ஸ்ரீ சிதானந்தநாத கவசம்

ஸ்ரீ சிதானந்தநாத கவசம்
கஷ்டம் நீங்க கணபதி தொழுவோம்.
இஷ்டமான சதுர்த்தி இவரின் பிறப்பு
அஷ்ட சித்தியும் அன்புடன் அருள
இஷ்ட மந்திரத்தை இசையுடன் ஓதி
கஷ்டமும் அகலும் கருத்தும் விளங்கும்
சுப்பிர மணியரின் சாத்விக தந்தை
ஒப்பிலா நோயுடன் உயிர்விட துணிந்தார்
அப்பன் முருகனின் ஆலயம் கண்டு (திருத்தணி)
தொப்பென கீழே தரையில் வீழ்ந்திட
நில்லென்ற சப்தம் நன்றாய் கேட்க
அல்லல் போக்கி அருமருந்தருளிட
ஆங்கொரு கிழவர் அன்புடன் பழகிட
தாங்கொணா வலியும் தக்ஷணம் மறைந்திட
தாங்கிய கிழவர் திருத்தணி மலையடி
வேங்கைகள் வசிக்கும் காட்டினில் சென்றார்.
வீட்டிற்கேகி வளமுடன் வாழ
தேட்டம் மிகுந்த திருவாய் ஒருமகன்
ஊட்டம் மிகுந்தே உயர்வாய் பிறந்தார்.
கேட்டதை தந்திடும் கேணியாய் வளர்ந்து
பாட்டிதின் நாயகன் பாடம் படித்தார்.
தமிழும் நூலும் தரமாய் வளர்ந்திட
அமிழ்தினும் இனிய பாக்களை பொழிந்தே
சமவயதுடையோர் சாத்திரம் கற்றிட
செம்மான் மகளின் பதியை சாற்றி
இம்மையும் மறுமையும் இனிதே பெற்றார்,
கும்பமேளாவிற்கு தாயுடன் சென்றார்
அம்பிகை அருளும் ஆங்கே விளைந்தது
எம்மான் முருகன் குஹனாய் குருவாய்
தம்மை கடைத்தேற்றும் தாயாய் வந்தார்
சிம்மவாஹினியின் சிறப்பை கூறும்
காதியின் மந்திரம் காதில் ஓதிட
வேதியின்றியே வாக்கினால் தீக்ஷையை
ஆதி முதல்வன் அருகில் செய்திட
நேதி நேதி என்றே நவிலும் வேதத்தின்
சேதி அத்தனையும் குருவிடம் கேட்டே
மீதி மந்திரம் கபாலி வேதியர்
எழுதிட மனதில் ஏற்றம் வந்திட
அழுத பிள்ளைதான் அமுதுண்ணும் என்பதாய்
குமுதவல்லியின் குணத்தை அறிந்தார்
தணிகை நாதன் தந்த மந்திரத்தை
பனிரெண்டு வருடம் இரவும் பகலும்
தனியாய் கொசுவலை தன்னில் அமர்ந்தே
இனிதாய் ஜபித்திட இருளும் அகன்றது.
விடியும் வெள்ளியாய் பத்ததி பிறந்தது.
கடிதான காதியும் கரத்தினில் வந்தது
வேதாந்த சாத்திரம் வேறொரு இடத்தினில்
சாதாரணமாய் சிற்சிலர் மத்தியில்
பேதம் அகல பாடம் கேட்டார்
ஒருநாள் பாடமுடிவில் பலரும் அகன்றனர்
இவரும் பாதம் வணங்கா முத்திரை போட
ஏது உபதேசம் என்றவர் கேட்டிட
ஓதிய மந்திரம் உலகோர் அறிந்தனர்
விதியின் பயன் என விரைவாய் பலருக்கு
வேதிகை கட்டி வேட்டினார் தீக்ஷை
வித்யையின் தத்துவம் வேதாந்தம் என்பதே
அத்வைத கொள்கை அருநூல்கள் தந்தார்
காகாகாகா கட்க மாலையும்
திதிதிதி திரிசதி நுாலையும்
வாவாவாவென விதமாய் கூட்டி
தோதாய் தத்துவம் தரமாய் தருவார்
(ஸ்ரீ)சிரிசிரிசரிசரிசரியென்ற அஞ்சின் சூக்குமம்
சரிசரிசரிசரியாய் தினமும் சொல்வார்
அறிவும் அன்பும் பிரகாசம் விமர்சம்
அரியும் அரனும் அன்னையின் வடிவம்
தெரியும் என்பார்க்கு தெரியாதாகிடும்
தெரியாதென்றால் தனக்குள் தெரியும்
விரிவாயனைத்தும் விளக்கம் செய்வார்
குகுகுகுகு என்பது அவித்தை என்றும்
ருருருருரு என்பது ஒளியின் கூறு
தருவாய் அனைத்தும் தரமாய் அருள்வார்
உமானந்தரின் உயரிய நூலை
நம்மோர் நவின்றிட எளிதாய் செய்தே
லலலலல ஜலத்தால் அலம்பி
ரரரரர ரம்மால் உலர்த்தி
வவவவவ வம்மால் உயர்த்தி
பூதசுத்தியை புரிந்திட அருள்வார்
ஞானம் என்பது விசேட அர்க்யம்
கானம் செய்திடு கட்டிடு வாசியென
பூரணமாக அனைத்தும் புதிதாய் சொல்வார்
ஆரணம் கூட அதிஅதியசமாக
ஸாரவர் சாத்திரம் செவியில் கேட்கும்
வேரெவர் கூறுவார் வேதாந்தம் எளிதாய்?
கார்வேட்டு நூலது காட்டும் காட்சி !
பாரெட்டும் படர்ந்து பரமதின் புரட்சி
நீரிட்ட நெற்றியில் நின்றது குங்குமம்,
கூறிட்ட வார்த்தையில் குழைந்தது குவலயம்
மூலக்கனலை முதல்வர் காக்க
காலுக்கிடையை கருணயாய் காக்க
நாபிக்கமலம் நல்லவர் காக்க
நெஞ்சுக்குடலை நாதர் காக்க
கொஞ்சும் கழுத்தை கொற்றவர் காக்க
அஞ்சனமிரண்டிடை அருட்கவி காக்க
விஞ்சும் தலையை வீரர் காக்க
எஞ்சிய பாகங்கள் இறைவர் காக்க
பேருக்கு இல்லை இப்பேதையின் கவசம்
ஆறின் நாளில் அவசியம் சொல்லிட
பேறாம் பக்குவம் படர்ந்தே வந்திடும்
கூறியோர் யாரென குறித்தே நிற்காமல்
கூறிய விடயம் குறித்தே கூறிட
பாரியல் விளங்கும் பாதையும் புரியும்
நாரியர் அனைவரும் நாயகி உருவம்
வீரியம் காத்து விரைந்திதை உரைத்திட
காரியம் யாவும் கடிதாய் கூடும்
சாரிசாரியாய் சாத்திரம் பலகோடி
விரிவாய் படிக்க வேண்டும் காலம்
துரிதமாய் இந்த தோத்திரம் தரித்திட
பேரும் விளங்கும் பெரியோர் சரித்திரம்
சாரின் சரித்திரம் சிரத்தையாய் சொல்லிட
வேராம் வேதாந்தம் வாக்கில் விளங்கிடும்
சிதானந்தரின் சீரான சரித்திரம்
சிந்தையில் கொள்ள செல்வம் பெருகும்
கணபதி திதிதான் பாரில் வந்தார்
கணபதி தம்பி சஷ்டியில் மறைந்தார்
தேரின் கயிரை சிறிதாய் இழுத்தேன்
பாரின் மாந்தரே பலமாய் இழுத்து
நல்லதாய் வாக்கில் நலமாய் நவின்றதை
போகம் நீக்கி பகலிரவு படித்திட
தேகம் மின்னும் தாகம் கூடும்
வித்யை விளங்கிட வேகம் கூடும்
புத்தியின் நாயகி புலப்பட வைக்க
இத்தனை சொன்னேன் அடக்கம் அருள்வாய்
குருவே உந்தன் திருவடி பணிந்தேன்
அருள்தர இதுவே அற்புத நேரம்
ஸ்ரீகுருநாதன் இணையடியே சரணம் சரணம்

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments