்புமில்லை எதுவுமில்லை எல்லாம் மாயம்
குறவனைப்போல் குவலயத்தில் நடப்பான் நில்லான்
உறவில்லை ஒட்டுமில்லை கைஓடும் இல்லை
நேற்றிருந்தேன் இன்றுள்ளேன் நாளை நிற்பேன்
குற்றமில்லா குருபாதம் உண்மை உண்மை
பற்றில்லை பசையில்லை எல்லாம் பந்தம் பந்தம்
சுற்றி சுற்றி வரும் காலை அது சர்ப்பம் சர்ப்பம்
செய்ததுவும் மீதமதும் போச்சே போச்சே
உய்வதற்கு வேறு வழி காணலாச்சே
பெய்கவென பெய்யும் மழை பத்தினிப்போல்
ஐயமற ஐந்தும் ஓதி அறியலாச்சே
அஞ்ஞானம் என்பதுவும் குப்பை குப்பை
மெய்ஞான புலம்பலது செம்மை செம்மை
கையாலே மலரெடுத்து அம்மை அம்மை
தாயவளின் அடியினிலே சேர்த்தால் நன்மை
விஞ்ஞான விளக்கமெல்லாம் போதும் போதும்
மெய்ஞ்ஞான விளக்கதுவே ஒளிரும் ஒளிரும்
கைம்பெண்ணின் கதைபோல மெய்மை மெய்மை
கைவிட்டு போனதடா மாயை மாயை
தேடிடடா தேடிடடா தூக்கம் மறந்து
கூடிடடா கூடிடடா கூட்டம் துறந்து
பாடிடடா பாடிடடா பாட்டை சிறந்து
சாடிடடா சாடிடடா சேட்டை மனத்தை
வேட்டிடடா வேள்வியினை வேதியர் போல
நாட்டிடடா கோட்டையினை நாகரசத்தில்
கூட்டிடா ஓர்நிலையில் உந்தன் மனத்தை
மூட்டிடடா மெய்ஞ்ஞான தீயின் தழலை
அன்றொரு நாள் சித்தன் வந்தான் காரைக்கோட்டை
என்றும் நாம்வாழ காய கல்பம் தந்தான்
அன்றவன் சொன்னதெல்லாம் கனக வைப்பு
நன்றாக உணர்ந்தாலோ அது சினம் துறப்பு
மண்ணிதனை பொன்னாக்கும் சித்தர் கூட்டம்
கண்மூடி மயங்கி நிற்கும் மாந்தர் கூட்டம்
விண்மீது செலுத்துகின்ற அம்பைப் போல
தன்மீது திரும்பிவரும் வினையின் ஓட்டம்
காலணா கொடுத்து விட்டால் ஓடம் ஏற்றும்
பாலையவள் மந்திரம்தான் பாதை மாற்றும்
காலையவள் பற்றிவிடு காட்டம் குறையும்
கலியவனின் கொட்டமது அடங்கிப் போகும்
சாகின்ற மனிதருக்கு ஏது நட்பும் பகையும்
போகின்ற பாதையெலாம் புட்பம் புட்பம்
வேகின்ற கட்டையிது அற்பம் அற்பம்
ஏகிவிடு ஏகாந்தம் அது நுட்பம் நுட்பம்
சாகாது நிற்பாயோ என்று கேட்பார்
ஆகாத செயல்நின்றால் அதுவும் கூடும்
போகாத ஊருக்கு வழியேதென்பார்
நோகாமல் நோக்கின்ற நோன்பறியாரே
புட்பமொன்றெடுத்து பாதம் போடு போடு
குட்டமதும் போய்விடுமே வாழும் நாடு நாடு
எட்ட நின்று பார்த்தாலோ தெரியா வீடு
அட்டகாசம் செய்யாது அந்த மாயக் காடு
அமராவதியிருந்த அந்த பாரிஜாதம்
தமதாக்கி கொண்டானே தாமோதரனும்
சமதமங்கள் கொள்கையெலாம் தேறி நீயும்
அமர்க்களமாய் அடியினிலே நாளும்போடு
கண்ணனவன் காதல் செய்த கதையைக் கேளு
பெண்ணுரு எல்லாமே எமக்கன்னை என்பான்
விண்ணகர வேந்தனுக்கு விகல்பம் இல்லை
மண்ணிதிலே மனமகற்றி மாதரைப் பாரு
மின்னியலில் மயங்காதே மூழ்க்கும் மூழ்க்கும்
அன்னியனின் அலங்கோலம் அகலும் அகலும்
பொன்னி நதி வழிவந்த நம்மனோர்க்கு
கன்னியான அன்னையது அருளும் அருளும்
இருளினிலே தேடும்பொருள் கைப்படுமோ படுமோ
அருளாலே கிடைத்ததப்பா ஆன்ம போதம் போதம்
பொருளறிந்தோம் பதிவு செய்தார் நித்தம் நித்தம்
கருக்குழியில் செல்ல மாட்டோம் யோகம் யோகம்
ஆதியிலே சங்கரரும் ஆர்பரித்தார் வேதம் வேதம்
மீதியெலாம் பூர்த்தி செய்தார் இரமண மவுனம் மவுனம்
வீதியிலே கடைவிரித்தார் அருட்சக்தி நாதம் நாதம்
நீதியில்லை நேரமில்லை என்ற சொல்லும் சொல்லும்
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 432