பல்லி சொன்ன பண்பு !
அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார்.
பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார்
என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல்
அன்புதான் அழகு என்று எப்போதும் சொல்லுவேன்.
சொல்வதற்கு செய்தி ஒன்று செய்திதாளில் வந்தது.
பலகை வீட்டில் வாழுகின்ற ஜப்பானில் ஒருமுறை
பல்லி ஒன்று பலகையில் ஆணியாலே அறைபட
பலகாலம் ஒருவரும் பார்க்க வில்லை அதனையே
வெகுகாலம் ஒருநாளில் நகர்த்திடும் போதிலே
அகப்பட்ட பல்லி அது அவர் கண்ணில் பட்டது.
சுகமாக இத்தனைநாள் அது உயிர் வாழ்ந்ததெப்படி?
அகத்தினிலே அந்த எண்ணம் அவருக்கு வந்தது.
சிறிது நேரம் அங்கு நின்று உற்று அதைப்பார்த்திட
பரிவுடனே பல்லி ஒன்று பக்கத்திலே வந்துமே
கரிசனமாய் உணவு ஒன்றை அதன் வாயில் ஊட்டிட
அரிதான இக்காட்சி அவர் காண கிடைத்தது.
தாழிலே மாட்டிக்கொண்ட பல்லி உணவு உண்டது !
தாழுண்டோ அன்புக்கு திருவள்ளுவர் சொன்னது !
காழ்புணர்ச்சி அகற்றியே காசினியில் வாழ்வோமே !
வாழும் வகை அறிந்திட விளக்கம் அதை காண்போமே !
மனிதனுக்கு மட்டும் தான் மனதிலே அன்பதோ?
அன்பு செய்து வாழ்வதற்கு ஐந்தறிவு போதுமே?
என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல்
அன்புதான் அழகு என்று எப்போதும் சொல்லுவேன்.
புத்தாடை புனைந்து தினம் பூமியதை சுற்றுறோம்,
புனைய ஆடை ஒன்றுமின்றி பரம ஏழை உள்ளரே.
தனக்கு மட்டும் தரணி என்று தந்திரமாய் வாழுறோம்
சனங்களில் பலர் தமக்கு சோறு கூட இல்லையே.
பாசிநீரில் குளிக்கிறார் பசியுடனே உழைக்கிறார்
தூசிகால் தன்னுடன் தண்ணீரை குடிக்கிறார்
நாசியிலே துர்நாற்றம் ஏறிடவே துடைக்கிறார் (நாமோ)
ஏசிஇல்லையென்றுமே ஏங்கியே தவிக்கிறோம்.
பல்லி நேயம் பார்த்து நாமும் பாடம் கற்க வேண்டுமே
தொல்லை இவர் என்று எண்ணா தூய மனம் வேண்டுமே
பல்லைக்காட்டி பேசுவோரை பாராட்டி மகிழ்கிறோம்
நல்ல மனிதர் நாவடக்கம் கொண்டிடுவார் அறிவமோ?
கள்ளமில்லா உள்ளம் வேண்டும் கடவுள் அந்த உருவுதான்.
தெள்ளத் தெளிந்த பேர்கள் சிவலிங்கம் என்பரே !
பள்ளத்திலே விழுந்த குழவி திரையினிலே காட்டுவார்
பள்ளம் விழுந்த மாந்தர் நாமேதான் அறிவமோ?
பளபளக்கும் வேட்டி கட்டி தமிழர் நாம் என்கிறோம்
தளதளக்கும் தங்கத்திற்கு திரைபோட வேணுமோ?
உளத்தினிலே உண்மை பேசி உத்தமராய் வாழ்ந்திட்டால்
விளக்கிடவும் வேணுமோ வீரதமிழர் இவரென.
பேசுகின்ற பேச்சிலே பேதம் போக வேணுமே !
ஆசு கவி கூறுகின்ற அறிவு நமக்கு வேணுமே !
மாசு மருவு எதுவுமின்றி மனம் ஆக வேணுமே !
காசு கொடுத்தால் கிடைக்குமோ காசினியில் அன்புமே!
அன்பும் தமிழும் ஆதியிலே ஒன்றாக இருந்ததே !
பண்புடனே பலகவிகள் பாரினிலே இருந்தாரே !
கண்ணைமூடி திறப்பதற்குள் கவிபிறந்து சிறக்குமே !
கண்ணாடி அறைஇருந்தால் கவியும் அன்பும் பிறக்குமோ?
பலகையிலே அறைந்த பல்லி உணவு பெற்று சிறக்குமே !
சிலுவையிலே அன்றிருந்த ஏசு அன்பின் உருவமே !
கலிகாலம் என்றதன் மேல் பழி போட வேணுமோ?
வலிமை எது என்று கூறின் அன்பில் மனம் தோய்வதே !
தேரைக்கும் உணவுதர தேவன் ஒருவன் இருக்கிறான் !
பாரிலே ஏழைக்கு சோறு தந்தால் நீயும் அந்த தேவனே !
வாரிவாரி இறைத்த வள்ளல் வாழ்ந்த இந்த நாட்டிலே
மாறி மாறி ஆட்சி வந்தும் மனிதன் மாற வில்லையே !
வாடி நிற்கும் கொடிக்கு நீ வாகனத்தை தரவேண்டாம்
வாடி நிற்கும் மனிதருக்கு வாய்க்கு நீர் தருவமே !
கோடி கோடி சேர்த்திட்டால் கூடி வாழ்வதெப்படி ?
நாடி நாடி நல்லவற்றை நாவால் கூற வேண்டுமே !
அசைந்திட முடியாத அந்த பல்லி வாடிக்கடந்திட
இசைவுடனே இன்னொன்று ஏற்றஇரை தந்திடும்
வசைபாடி மனித குலம் வாழ்க்கையினை தொலைக்குமோ?
திசையெல்லாம் தமிழர் வாழ ஒற்றுமையை விதைப்பமே !
மருமகளை வாழ்த்துகின்ற மாமியார்கள் வேண்டுமே !
மாமியாரை போற்றுகின்ற மருமகளும் வேண்டுமே !
சாமி என்பதெல்லாம் இந்த சத்தியம் தான் அறிவமே !
நாமிடம் பெயர்ந்து விட்டால் நாறிவிடும் நம்முடல் !
நானென்று கூறிடுவோம் நம்முள் உள்ளான் நாயகன் !
தானென்ற அகந்தை நீக்கின் தானேதான் சிவனுமே !
அன்புதான் சிவன் என்று அன்றேதான் கூறினார் !
கண்ணிலே அன்பைகாட்டி பகை துறக்க வேணுமே !
பல்லி சொன்ன பொருளிது பாரினிலே பகர்ந்திட்டேன் !
கல்லு மனம் தனை துறந்து கனிவாய் வாழகற்பமே !
சொல்லிலே கூட இங்கு கடுமை காட்ட வேணுமோ?
நல்லவராய் நாம் வாழ்ந்து நல்ல கவி தருவமே
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 451