பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம்

பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம்
பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் !
கடப்பாரை கொண்டு உனை
திடமாக அடித்தாலும் தாவரங்கள் தனை
தவறாது தருகிறாய் !
தவறி விழுந்தோரை எல்லாம் தாங்கும் குணம் உனக்கு !
பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் !
உனக்கொரு போட்டி உலகினில் உண்டு !
உண்மையை உணர்த்தும் நம் குருநாதர் !
தாவும் மனதை தான் குடைந்தாலும்
காமக்ரோதமெனும் கடப்பாரை கொண்டு
எனது பிழை பொறுத்து ஞானக்கனி தனை
தத்துவமாய் விளைவிப்பார் !
தவறி விழுந்தோரை தாங்கும் குணம் அவருக்கு !
பஞ்சபூதங்களில் பாரைத்தாங்குகிறாய் நீ !
பஞ்சஸ்ரீ யில் பகலவனாய் தாங்குவார் ஸ்ரீகுரு !
அதனால் தான் சொன்னேன் – உனக்கொரு போட்டி உலகினில் உண்டு ! -என
ஸலீலமென்னும் பெயர் கொண்ட தண்ணீரே
ஸஹஜ நிலை தரும் ஸத்குருகுருவும் உன்னைப் போல்தான்
பாவத்தை போக்குவதில் புகழ் கொண்டாய் நீ !
அஞ்ஞான பாவத்தை அடித்துச்செல்லும் அவர் பார்வை !
நதியாக நீ ஓடி வருகையிலே எதிரே யார் என்று எட்டிப்பார்ப்பதில்லை நீ ! அனைவர்க்கும் உதவியாக அங்கங்கே பாய்கிறாய் நீ !
குருநாதர் தானருளும் கருணை மழையாலே
அருள் வழங்க தகுதியினை அவர் ஆழம் பார்ப்பதில்லை !
அருட்சக்தி தனைத்தந்து அனைவரையும் ஆட்கொள்வார் !
அதனால்தான் சொல்கின்றேன்> அவருக்கும் உனக்கும் அகிலத்தில் புகழுண்டு !
அனைத்தையும் பொசுக்குகின்ற அக்னியே!
அக்னி உன் பக்கம் நெருங்கிட யார் நிகர்?
உனைப்போல இங்கொருவரும் இருக்கின்றார்
ஞானமென்ற தீக்கொழுந்தால் -அவர் ஞாலத்திற்கொளி கொடுப்பார் !
ஞானியாக இருக்கின்ற ஞான குரு நிகருனக்கு !
விளக்கொன்றால் விளக்கேற்ற ஒளிஒன்று குறைந்திடுமோ ?
அதைப்போல்
ஞானத்தால் அவர் சிறந்து நமக்குமிங்கே ஒளி தருவார் !
அதனால்தான் சொல்கின்றேன் – அவருக்கும் உனக்கும் ஆற்றலினால் அழகுண்டு !
வளியென்ற பெயர் கொண்ட வாயுபகவானே !
களிப்பெய்த வைப்பதிலே குருவும் உன்னைப் போல்தான்!
தென்றலாய் நீ வீசி தெம்பைத் தருகின்றாய் ! –
குருவும் தனதருள் என்கின்ற தென்றலை வீசுகிறார் !
புயலாய் நீ வீசி பறந்து போகையிலே புவனத்தின்
மரமெல்லாம் பிடுங்கி எரிந்திடுவாய் ! -அதைப்போல
அவர் அருள் என்னும் புயலாலே
அஞ்ஞான மரமெல்லாம் அடித்துச் சென்றிடுவார் !
மூச்சு விடக்கூட உன் மஹிமை வேண்டுமிங்கே ! –
அவரின் மெய்ஞான மஹிமைதான் இந்த மெய் தன்னை வாழவைக்கும் ! அதனால்தான் சொல்கின்றேன்-
அவருக்கும் உனக்கும் அதிக ஒற்றுமை என்று !
வானவீதியிலே விண்மீன்கள் பலவுண்டு !
விதவிதமாய் தாரகைகள் ஒளி வீசி திகழ்வதுண்டு !
ஆகாயதத்துவம்தான் அகிலத்தில் முதன் முதலில் !
அதைப்போல்
ஸ்ரீகுருவின் தத்துவம்தான் ஸ்ரீவித்யைதனில் முதலாம் !
பாதம் பணிந்துவிட்டால் பரவெளியாய் பரந்திடலாம் !
வெளியாக உள்ளதுதான் நம் சிரசும் -அங்குதான் வீற்றிருக்கும்
குருவினது பாதங்கள். வெளியும் அதுதான் உள்ளும்
அதுதான் வெளியாக நிறைந்துவிட்டால் வேறென்ன வேண்டுமிங்கே !
வெளியே உனக்குவமை வேதியராம் குருநாதர் !
அஞ்சு பூதமாக அவரைக் கண்டோம் !
பஞ்சபூதம் தனை கொண்டு இங்கே தஞ்சமாக நாம் வாழ்வோம் !  அதுதான் —–
பஞ்சஸ்ரீ பஞ்சத்தைப் போக்கும் பஞ்சஸ்ரீ
பஞ்சமென்றால் ஞானப்பஞ்சம்தான் –
அத்தகைய ஞான வாழ்க்கை நாம் வாழ ஞானகுரு திகழ்கின்றார் !
இத் தத்துவம் தனைக்கண்டு தரணியிலே சிறந்திடுவோம் !
அவரை பரணி பாட இங்கு பாரதி பொருள் தரட்டும் !
பாரதி கவிதை தரட்டும்! (ஸரஸ்வதி)

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
R kannan
R kannan
4 years ago

Excellent Sundar.
மடை திறந்த வெள்ளம்போல் கவிதை மழை பொழிந்துள்ளாய்.
ரொம்ப நன்றாக உள்ளது.