சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்!

சிந்தையில் ஒரு சிந்தாமணி த்வீபம்!
குரு வணக்கம்.
இன்னும் என்ன தாமதமோ குருனாதா
மன்னும் மாயை மனதில் மாய்க்க வேண்டாமோ
தின்னும் கவலையை தீர்க்கவேண்டுமே
கன்னும் பசுவை கண்டறியுமே உலகிலே
ஆயிரம் முறைகள் அறியாமை வீழ்ந்தாலும்
துயிலைக் களைந்து திடீரென நான் எழுவேன்
மயிலின் முட்டைக்குள் பலவண்ணம் உண்டலோ
கயிலாயம் வைகுந்தம் சிறுமனம் என்னுள்ளே
வேதத்தின் சாகைகள் விதம் விதம் இருக்குது
நாதத்தின் சுரங்கள் நானாவகை நிற்குது
போதத்தின் உள்ளே புழுங்கி நானும் கிடக்கிறேன்
சோதனை வேண்டாம் சுலபமாய் வந்து அருளுவாய்
கடவுள் வணக்கம்
கணங்களின் கணபதி தேவரின் திருமுருகன்
பணங்களின் இலக்குமி படிப்பதின் பாரதி
வனங்களில் ஐயனார் வேதத்தின் கமலனார்
தினந்தோறும் போற்றிட ஆயிரம் கடவுள்கள்
மனக்கோயில்
நம்பிக்கை என்றொரு நாணதாம் மனவில்லில்
அம்பிகை அவள்பாதம் அர்ப்பணம் தர்ப்பணம்
கும்பாபிஷேகம் செய்ய குறித்தேன் நாளதை
அம்பிகை வாழுமந்த சிந்தாமணி சிந்தையில்
அதில்
கர்மமெனும் பாறையை கொண்டுவந்தேன் யானையில்
தர்மமென்னும் தீர்த்தம் மத்தியிலே வெட்டினேன்
உர்வாருக மந்திரம் உருவும் பல ஏற்றியே
கர்வமற்ற அந்தணரால் பாலாலயம் செய்திட்டேன்
குடைந்த பாறை மனக்குஹை கொண்டு வந்து வைத்திட்டேன்
மடிக்கும் கோபம் மரத்தினை அறுத்து அங்கே அமைத்திட்டேன்
துடிக்கும் இதயம் கருவறை தூய்மையாக அமைத்திட்டேன்
வெடிக்கும் பாறை வக்கிரம் குணமதனை அகற்றிட்டேன்
ஜன்மஜன்மமாய் வளர்த்த காயம் கோபுரம்
கன்மமாயை மூன்றையும் கரைத்து கொட்டி வீசினேன்
இன்ப துன்பம் ஏணிதான் எடுத்துரைக்க வேண்டுமோ
மனத்தகத்து வரைந்த கோயில் மன்னவளுக் கெழுப்பினேன்
அகந்தையென்னும் அகழியில் காமக்ரோத முதலைகள்
சுகத்தை சுற்றி சுற்றியே சூழ்ந்திடும் கோட்டைகள்
சகத்தில் இதுபோல் நகரமும் சந்ததமும் இல்லையே
பகத்தினது மாலினி பக்கத்தில் பரையும் வந்து அமர்வளே
நாடி நரம்பு அனைத்துமே நகரத்தின் சாலைகள்
கூடி நிற்கும் கூட்டங்கள் எழுப்பிடுமே கோஷங்கள்
தேடி தேடி கொடியினை மனத்தேரில் நானும் கட்டினேன்
கொடிகள் என்பது குணங்களே ஆறு என்பர றிஞரே
கேயசக்ர ரதமது கவிதை போல நிற்குது
மாயசக்ர வலையிலே மீண்டும் மாள வேணுமோ
வேய்ந்த கூரை வேதமே வரிசையாக அடுக்கினேன்
சாய்ந்த போது நிமிர்த்திடு! சரியுது பார்! கதவது!
