மெய்ஞ்ஞானப்புலம்பல்

ஜயசக்தி.

(நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே)

இப்போது வரை……

  1. அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும் வரவில்லை
    தொழுதாலுன்னை தொடலா மென்பா ரெனக்கறிவி லெதுவும் எட்டவில்லை
    கழுதைபோல பொதியை சுமக்குமெனக்கு கருணை பெறவும் வழியில்லை
    பழுத்தமெய் ஞானம் வருவதற்குன் னருளைத் தவிர கதியில்லை
  2. அன்னை பெற்றாள் தந்தை வளர்த்தார் சுயமாயெதுவுஞ் செய்யவில்லை
    தனக்குள் பாருன் தகைமை தெரியுமென்பா ரிருளெயெங்கும் தெரிகிறது
    கனக்கும் நெஞ்சம் கடவுள்தன்மை கொள்ளல் எனக்கு எளிதாமோ
    தினமும் எந்தன் உடலுமுள்ளமு மெலிதாய் தேயுது அறியாயோ
  3. மகவும் இறந்து கறியும் சமைத்து உணவும் ஊட்டவல்லேனோ
    பகலும் தேய்ந்து இரவும் வந்தால் பகலவனவனும் மறைவானோ
    துகளாய்ப் போகும் உடலாமிதனை துடியிடை என்று நவில்வேனோ
    சகலமு முந்தன் சரணத்தில் வைக்க வீடணனு நானுமொன்றாமோ
  4. நேற்றாஇன்றா நாளும் மெய்யுடல் பொய்யாய் போவது மழகாமோ
    குற்றம் செய்வது குழவியின் குணமென களைவதுதானே வழக்கன்றோ
    பெற்றோர் என்னை பெற்றுக் களைத்தனர் போதும் பிறவிவோயாதோ
    சற்றும் என்னை சிறிதும் பார்க்கா வுறக்கம் சற்றுகளையாதோ
  5. வேதம் சொல்லும் நெறியும் வாகாய் என்னை சாராதோ
    போதம் கொண்டு புலம்பும் என்னில் பார்வை சிறிதுவாராதோ
    ஏதும்எனக்கு சொந்தம் இல்லை இத்தகை மந்திரம் அறியேனோ
    போதும் போதும் உந்தன் உறக்கம் கருடனிலேறி வாராயோ
  6. பத்துப்பத்தாய் பாரினில் நீயும் பிறந்தது உலகோர் கூற்றாமே
    இத்துவிழுமுன் உந்தன் உருவை என்னில் நீயும் காட்டாயோ
    கத்தட்டும் நன்றாய் காணலாம் பிறகென மெத்தன முனக்குவரலாமோ
    பொத்தென இவ்வுடல் போவதன் முன்னே பரியினிலேறி வாராயோ
  7. ஏச்சும் பேச்சும் இச்சக மாந்தர் இயல்பதுனானும் அறிவேனே
    மூச்சது நிற்குமுன் மேனியுன் நிழலது மனமதில்சற்று படராதோ
    துச்சமாயுடலதை துறந்திட வெனக்கு துணிச்சலு மில்லை யறியாயோ
    அச்சமதகன்றிட அச்சுதன்நீயொரு அழகான குருவாய் அன்புடன் வாராயோ
  8. கண்ணெனக் காக்கும் எண்ஞாண் உடலிதை எமனெடுத் தாள்வானோ
    குண்டலி யதனில் கூடிடும் அசபையை கொடுமனம் ஜபித்திடுமோ
    பண்டைய முனிவரின் புராண சாத்திரம் பிழையிலை யறிவேனோ
    கண்ணொளி போனாலும் கதறிட மனமுண்டு காசினி மறைந்திடுமோ
  9. வேதம் மறந்ததால் வேதியர்க்கோர் மழை என்னால் பொய்யாச்சே
    பாதம் பணிதேன் பக்குவம் பெற்றிடவோர் பதமதை தாராயோ
    இதமாக அருள்வதில் இறைவனே உனக்கோர் எதிரும் உண்டாமோ
    விதவிதமாக புலம்பி யென்னாவி வீணில் மடிவதில் புகழுனக்கோ
  10. வேதம் படித்தா லுய்வேனோ வேட்கைவிட்டகல்வேனோ
    நாதம் பாடிட அறிவேனோ நாட்கள் பலவும் நகர்ந்திடுமோ
    சேதம் ஆகும் உடல்தன்னில் சார்ந்து என்றும் நிற்பேனோ
    பாதம் போற்ற எந்தன் வாக்கு பரவசமாக நின்றிடுமோ
  11. கொய்தே மலரை கையால் எடுத்து கொற்றவள் பாதம் வைப்பேனோ
    பொய்யா புலவன் குறளில் கூறிய கொள்கை யானும் அறிவேனோ
    மனமது இன்று இறந்திடுமோ நாளும் நல்ல நாளிதுவோ
    தனமது வருமோ என்கூட இயல்பை நானும் அறிவேனோ
  12. அன்னம் சுவைத்து அறிவை மறந்து பின்னம் பிறவி பிறப்பேனோ
    இன்னும் கர்மம் எதுவோ செய்து இயல்பை மறந்தலைவேனோ
    உன்னும் நினைவை உடனே தொலைத்து உய்யும் வகையை உறுவேனோ
    மன்னும் மாய்கை மனதில் துறந்து மேவும் சுழலை வெல்வேனோ
  13. பட்டம் பெற்றும் பகுக்கும் அறிவை பாங்காய் பெறவும் வல்லேனோ
    இட்டம் கொண்டு ஈசன் தாளை இருத்தி மனமும் மகிழ்வேனோ
    விட்டம் நோக்கி விழலாய் நேரம் வீணாய் தொலைத்தழுவேனோ
    சட்டம் போட்டு செய்யும் வினையை அறுத்து உன்னை தொழுவேனோ
  14. பிறந்தேன் இறந்தேன் இடையில் வாழ்ந்தேன் என்ன வாழ்விதென்பேனோ
    கறந்த பாலில் கன்னல் நெய்யும் தின்றேவுலகில் அலைவேனோ
    திறந்த வாசல் தன்னில் திருமால் தாளை இருத்த வல்லேனோ
    மறந்தும் கோபம் மனிதர்மீது பாயும்நிலையைக் கடப்பேனோ
  15. வருவாய் வருவாய் இறைவா நானும் வருவாய் வாழ்க்கை மறப்பேனோ
    திருவாய் உந்தன் சீர்மை பயக்கும் வழியில் சென்றுய்வேனோ
    கருவாய் குழியில் கிடந்தே வுழலும் காட்சி மீண்டும் காண்பேனோ
    குருவாய் வந்து குணத்தை கொடுத்த கழலை என்றும் மறவேனோ
  16. (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

