ஓடியலையும்என்னெஞ்சே
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
மூடிதிறக்கும் அரவமென
மூச்சு விடுதல் ஏனுனக்கு
தேடிதிரிதல் வேண்டாவே
பாடிப்பரவசம் அடைவாயே
நாடி நமனும் நிற்கின்றான்
நாட்கள் நகர்ந்து செல்கிறதே
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
அங்கும் இங்கும் அலைகின்றாய்
பொங்கும் இன்பம் உன்னுள்ளே
தங்கும் வகை நீ தேடாயோ
எங்கும் உள்ளான் என்னிறைவன்
எதை நீ தேடி அலைகின்றாய்
பதைபதைக்கும் நெஞ்சமதில்
பரம்பொருள் இருப்பதை பார்ப்பாயோ
முலவர் உள்ளே இருக்கையிலே
உற்சவ மூர்த்தியாய் வலமெதற்கு
கற்சிலை கூட கரைந்து விடும்
மனமே நீயோ கரையவில்லை
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என
ஆயுள் தன்னை இழக்கின்றாய்
தேட்டம் உள்ளே திரும்பி விடின்
வாட்டம் எல்லாம் விலகிவிடும்
கூட்டம் தன்னில் நின்றாலும்
நாட்டம் உள்ளே நிறுத்திவிடு!
பாட்டன் பாரதி சொன்னதுதான்
பார்வை தன்னை மாற்றிவிடு!
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
சத்தம் போடும் புலனைந்தும்
சட்டை செய்யாமல் புறந்தள்ளு!
“ஆகாரத்தை போட்டாச்சு
அடங்கித் தூங்கிப் போய்விடென”
அப்புலனை நீ அறிவுறுத்தி
அறிவால் அகந்த்தையை அகற்றிவிடு!
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
விரிந்திடும் மாய உலகினிலே
இருந்தென்ன சுகத்தை நீ கண்டாய்!
கருத்துடல் போகும் கடைசி நாள்
கடைத்தேற இன்னும் ஏன் தயக்கம்?
புடைதெழும் கோபதாபங்கள்
தடைசெய்து நீயும் அடக்கிடுவாய்!
விடையும் தெரியும் உன் கணக்கில்
விடையேறும் சடையனை சரணடைவாய்
குடைந்திடும் வினைக்குப்பை உன்னுள்ளே
துடைத்தெறிந்ததனை மறந்திடுவாய்
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
கடைபுறக்கடையில் காலனுள்ளான்
கண்மூடி இன்னும் ஏனுறக்கம்?
இன்றே விழித்து விடைதேடு
கொன்றிடும் கூற்றும் அகன்றுவிடும்
தாண்டவன் சிவனவன் ஆடிடுவான்
மாண்டிடும் அனைத்தும் கடைசியிலே
வேண்டிடு இறைவனின் இருதாளை
ஆண்டுன்னை அவனும் தயைபுரிவான்
மீண்டுமுன் பிறப்பை தடைசெய்வான்
மூண்டிடும் மாயையை மறையச் செய்வான்
தூண்டுகோல் இன்று இக்கவிதை
தாண்டிட வைத்துன் தலை நிமிர்த்தும்
ஓடியலையும் என்னெஞ்சே
ஓடிக் களைத்தல் அறியாயோ
![]()