எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்குண்டு. அம்மன்னரைப்போல் நாமும் நடந்து கொண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்தன்னம்பிக்கைக் கவிதை.
பேரரசன் என்று உனை நினைத்துக்கொள்ளு
தூரமில்லை போகும்பாதை நம்பிக்கைக்கொள்ளு
தேரினிலே செல்லும்வகை தெரிந்து கொள்ளு
ஈரமான மனம்தானே பரி பூட்டியதேரு
நானென்னும் அகந்தைதான் உந்தன் பகைவர்
தேனான இறைவன் பெயர் சொன்னால் மறைவர்
மானென்னும் மமதையை நீ வேட்டையாடு
சேனையென சாத்திரத்தை துணையாய்க் கொள்ளு
ஐம்புலனே உன்னாட்டு மக்கள் அறிவாய்
நம்பிக்கை உன்னரசின் நவரத்தினமாம்
கம்பியிலே சிறைவைப்பாய் கர்வம்தன்னை
வம்பிற்கு வரும் வினையை வில்லால் கொல்லு
மனத்தளர்ச்சி எனும் சூழ்ச்சிவலை பின்னப்பார்க்கும்
சனங்களின் துணையோடு அதனை வெல்லு
கனவெனவே கட்ட நட்டம் மறந்து வாழு
சினமென்ற சரக்கை வெளிநாட்டிற்கனுப்பு
செய்யும் தொழில்தானுன் வாழ்வின் துணையாம்
மெய்யாய் நீயுன் மனைவியிடம் நடந்து கொள்ளு
கையாலே கருணையெனும் தடி பிடித்துகொள்ளு
மெய்யிற்கு அறிவென்னும் பட்டணிந்து கொள்ளு
தராதரம் அறிந்து கொண்டு நட்பை நாடு
போரென்று வந்து விட்டால் வாளை உருவு
தேரைத்தான் நிறுத்தியவன் மலர்கொடியினுக்காக
பாரியைப்போல் பரிவு காட்டி பக்குவம் கொள்ளு
காமமெனும் கள்வர்பயம் குடிமக்களுகுண்டு
சாமதான பேதத்தாலவரை சிறையில் தள்ளு
சேமத்தை செய்துனாளும் சிவனை தொழுவாய்
ஆமிதுவே ஆளும்வழி அறிந்து கொள்வாய்
![]()