காணாமனமே உனைக் கண்டுவிட்டேன் வீணாய் உனக்கேன் இவ்வலைச்சல்
தூணில் சிம்மம் இருக்கின்றாரவர் காணா துன்னை காக்கின்றார்
பேயாய் அலைந்து புலம்புகிறாய் பேயின் கரும்பது கசந்திடுமோ
காய்த்த பிஞ்சுதான் கனியாகும் தேய்த்த பின்தான் பொன்னொளிரும்

  1. காலன் கதவருகில் காத்துள்ளான் நாலு பேர்கள் நடுவிலுள்ளார்
    காலில் விழுந்து கதறினாலும் நூலில் உள்ளது நடந்தேறும்
    பாலும் தேனும் படைத்து விடு பாதகமாயினும் தரும்வீடு
    ஒலம் கேட்பதற்குயிர் உண்டோ உண்மை தன்னை உணர்ந்துவிடு
  2. சிதையை மூட்டி சென்றிடுவார் சிகைக்கு ஏனோ அலங்காரம்
    பதைபதைக்க வேண்டாவோ பணத்தை ஏனோ மண்ணில் புதைக்கின்றாய்
    கதைகள் கருத்தோ டிருக்கையிலே காட்சியி லேனோ மயங்குகிறாய்
    விதைக்க விதைனெல் புதைக்கின்றாய் விளைச்சல் தருவதவனன்றோ
  3. மெய்வாய் மூக்கு கண்செவிகள் கடைக்கு வாரா கடைசியிலே
    தாயின் முலைப்பால் வேர்வையுடன் இன்னமும் குடிக்க ஏனாசை
    மேயும் மான்மேல் ஆசைவைத்த மைதிலி கதையை அறியாயோ
    வேயும் கூரையில் கடிதாசி வைத்தே வுன்னை மறந்திடுவார்
  4. ஆட்டம் பாட்டம் எல்லாமே அந்தகன் ஓலை வரும்வரையே
    ஊட்டம் தருகின்ற உணவெல்லாம் ஓர்நாள் சீரணம் ஆகிடுமே
    கூட்டம் தன்னை விலக்கிவிடு கூப்பிட்டால் சென்றுவிட வேண்டும்
    பாட்டம் பாட்டமாய் மழைகொட்ட போய்நில் கோவர்த்தனத்தின் குடையினிலே
  5. இறந்தபின்னர் எங்கு செல்வாய் எண்ணம் சிறிது எண்ணிவிடு
    கறந்த பாலது முலைபுகா கவிதை நீயும் அறியாயோ
    துறப்பதற்கு துணை யெதற்கு தனித்தே தரணியை விடவேண்டும்
    மறப்பதற்கு மனமெதற்கு மரணம் என்பது தனிச் சொல்லே
  6. படுக்கையில் வீழ்ந்த பிதாமகரை பாவம் இவரென விட்டானோ
    உடுக்கை கைக்கொண்ட உருத்திரரும் ஓர்நாள் உலகை மறப்பாரே
    கடுக்காய் கஷாயம் குடித்தாலும் காலன் வராமல் செல்வானோ
    மிடுக்காய் சொக்காய் மேனியிலே மாய்த்திட மறக்குமோ மெய்கூற்று
  7. இன்றே குருதாள் இருத்திவிடு இதைவிட வேறொரு வழியில்லை
    நன்னாள் எதுவென பஞ்சாங்கம் நோக்கிட வேண்டாம் நேரமில்லை
    பொன்னாள் இன்றென போட்டிருக்கு பக்கம் புரட்ட தேவையில்லை
    அன்னாள் வருமுன் வேண்டிவிடு அருகில் இருக்குது அருட்சக்தி

