கவிதைப் பெண்ணே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன்
புவியினில் புலவர்கள் பற்பல படைக்கிறார்
குவிந்திடும் கற்பனை கடலென தருவாயே
நேர்நேர் நிரைநேர் இலக்கணம் அறியேன்
நேருக்கு நேராய் என்னுளம் நிற்பாயே
பாருக்குள் என்னை பாரதி ஆக்கியே
தேருக்குள் விருத்தம் தேர்ந்திட வைப்பாயே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன்
அன்பே சிந்தடி அறிவே எதுகை
என்னுள் நீயே என்றும் ஈற்றடி
உன்னுள் கலந்திடும் உணர்வே ஓசை
மன்னிய மாயையே மனதிலே வெண்பா
காலத்தின் கோலம் காட்டிடும் கலிப்பா
ஞாலத்தில் கொஞ்சம் விளையட்டும் துளிப்பா
நாலடி தன்னில் நவிலும் வெண்பா
பொலபொல எனவே புகன்றிட வைப்பாயே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன்
மனதின் கருத்து மண்ணிலே பதிக்க
அனவரதம் எந்தன் பாக்களில் வருவாயே
சினமும் குணமும் செந்தமிழ்க் கவியில்
தினமும் பொழிந்திட திருவருள் தருவாயே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
புவிமீ தெனையே புலவனாய் செய்வாயே
செவியினில் சிலம்பும் கவியினில் கலம்பகம்
கவித்துவம் அடைய கருணை புரிவாயே
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன்
ஏட்டினைத் தேடி எங்கெங்கோ அலைந்தான்
பாட்டன்சாமி நாதனும் நானல்லன்
குட்டமுனிதனை கும்பிட்டுனின்ற பாரதி நானல்லன்
கிட்டவந்தெனை கடைக்கண் பார்வையே நானும்கேட்கின்றேன்
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன்
சாதல் வந்தெனை சீக்கிரம் அழைக்குமுன்
போதம் கொண்டுனை பாடிட அருள்செய்வாய்
காதலி தன்னை திருமணம் செய்வது
பூதலம் தன்னில் புதியது இல்லையன்றோ
நாதலம் தன்னில் நுண்ணிய கவிதையும்
வாதிற்கழைக் கையில் வேகமாய் வந்திடுவாய்
கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே
காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன்
![]()