மனையாள் மாண்பு!
அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல
என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல
அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது
தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும்
கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும்
கண்ணோக்கா திருந்தாலோ கெஞ்சும் நெஞ்சம்
மண்ணோக்கும் மாதர் பார்வை மகிழ்ச்சி தேக்கும்
விண்ணோரும் விரும்பும் வாழ்வு மனிதர் வாழ்வு
மனையாளின் கருத்தறிந்து நடந்து விட்டால்
மனையினிலே குழப்பமில்லை என்றும் இன்பம்
தினம் தினம் காண்கின்றேன் நகைச்சுவை பதிவில்
மனைவியினை கேலிசெய்யும் மனிதர் கூட்டம்
பட்டிமன்ற பாட்டினிலும் மனைவி மாட்டிக் கொள்வாள்
எட்டியாக கசந்து நிற்கும் ஏதோ சொல்வார்
அட்டிகையை போடவேண்டாம் அன்பைக் காட்ட
திட்டியவர் குணங்களையே தீர்க்க வேண்டாம்
உணவுதரும் மனையாளை கிண்டல் செய்தால்
மணந்ததற்கோர் மதிப்பில்லை மனதில் சோகம்
பணத்தினிலே சிக்கனங்கள் பார்ப்பார் உண்மை
குணத்தினை இகழ்வதற்கு நமக்குரிமை இல்லை
தகதகக்கும் அக்னியினை சாட்சி வைத்தே
சுகம்பெறவே சுந்தரியை சேர்த்தோம் வாழ்வில்
நகைச்சுவைக்கு நல்விடயம் நிறைய உண்டு
அகத்தினிலே கடமையாற்றும் மனையோ தொல்லை?
மனையாளை மாதாவாய் மன்னும் பூஜை
மண்ணிதிலே மிகவுண்டு பேசும் வேதம்!
அனைவரும் கேலிசெய்யும் கருத்தைக் கண்டு
நினைக்கையிலே நல்லுடலும் கூசுதப்பா!
உணவு தந்தாள் உணர்வு தந்தாள் உடலும் தந்தாள்
நினைவினிலே என்றும் தன் இணையைக் கொள்வாள்
மனைவியவள் தன்மனைதுறந்து புகுமனையில் வந்தாள்
கனவினிலும் கிண்டல் வேண்டாம் கேட்டுக்கொள்வேன்
கோபம் கொண்டிடுவாள் அதை மறுக்கவில்லை
சோம்பரினால் ஒருபோதும் அவள் சுருண்டதுண்டோ
ஆம்பளை நாம் என்றே மிக அகந்தை கொள்வோம்
அம்பாள் உருவன்றோ அன்பின் பெண்மை
பேச்சரங்கம் தன்னிலினி பெண்மை இகழவேண்டாம்
மூச்செல்லாம் மனையாளை புகழ்தல் செய்வீர்
துச்சமென நினையாதே துணையை என்றும்
கச்சணிந்த மாதரவர் கடவுள் தோற்றம்
மாலை வீட்டிற்கு சென்றால் அவள் தொல்லை என்பார்
ஆலையிலே அகப்பட்ட கன்னல் போன்று
நாளெல்லாம் நமக்காக ஓடித் தேய்வாள் (மனம்)
தாளாமல் தந்து விட்டேன் இந்த கருத்தை நானும்
![]()





Users Today : 19
Users Yesterday : 88
Total Users : 58595
Views Today : 189
அருமை….