(வேறு)

  1. பத்தினி ஓர்வழி புத்திரன் ஓர் வழி
    சுத்தி உள்ளவர்க்கோ சுற்றிவர பலவழி
    எத்திக்கு செல்வதென்று எனக்குத் தலைவலி
    பத்திக்கு இரங்கும் பரந்தாமா வழிகாட்டு
  2. பின்வழியால் நெருக்குண்டு பிறந்திடவோ அவ்வழி
    மனக்லேசம் மாய்த்திடவோ மண்ணிதிலே பொய்வழி
    தனதான்யம் தேடியே திக்கெல்லாம் சேர்வழி
    அனவரதம் அன்னையுந்தன் அருள்பெறவோ எவ்வழி
  3. எழுந்தவுடன் பல்துலக்கி வென்னீரில் தான் குளித்து
    பழங்கள் காய்கறிகள் பசிதீர பலபுசித்து
    பழங்கதைகள் தான்பேசி பல்லிளித்து புறம்பேசி
    கழித்தேன் கலிகாலம் காத்திட யார்வருவார்
  4. யமனோலை கைக்கொண்டு கிங்கரர்கள் வருவாரோ
    சமயமிது நல்லதென்று செத்திடவோ நான்பிறந்தேன்
    குமைந்து கவலையிலே காலமெலாம் கழிப்பேனோ
    அம்மையுடன் அத்தனே இப்போதே வந்தருள்வாய்
  5. அயனாவரம் சென்றிட்டால் அடுத்த நாள் வந்திடலாம்
    இயமனோடு செல்வதென்றால் எப்போது திரும்புவது?
    கயமை மனமே நீ கொற்றவளை வணங்கிவிடு
    தயவுடனே திரும்பிடலாம் திருவருள் துணையோடு
  6. பொய்பேசி பிதற்றும் மனம் பொல்லாத பேயின்மனம்
    தாய்மடியில் தான்தூங்கி போக்கிடுமே பலகாலம்
    நாய்குலைத்தால் நடுநடுங்கும் நாணமிலா எந்தன் மனம்
    வாய்வலிக்க பேசினிற்கும் வாயதுவும் மூடாதோ
  7. இன்றே இப்போதே இனிய நாள் எழுந்துவிடு
    அன்றே சொல்லிவிட்டார் ஆன்றோரும் பஞ்சாங்கம்
    கன்றுக்காய் இருக்கும் பால் குடித்தல் பாவமன்றோ
    என்றேநான் ஈடேற இறைவனே என்முன்னே வந்துவிடு
  8. பசிக்கு மலைபோலே பலகாலம் உணவுண்டேன்
    நிசிக்கு தூங்கியே நாளெல்லாம் போக்கிவிட்டேன்
    உசிதம் இவன் என்று உருத்திரனார் நினைப்பாரோ
    கசியும் குருதியிலே இன்னும் குறுகிப் படுப்பேனோ
  9. வெறுத்து ஒதுக்கிடவோ வேதாந்தம் பயிலவில்லை
    கறுத்த வானமது கொட்டி மழை பெய்யவில்லை
    உறுத்தும் மனமதிலோ ஓங்காரம் ஒலிக்கவில்லை
    கறுத்த மணிவண்ணா கண்ணெதிரே தோன்றுவையோ
  10. திருமலை வசிப்பவனே திருவருள் தருவாயோ
    உருவளர் உடலாரை உந்தன்வசம் வைப்பாயோ
    கருவளர் கர்மம்தன்னை கொன்றிட வருவாயோ
    தருவளர் தரணியிதிலே தத்துவம் அருள்வாயோ

(வேறு)

  1. உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே
    பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே
    தண்டிப் புலவன் போலே இல்லை எந்தன் தளையது தட்டும் வெண்பாவே
  2. பணத்தைக் கேட்பார் குணத்தைப் பாரார் பாரின் மக்கள் சேர்ந்தேனே
    கனத்தின் வேதம் கடுகும் கல்லா கல்மனத்தோடு வாழ்ந்தேனே
    சினத்தைத் திருமணச் சீராய் பெற்று சிறிய வாழ்க்கை வாழ்வேனே
    வனத்தில் வாழும் விலங்கைப்போல வணங்கா தலையைக் கொண்டேனே
  3. நாளும் கோளும் நன்மை செய்யும் நானும் அதனை அறியேனே
    மூளும் இருளில் மூழ்கி நானும் முத்துக் குளிப்பதாய் நினைத்தேனே
    தோளைக் குலுக்கும் தோளியர் மீது தீராக் காதல் கொள்வேனே
    தேளின் பெருமாள் கோயில் சென்று தேறும் வகைநான் தெரியேனே
  4. குருவும் வந்தார் குலத்தில் சேர்த்தார் திரும்பவும் தரணியில் வீழ்வேனோ
    கருவும் இருட்டு கண்ணும் குருடு தெருவில் நடப்பது சரியாமோ
    உருவம் பலவும் உலகில் எடுத்து உழல்வது போதுமோ உணர்வேனோ
    கருவம் கொண்டு கவிபல இயற்றி பெருமையில் பொழுதும் போய்விடுமோ
  5. உடலின் உள்ளே உறுபொருள் கண்டு ஓம்புதல் மூலன்போல் தெரியேனே
    கடலின் உப்பு கடல்போல் உண்டு காயம் இதனை காப்பேனே
    மடலும் வந்தால் மேற்கூரை சொருகும் மேதினி சத்தியம் என்பேனோ
    குடலும் குரம்பையும் தோயும் கருவில் குந்தியே அமர்ந்திட நினைப்பேனோ
  6. குந்தியைபோலே கொடுத்திடு துன்பம் என்றே உரைத்திட வீரமில்லை
    அந்தி சாய்ந்திட அமர்ந்து வணங்கிட புந்தியில் நெறியும் புகுந்திடுமோ
    வந்தியத்தேவன் கதையில் வந்திடும் சிவிகையில் செல்வது யாராமோ
    நந்தினி மாயையோ அந்தகன்* வருவனோ அந்தத்தில் தெரியவந்திடுமோ

(* அந்தகன் என்பது இருபொருள் – இயமன் அல்லது மதுராந்தகன்)

  1. இரசமும் கூட்டும் மலைபோல் உண்பேன் நாமரசத்தை சுவைப்பேனோ
    சரசம் கொண்டே சாத்திரம் மறந்தேன் சாதகம் எதுவும் செய்வேனோ
    முரசும் கொட்டும் மாலையும் கட்டும் மரணம் சுமக்க மறப்பேனோ
    தரிசாம் நிலத்தில் தண்ணீர் விட்டால் தானியம் அதுவும் விளைந்திடுமோ
  2. ஒன்றைக் கொடுத்து இரண்டைக் கேட்பார் மூன்று உலகிலும் பொதுவாமே
    நான்காம் மறையும் ஐந்தாம் புலனும் ஆறாய் கொண்டு எழுவேனோ
    எட்டும் தூரம் எங்கேயோ? ஒன்பது ஆவரணம் கடப்பேனோ
    ஓட்டும் பத்தின் திசையில் தயரதன் ரதமாய் உடலை அறிவேனோ

(வேறு)

  1. பத்து மாதம் அன்னை வயிற்றில் துன்பம்
    கத்தி வெளி வந்தால் குடலில் ஒரு துன்பம்
    தத்தி தவழுகையில் தரையில் படுந்துன்பம்
    எத்தி எழுகையில் இடறி விழுந்துன்பம்
  2. விளையாட்டில் வழுக்கி விடும் துன்பம்
    வேளா வேளைக்கு வாட்டும் பசித்துன்பம்
    காளை பருவத்தில் காமம் பெருந்துன்பம்
    மூளை கசக்கியே அலுவலில் வரும் துன்பம்
  3. பிள்ளை பிறக்கையிலே பாசம் ஒரு துன்பம்
    பிள்ளை வளர்ப்பிங்கே பாடாய் படும் துன்பம்
    உள்ளம் கடுஞ்சொல்லால் உலகோர் தரும் துன்பம்
    வெள்ளம் பனி புயல்கள் இயற்கை அது துன்பம்
  4. வியாதி வெக்கைகள் உடலுக்கது துன்பம்
    யயாதி போல் முதுமை வருமோயென துன்பம்
    ஓயாமல் ஒழியாமல் தொடரும் இத்துன்பம்
    வாய்கோணல் இழுக்க மரணம் சுடும் துன்பம்.
  5. இத்தனை துன்பத்திலே இடையில் ஒரு துளியின்பம்
    அத்தனை மறவாத ஐந்தக்ஷரம் தரும் இன்பம்
    பித்தா பிறைசூடி என போற்றல் வாக்கின்பம்
    சுத்தாதே மனதே நீ சுந்தரனே மனத்தின்பம்

(வேறு)

  1. விதி கூறும் வேதங்கள் விடை கூறும் வேதாந்தம்
    நதியாடும் நல்லெண்ணம் நாட்கிழமை நல்விரதம்
    எதிலும் செல்லாமல் இருக்குது எந்தன் மனம்
    பதியான பரமேசா பரிகாரம் பகன்றிடுவாய்
  2. தினம் குளித்து நீர் பூசி நடிக்கவும் நானில்லை
    கனம் கோர்ட்டார் என்பானே கடைசியில் (சித்திர) குப்தனுமே
    சினம் செருக்கு இதுதவிர சீராக ஏதுமில்லை
    தனம் போதும் என்ற எண்ணம் தீர்மானமாக இல்லை
  3. கோவிந்தா இராமாவென்று கோஷம் போடவில்லை
    தாவித்திரியும் மனம் தக்கணமும் நிற்கவில்லை
    சாவித்திரி போன்று சாவை வெல்ல திறமில்லை
    பாவித்து பூஜை செய்யும் பாத்திரமும் நானில்லை
  4. அடைகாக்கும் புறாகூட கோபுரத்தை சுற்றி வரும்
    மாடவீதி பிராகாரம் சுற்றினாலும் பலனுண்டு
    நாடகம் நடித்தாலும் நாடிடலாம் மண்டபத்தில்
    கடைவீதி நாய்போல சுற்றி வீணாய் சுழல்கின்றேன்
  5. பரிவுகாட்டும் குரு நாதா புலம்புவதைக் கேட்பாயோ
    உரிமையுடன் உபதேசம் உட்செவியில் உரைப்பாயோ
    கரிசனம் காட்டாது காலம் பல கடத்துவதேன்
    புரிபட வில்லை ஐயா புனர்ஜன்மம் எனக்குண்டோ
  6. சிறிதே வாழ்நாள் சுழலும் மனதே சிந்தனை செய்வாயே
    கரிநாள் இன்றென காலம் கடத்தி கடவுளை மறப்பாயே
    திரியும் பாலென வெள்ளை மனதை தீமையுரியில் வைப்பாயே
    புரியும் உண்மை பிறக்கும் உடலில் பரத்தைக் காண்பாயே
  7. உள்ளே இருக்கும் ஒளியை காணாய் வெளியே திரிவாயே
    வெள்ளப் புனலாய் கருணை இருக்க கள்ளதீயில் மிதப்பாயே
    அள்ள அள்ள குறையா அன்பை அனைவருக்கும் அளிப்பாயே
    முள்ளாய்க் குத்தும் பலாவின் உள்ளே இனிக்கும் தேனேநீ
  8. அன்றே தந்தான் அழகிய குருவும் அத்தனை உபதேசம்
    இன்றே அதனை இதயம் பொருத்தி இறையைக் காண்பாயே
    கன்றாம் பசுநீ பதியாம் இறைவன் காலடி செல்வாயே
    கொன்றே அகந்தை கொளுத்திப் போடு கிடைக்கும் பரயின்பம்
  9. தின்னும் கவலை தூரத் தள்ளு திருவருள் அருகினிலே
    பொன்னும் மணியும் பூணும் லலிதை பாதம் பணிவாயே
    சிந்தையில் வீணாய் சங்கடம் ஏனோ சொந்தம் அவளன்றோ
    சிந்தா மணியில் சந்ததம் அருள சக்தியும் உள்ளாளே
  10. கர்மம் தன்னை கைவிட்ட பேருக்கு கடிதாம் முத்தியுமே
    கர்மம் செய்தும் பலனை விட்டால் முத்தியும் கையினிலே
    உர்வாருகம் உடையும் உடலாம் பூண் கட்டி வைப்பாயோ
    கர்வம் தன்னை உடனே விட்டு கழலினைப் பணிவாயே
  11. பிழையினில் பெரும்பிழை பேதை நான் புரிந்தனே
    மழையினில் தூசாக மறைத்து நீ அருளுவாய்
    தழைத்திடும் அன்பிலே திளைத்து நான் நின்றனே
    அழைத்திடும் காலனை உதைத்த பாதம் உன்னதே
  12. பத்து மாதம் உன்னுதரம் உதைத்து நான் உருண்டனே
    கத்துவேன் கதறுவேன் உன் கண்ணில் நீர் பெருகுமே
    பெத்துபிழைத்தனை பாரமாய் எனை சுமந்தனை
    ஆத்தாளை மறந்தபேர்க்கு அத்துவிதம் சித்தியோ
  13. சுட்டகாசைப் பொன்னாக்கும் சூத்திரம் அறிகிலேன்
    விட்டகுறை தொட்டகுறை வேதாந்தம் சற்றறிவனோ
    விட்டத்தில் சொருகும் மடல் விழுமுடல் சுமப்பனே
    பெட்டகத்தில் வைத்து பூசை தினம் தினம் செய்வனே
  14. நினைவில் நிற்கும் நாளெலாம் ஆவரணம் ஒன்றதே
    கனவில் காணும் காட்சியோ இரண்டான பூஜையே
    தன்னில் தோயும் சுழுத்தியும் மூன்றான தன்மையே
    என்னில் உன்னைக் காண்பது ஈச்வர விசாரமே
  15. பண்ணி பண்ணி பூஜையில் பாத்திரம் விரிப்பனே
    எண்ணி எண்ணி ஷன்னவதி ஏற்றவாறு கூறுவேன்
    கண்ணை மூடி காட்சியை கருத்தினுள்ளே கண்டபேர்க்கு
    திண்ணையிலே தூங்கினாலும் திண்ணமதே பூஜையாம்
  16. அறிவு நான் அனந்தம் நீ ஆக்கையுள் பொருளும் நீ
    துரீயமும் அதற்குமேலும் தூங்கும் வகை அறிந்திடில்
    பெரிய பேரைக் கொண்ட பெரும் நாயகியாம் உந்தனை
    வரித்து எந்தன் உள்ளத்தில் படைத்து பூஜை செய்வனே
  17. குறித்து வைத்த ஜாதகத்தில் கூற்றின் நாள் இருக்குமே
    பறித்து வைத்த பூவினை பாதத்தில் தூவிடின்
    குறித்த நாளில் கூற்றுவன் கொண்டுபோக மறப்பனே
    உறிக்கும் சட்டை சர்ப்பம்போல் உடலிதை உணர்வனே
  18. கரைத்து நான் குடிக்கவில்லை கீதையும் புராணமும்
    உரைத்து பார்க்க வில்லை எந்த உரையினது உண்மையும்
    விரைத்து நிற்கும் மாய்கையும் வேகம் குறைத்து விலகுமோ
    நரைத்துபோகும் முடியைக் காண விவேகமும் வாருமோ
  19. காலை மாலை சந்தியில் அருக்கியம் அளிப்பனே
    சூலை தீர்க்கும் திருநீறு நெற்றியில் அணிவனே
    வாலை உந்தன் தாளைப் பற்றி வாக்கிலே உரைப்பனே
    ஓலை வரும் முன்னர் எந்தன் உருவினை உணர்த்துவாய்
  20. முன்பிறவி நானிருந்தேன் இப்பிறவி வாழ்கின்றேன்
    பின்பிறவி எனக்குண்டு புரிவதென்ன?
    முப்பிறப்பும் இருப்பதனால் முக்காலம் நானிருப்பேன்
    இப்போது புரிந்து கொண்டேன் எப்பொழுதும் நானுண்டு
  21. உண்டுண்டு உறங்குகிறேன் உலகினிலே உலவுகிறேன்
    வண்டுதேடும் பூமலரை பறித்தெடுத்து போடவில்லை
    தண்டுள்ள தாமரையின் யோகனிலை நானறியேன்
    கண்டுள்ளே கடவுளினை கைதொழுது நின்றறியேன்
  22. தினம் தினம் சோறுதின்று திரிவதன்றி வேறறியேன்
    கனம் கனம் வேதகனம் கற்றறியேன் கொள்கையிலேன்
    மனம் மனம் சுழலுவதால் ஒரு நொடியும் நின்றறியேன்
    சினம் சினம் கொண்டு மிக எளியோரை ஏசுகிறேன்
  23. தனத்திற்கு வேலை செய்து திருவருளில் ஏக்கமிலேன்
    வனத்திற்கு செல்வதற்கோ மனதினிலே துணிவில்லை
    தினத்திற்கும் விழலாக அலைகின்றேன் அறிவுமிலேன்
    சனத்திற்கு சனம் மாறும் காலத்தில் கட்டுண்டேன்
  24. கைபேசி கைவிட்டால் படபடப்பாகும் மனம்
    தைமாதம் பிறக்குதப்பா தயை செய்ய வேண்டுகிறேன்
    சுதை வண்ண கோபுரத்தை கண்ணிரண்டால் காணுகிலேன்
    பதைக்குதப்பா என்நெஞ்சம் பாதுகாக்க வேண்டுகிறேன்
  25. வேணமட்டும் உண்டாச்சு இன்னும் வேணுமோ காய்கறிகள்?
    ஆனமட்டம் அன்னமது ஆக்கியே உண்டாச்சு
    தேனமுது திகட்டும்வரை தினம் தினம் குடிச்சாச்சு
    கானமது காதினிலே குடையும் வரை கேட்டாச்சு
  26. இன்னும் ஆசை தீரவில்லை ஏக்கமது ஏறவில்லை
    மன்னும் விதி இனியுமுண்டோ மனமது இறக்கவில்லை
    தன்னடக்கம் தகையவில்லை திரிபுரையை துதிக்கவில்லை
    மண்ணடக்கம் ஆகும்முன்னர் மாதாவை எண்ணிவிடு
  27. துக்கமது தொலையவில்லை தூக்கமது கலையவில்லை
    மக்கள் மனை வைதும் வைராக்கியம் வரவுமில்லை
    சிக்கிய மீனாக துள்ளுகின்றேன் துவளுகின்றேன்
    பாக்கி வைத்த பிராரப்தம் கரைந்திடட்டும் கடலினிலே
  28. தானாக முன்வந்து தலையினிலே கைவத்தார்
    நானென்று எழுமிடத்தை நாடிடவே செய்தி சொன்னார்
    மானாக தாவினிற்கும் மனதினையே ஆண்டு விட்டார்
    ஏனின்னும் ஏக்கமப்பா குருதாளை வணங்கிவிடு
  29. அன்பு அன்பு என்று பேசி என்றும் உண்மை அன்பை அறிகிலேன்
    வம்பு வம்பு செய்யும் மனதை வோரிடத்தில் நிறுத்திலேன்
    சம்பு சம்பு என்று சொல்லி சங்கரனை தினம் பஜிக்கிலேன்
    அம்பு அம்பு கொண்டு அரனை அருச்சுனனாய் அடிக்கிலேன்
  30. கல்லாலே தினமடித்த சாக்கியரும் ஆகிலேன்
    பல்லாலே கடித்த பூசை கண்ணப்பன் நானிலேன்
    தில்லை வாழ் அந்தணராய் தோத்திரத்தை கூறிலேன்
    கொல்லையிலே மகமறைத்த அப்பூதி நானிலேன்
  31. அறுபத்தி நால்வரோ வாழும் தில்லை மூவாயிரவரோ
    உறுபத்தி ஆகிவிட்டேன் உண்மையை அறிவனோ
    கருப்பத்தில் காமேசி கருணையை ஊட்டினாள்,
    விருப்பத்தில் வேதமறை வேதாந்தம் கொள்வனோ?
  32. பிறவிக்கு ஆஸ்பதம் பிள்ளை குட்டி பாசமோ
    துறவிக்கு அன்னமிட துணைவியும் வேண்டுமே
    குருவிக்கும் குடும்பம் உண்டு கொஞ்சி பேசி குலவுமே
    கருவும் குணம் கொண்ட மனிதர் குருவியினும் சிறியரே
  33. சித்திரைக்கு சொக்கருண்டு வைகாசி விசாகமே
    பத்திரை மாத்தாக மனப்பக்குவதிற்கே பண்டிகை
    சுத்திரைத்தார் அரிசியை சுப்பிரமணி ஏழ்மையில்
    கத்திரைத்து பாடும் பாடல் காதில் விழ வில்லையா
  34. நித்திரைக்கு தினம் தினம் நாளும் பொழுதும் நகருது
    சத்திரமாம் இந்த வாழ்க்கை சுருதியும்கூட சொல்லுது
    பத்திரமாய் பகல்வேஷம் போட்டு நாளும் போகுது
    சித்திரத்தில் உள்ள காயை சீவித்தின்ன முடியுமோ
  35. மாய்கை வந்து மூடுதற்கோ மந்திரம் நான் சொல்வது?
    தாய்மை குணம் வருவதற்கே தந்திரங்கள் உதவுது!
    வாய்மை வெல்லும் என்ற சொல்லும் நம் நாட்டின் உயிரதே
    காய்ந்த விதை முளைக்குமோ கடவுள் மட்டும் அறிவரே
  36. போட்டெரித்து பொசுக்கிடு பிராரப்த வினைகளை
    சுட்டெரிக்கும் தீயிலே சோம்பலை கொட்டிடு
    வாட்டுகின்ற வெய்யிலில் கர்மவினை போட்டெரி
    மூட்டுகின்ற மூலத் தீ போகியென்னும் பண்டிகை

தொடரும்..,…..

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments