ஸ்ரீகுருபாதுகாவிமர்சம் என்ற மஹா(சிவ)வாக்கிய பாடல்கள்
தவம் மனம் விட்டிடாத தாய்வணங்கும் சீடரே
குணமருளும் பாதமது குருவினது பாதமே
மணமணக்கும் மந்திரத்தின் மூலமதை அறிவீரேல்
உணர்விலே உந்தன் குரு ஓடிவந்து நிற்பரே
தோல் செருப்போடு நீர் தெருவிலே போவீரோ
காலிலே குத்தும் கல் எந்த கல் அறிவீரோ
மேல்புறம் உணர்ந்திடும் மெத்த அனுபூதியும்
கல்லாலின் கீழிருந்து கடவுளும் சொல்வரே
வாக்கியத்தை சொல்லுகின்ற வேதநெறி சீடரே
வாக்கியத்தின் வாச்சியம் விளங்குவதார் அறிவீரோ
போக்கியத்தை புறம் தள்ளி நாதத்தில் நிறுத்தினால்
பாக்கியத்தின் பாக்கியம் பரம்பொருளாய் நிற்பீரே
சோகம் சோகம் சோகமென்று சுணங்கி நிற்கும் சீடரே
ஸோஹம் ஸோஹம் ஸோஹமென்று சித்தமதில் சொல்லிடில்
வேகம் வேகம் வேகமென்று வேதப்பொருள் விளங்குமே
பாகம் பாகம் பாகமுறை பரமனார் அருள்வரே (அர்த்தநாரீ-சிவன்)
நான் நான் என்று கூறும் நாட்டம்கொண்ட சீடரே
நானும் நீயும் ஒன்று என்று நாதர் கூறும் வாக்கியம்
மானும் முகம் கொண்ட முத்ரை முயன்று கூற வல்லீரேல்
தேனும் பாலும் திகட்டும் இன்பம் குருபதம் தாருமே
கசக்கும் காயம் கண்ணாய் பேணும் குற்றமிலா சீடரே
ஹஸக்ப்ரேம் என்று கூறி காயக்லேசம் செய்யுமே
ஹவும் ஸவும் சிவனும் சக்தி சேரும்வகை அறிந்திடில்
அஹமும் புறமும் அந்த குருநாதர் அருகில் வந்தமர்வரே
மலவரய ஊம் என்று மருகக் கூறும் சீடரே
ஹவும் ஸவும் சம்மென்று உலகம் மறையலாகுமே
ஈயும் என்ற மந்திரம் எனக்குள் என்று உணர்ந்திடில்
பாயும் மாய்கை போய்விடும் பாதம் கண்ணில் தோன்றுமே
பயம் பயம் பயம் என்று பதபதைத்து ஓடுவார்
அபயம் தந்து அருள யிங்கு ஆசானவர் இருக்கையில்
பயமெடுத்து ஓடவேண்டாம் பாதையும் தெரியுமே
சுயம்புவான சம்புவும் சொரூபத்தின் ஞானமே
படம் படம் படமென்று பார்த்திடுவார் திரையிலே
திடம் கொண்டு பார்க்கையில் திரை என்பது மாய்கையே
உடல் உடைந்து போனபின் திரை ஓட்டம் மறையுமே
கடல் கடந்து போனவர்க்கு இக்கரை தூரமே
தெருவிலே நடக்கையில் பாம்பென்று நடுங்கிட
அருகிலே வந்தகுரு பழுதையென்று கூறிட
உருவு கண்டு அஞ்சிய உதறல் போனதெவ்விடம்
பருவம் கொண்ட பெண்ணைக் கூட பரம்பொருளாய் பார்ப்பனே
காதிலே நாலு வாக்கியம் குருவும் வந்து கூறவும்
எதிரில் வந்த எருமையும் இறைவனாய் தெரிந்ததே (ஞானதேவர்)
போதிலே ஜபித்தபோது புரிந்ததே பரம்பொருள்
வாதிலே மனமகல பேச்சுப் பேசுவதில்லையே
கருவிலே பிறந்திறந்து கோடி ஜன்மம் எடுத்தேனே
அருகிலே ஆசான் வந்து ஆரு நீ என்று காட்டவே
வறுத்தெடுக்கும் மாய்கையும் போனதே போனதே
அறுவினை போக்கும் அடியே அருத்தஜாம பூஜையாம்
தத்துவம் கோடிபலபலப் தாரணியில் உள்ளதே
கத்துகின்ற கழுதைபோல காதிலே விழுந்ததே
தத்துவம் அஸி என்று குருவாக்கியம் கேட்டபின்
சுத்தவில்லை கோவிலையே சொரூபத்தை அறிந்தனே
ஸகஜமாக பேசியே சுற்றி வந்தேன் சாலையை
தகதகக்கும் வெய்யிலில் தலை சுற்றல் வந்ததே
சிவசிவக்கும் சீர்குரு சென்னிவந்தமர்ந்த பின்
அஹம்பிரம்மமென்ற சுருதி அம்புலியாய் குளிர்ந்ததே
முயலாமல் மேதினியில் முக்குணத்தில் விழுந்தனே
அயமாத்மா பிரம்மமென்று ஆசான் வந்துசொன்னபின்
அயர்வுமன மகன்றதே தயங்கி மாய்கை போனதே
வயது பதினாறிலே வாகாய் நின்று விட்டதே
பிரக்ஞானம் பிரம்மமென்று போதம் கொள்ளும் சீடரே
திரைகடலில் தீர்த்தமாடின் தன்னுரு தெரியுமோ
உரைத்த குரு நடந்த பாத உதகத்தை தரிப்பீரேல்
கரைத்து நீர் குடித்த வேதம் கருத்துள்ளே வந்திடும்
வாக்கு பாணி பாத பாயு உபத்தம் என ஐந்துமே
தொக்குசக்குர் ஆன ஐந்தும் துரத்துமே உடலிதை (துவக், சக்ஷூஸ்)
அயமாத்துமா பிரம்மமென்று ஆய்ந்து கூற வல்லிரேல்
அயபிண்ட உடலிதிலே ஐயன் வந்து அமருமே
படுத்தமால் உடுத்த சிவன் விடுத்த பிரம்மா அனைவரும்
கடுந்தவம் செய்தபோது கடுகிவந்து வரம்தருவரே
கொடுங்கூற்று கூற்றுவன் கொண்டுபோக வருகையில்
அடுத்தகுரு மட்டுமே அருகில் வந்து அருள்வரே
ஸ்வாமி ஸ்வாமி குருஸ்வாமி ஸத்தியத்தின் நாயகர்
அஸ்மி அஸ்மி ப்ரஹ்மாஸ்மி என்றுரைத்தார் கேளுமே
தாஸன் தாஸன் நானுமென்று தாளை பிடிக்கவல்லிரேல்
தாஸன் காளிதாஸன் போல கவியியற்றலாகுமே
வேதம் வேதம் வேதம்தன்னை விரித்துரைக்கும் சீடரே
நேதி நேதி நேதியென்று நாலுவேதம் கூறுமே
பாதம் பாதம் பாதம்தன்னை பிடித்து நின்று போற்றினால்
வேதி வேதி வேதியில் விளங்கிநிற்கும் பிரம்மம் தெரியுமே
இன்றில்லை நாளையோ கூற்று வந்து கூப்பிடும்
அன்று வந்து உதவிட ஆங்கொருவர் இல்லையே
இன்று காலை குருபதம் இறுக்கி நீயும் பற்றினால்
கொன்று வாழும் கூற்றுவன் கும்பிட்டு நகர்வனே
நினைவிலே நடக்கிறான் கனவிலோ பறக்கிறான்
நினைவில் இல்லா நீளிறக்கை கனவில் நீண்டதெவ்வகை
புனைந்த காயம் மாய்கை என்று புலப்படுவதில்லையோ
நனைந்த சாயம் போனபின்னர் நானுடுத்துவ தில்லையே
இல்லை இல்லை இல்லையென்று இவ்வுலகு தெரிந்தபின்
தொல்லை தொல்லை தொல்லையென நான் தொடுவதில்லையே
கல்லை கல்லை கடவுள் என்று கும்பிட்டு நின்றபின்
அல்ல அல்ல அல்லவென்று அவர் சொல்வதில்லையே
தொட்டு தழுவும் துணைவி மக்கள் மாய்கையென்னும் சீடரே
பட்டுதுணித் போர்வையும் இன்னும் விட்டுப்போகவில்லை
கட்டிதழுவும் மக்களை நீர் கடவுளாக காண்பீரேல்
விட்டுவிடும் வினைகளும் வேதவாக்கியம் கேளுமின்
![]()



Users Today : 117
Users Yesterday : 188
Total Users : 46344
Views Today : 272