அன்பெனும் ஓர் பங்குச்சந்தை !
(வசனக் கவிதை)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இது வள்ளுவர் வாக்கு.
கொள்கையிதை கொண்டுவிட்டால்
துன்பம் இல்லை வாழ்க்கையிலே !
அன்பு என்றால் என்னவென்று
அறிந்துகொள்ள வேண்டுமிங்கு !
அக்கறையாய் பிறர் நலத்தை
அறிவதுதான் அன்பு என்பார் !
தரிதனிலே நூல் இழையை
விரித்துச் சேர்ப்பதுபோல்
உலமிதை இயற்கையது
இழைத்து வைத்திருக்கு !
பிரிவினை வாதங்கள் ஓர்நாள்
போய்விடுமே பாரிதனில் !
உலக மயமாதல்
பணத்தினால் வந்தது போய்
குணமதுவும் ஒன்றாகி
குவலயத்தோர் ஒன்றாவார் !
போராட்டம், போர்களெலாம்
பக்குவமாய் மாறிவிடும் !
அணு உலைகள் அவையெல்லாம்
அழகுப்பொருளாகும் !
கூடங்குளமதிலே
காட்சிப்பொருளாகும் !
பூ இதழ் போல் மெலிதாக
பூ இதிலே மனம் ஆகும் !
பிறர் துன்பம் போக்கிடவே
பக்குவமும் வந்துவிடும் !
இப்படி ஆகிவிட்டால்
இவ்வுலகம் சொர்க்கமாகும் !
சொர்க்கமென்றால்
தேவர் உண்டே !
இந்திரனாய் சந்திரனாய்
இந்த மனிதர் மாறி
அரக்க குணம் தன்னை
அழித்திடவே எழுந்திருப்பார் !
அதற்கு மாலும் துணைவருவார் !
நிற்பதெல்லாம் நெடுமால்தானே !
இறைவன் அவன் அன்பின் உரு !
அன்பின் உருவமாக அனைவரும் மாறிவிட்டால்
அந்த இறைவன் நாமே ! இது
அறிஞர் கூற்றுதானே !
காலம் மிகச்சிறிது ! அதற்குள்
கடவுளாய் நாம் மாறவேண்டும் !
அன்று
இரணிய அரக்கன் தன்னை
அழித்திட தூணில் இருந்து
குதித்தது நரசிங்கம் !
அணுவினை பிளந்து அதுவும்
அரக்கனை அழித்தது அறிவோம் !
இன்று
அணுவென்ற அரக்கன் தன்னை
அடக்கிட வருமோ சிங்கம் ?
தவறு நடக்கையிலே
தட்டிக் கேட்பவர்தான்
திருமால் என்றிடுவேன் !
நரசிங்கம் வந்தபோது
நடுங்கி நின்றார் நானிலத்தோர் !
பக்த பிரகல்லாதன்
பதறவில்லை பார்த்துவிட்டு !
பக்கம் சென்றமர்ந்து
பதவிசாய் பேசி நின்றான் !
அன்பு மனமிருந்தால்
அகன்றுவிடும் பயமிங்கு!
சினமகன்று சிங்கமதை
சிரித்து மகிழ வைத்தான் !
மின்சார விளக்கேற்ற
அணு உலைகள் வேண்டுமென்பார் !
மின்சார விளக்கேற்ற
மெழுகு வத்தி ஆவாரோ?
கண்களை விற்று இங்கே
சித்திரம் வாங்குவாரோ என்பார் !
அது போல்
மின்சார விளக்கேற்ற
மெழுகுவத்தி ஆவாரோ?
பழுது சொல்ல வரவில்லை !
மனதில் பட்டதைதான் கூறுகின்றேன் !
இந்த தீபாவளி தனிலே
தீபம் ஏற்றிடுவோம் !
மின்சார விளக்கல்ல !
மெழுகுவத்தி ஏற்றிடுவோம் !
அன்பு உலை வைத்திடுவோம் !
சுனாமி வருவதற்குள்
அணு உலைகள் அகற்றிடுவோம் !
முல்லை செடி ஒன்று
வாடி நிற்கையிலே
தேரதெற்கு எனக்கென்று
செடி படர நிறுத்திவிட்டு
நடந்துவிட்ட பாரியைப் போல்
மக்கள் என்ற முல்லை செடி
மனம் வாடி நிற்கையிலே
அணு உலையின் கட்டிடத்தை
அழகுப்பொருளாக்கி
அகன்று சென்றிடுவோம் !
வள்ளல் பரம்பரையில்
வந்தவரன்றோ நாங்கள் இங்கு !
வம்பு பேச வையகத்தில்
வகைவகையாய் விஷயமுண்டு !
நேரத்தை விரயமாக்கி
புறம் பேச போகவேண்டாம் !
அறம் என்றால் அன்புணர்வு !
அன்பேதான் (என்றும்) நம் நினைவு !
அன்பென்பது சிவமாகும் !
(அறியாமை) மண்டிக்கிடக்கின்ற
மனத்தாலே அவனை நினை!
சினமகலும் ! சிந்தை சீராகும் !
நல்குணம் நாடி வரும் !
காட்சியது கடுகி வரும் !
ஐயம் அகன்று விடும் !
வேதத்தின் பொருள் புரிய
வேதாந்த வாழ்வு பெற
வீரத்தாய் சாமுண்டி
வரம் அருள்வாள் வேண்டியதை !
இச்சகத்தில் பொருள் வேண்டும் !
இனிமையான இல்லறம் வேண்டும் !
இல்லாளின் இதம் வேண்டும் !
பொல்லாப்பு பேச்சகன்று
வல்லமையாம் வரம் வேண்டும் !
இத்தனையும் அவள் தருவாள் !
காளியின் கையினிலே
கூறான வாள் எதற்கு ?
வேறான சிந்தனையை
வெட்டிடுவாள் வேறெதற்கு ?
தலையும நரையாகி
தன்பற்கள் வீழ்ந்துவிட
உடலில் சுருக்கங்கள்
இடம் மாறிப் போகிவிட
இத்தனை வயதாகி
இங்கென்ன இன்னும் செய்ய !
அன்னையவள் பேர் சொல்லி
அழைப்பதுவே அறிவாகும் !
அள்ளி அருள் செய்வாள்,
அருட்சக்தி குருவாக !
சிறிய விஷயம்தான் !
சிந்தைதனில ஏற்றிவிடு !
சின்னத்திரை போட்டு
சின்னத்திரை மூடிவிடு !
சொன்னபடியெல்லாம்
சீர்மனதை மாற்றிவிடு !
ஆவல் கொண்டிடுவாய் !
கோவில் கொண்டிவாள் !
காட்சியினைக் கண்டுவிடு !
கவியிதனைப் புரிந்துவிடு !
புவிதனிலே புகழ் பெறுவாய் !
பங்குச்சந்தையிலே
பணத்தை போட்டுவிட்டு
சின்னத்திரை தனிலே
தினம் தினம் பார்ப்பது போல்
தமிழ்த்தொண்டர் சந்தையிலே
கவிப்பங்கைப்போட்டுவிட்டு
சந்தச் சந்தையிலே
சாத்திரம் புனைந்திடுவோம் !
மனமென்னும் திரைதனிலே
தினம் தினம் பார்த்திடுவோம் !
சங்க காலம் தொட்டு
சரித்திரம் படைத்திட்டோம் !
அதனால்
பங்கைப் போட்டிவீர்
அன்பெனும்
பங்கைப் போட்டிவீர்
ஏற்றஇறக்கம் என்றுமில்லை,
எங்கள் சந்தையிலே
என்றும் ஏற்றம்தான் !
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 433