இங்கு வா இங்கு வா ஏற்றிடு கொடிமரம்
பொங்கல் படைக்கு படைத்திடு பசிக்குமே அவருக்கு
சிங்கமுகம் செதுக்கிடு சீர்சீராய் தூணிலே
பங்கம் ஏதும் கூடாது பராசக்தி விஷயமாம்
கிரிச்சக்ர ரதமதில் சக்கிரத்தை சரி செய்யி
புரிந்து கொண்டு செயல்படு பாதமதை பணிந்துமே
விரிசல் பாறை அகற்றிடு தேரை இருக்கும் அதனுள்ளே
சிரித்த முகமாய் செய்திடு சுந்தரியின் முகத்தினை
இரும்புக் கோட்டை அமைத்திடு ஏதும் குறை கூடாது
கரும்புத்தின்ன கூலியோ கருத்தோடு செய்யணும்
திருந்தி வாழும் வாழ்க்கையே இரத்தினக் கோட்டையாம்
பொருந்தி வர வேண்டுமே பைந்தவத்தின் நாயகி
அன்பும் அறமும் நல்லரண் அமைத்திட வேண்டுமே
ஆதவன் மறைகிறான் ஆகட்டும் சீக்கிரம்!
பாதையில் கிடக்கு பார் பாறையை அகற்றுவாய்
வாதையெலாம் அகன்றிடும் வாபிகை அமுதமாம்
சந்தனத்தில் மணக்கட்டும் அரிசந்தன வாபிகை
சுந்தரமாய் ஜொலிக்கட்டும் மந்தார வாடிகை
சிந்தைதான் மணித்வீபம் சொன்னாரே ஸ்ரீ குரு!
விந்தைதான் மண்ணிலே வணங்காமல் இருப்பது!
பிராகாரம் முதல் தொடங்கி பலகையிலே அமரும் வரை
சிறப்பாக அமையணும் சிந்தாமணி த்வீபம்!
பரபரப்பாய் சுற்றி வா பலவேலை கிடக்குது!
சொரசொரப்பை சரிசெய்வாய் சுந்தரியின் ஊஞ்சலில்
எண்ணியதை அருளுகின்ற தென்னைமரம் ஏராளம்
எண்ணாமல் நட்டிடுவாய் இயற்கையே சிறந்தது
கன்னியவள் வாழுகின்ற மஹாபத்ம வனமிது
திண்ணிய மனம் வேண்டும் திரிபுரையின் வீடிது
கட்டி முடிக்கவேண்டும் கும்பாபிஷேகம் நெருங்குது
சிட்டாய் பறந்து அந்த த்வீபமதை எழுப்பிடு
முட்ட முட்ட உண்ணாதே முதுகது வளையாது
சுட்ட சுட்ட தங்கத்தை கோபுரத்தில் வேய்ந்திடு
அப்பப்பா வேலைகள் ஆயிரம் இருக்குது
தப்பப்பா தூங்குதல் விழித்தெழு விரைவிலே
சுப்பப்பா அந்த உளியினை சீக்கிரம் கையெடு
எப்பப்பா முடிந்திடும்? நெருங்குது நல்ல நாளது
அன்னை உந்தன் பாதத்தை அன்புடன் வணங்கினேன்
உன்னை அமர வைத்திட அழகு த்வீபம் அமைத்திட்டேன்
எந்தன் மனக்காட்டிலே ஏகாந்தமாய் எழுப்பினேன்
முந்தை நாள் நின்றவூர்க்கு நாயகரும் வல்லையோ
நெடிதுனாள் நினைத்து செய்த பூசலன்பன் நானில்லை
கொடிய மனக்கோடியிலே கொஞ்ச நாளில் செய்தது
விடிய விடிய உட்கார்ந்து விதவிதமாய் வினையில்லை
திடீரென நினைத்து கொண்டு நாளிரண்டில் நாட்டினேன்
உத்திரத்தின் அயணத்தில் குடமுழுக்கு வைத்திட்டேன்
உத்திரமோ அட்டாதியோ நாள் பார்க்க அறிவிலேன்
சத்தியமாய் என்மனதில் சிறிதும் அழுக்குமிலலையே
முத்தியதை அருளிடவே முழுக்கு அன்று மீள வா!
எந்த மன்னர் எங்கு கோயில் யாரெழுப்பி நின்றாரோ
அந்த நாளில் குடமுழுக்கு அவர் கனவில் சொல்லிடு,
பந்தன் ஒரு மனக்கோயில் மிகவிரைவில் எழுப்பினான்,
அந்த கோயில் குடம்முழுக்கு செல்லவேண்டும் நானென்று!

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments