சிவராத்திரி சிறப்புப் பதிவு
பெரியசாமி: என்னப்பா முத்து? விடியாத காலத்துல இந்த ஏரிக்கரை ஓரம் உக்காந்து என்னத்த யோசிச்சுக் கிட்டு இருக்க? கண்ணுல என்ன அப்பிடி ஒரு தண்ணி?
முத்து: அண்ணே… நிம்மதியே இல்லண்ணே. மனசுக்குள்ள ஒரு பெரிய பாரம். மனுஷனாப் பொறந்து எத்தனையோ தப்பு தண்டுகளைத் தெரிஞ்சும் தெரியாமலும் செஞ்சுட்டேன். இந்தப் பாவம் என்னை விடுமா? நரகத்துல போட்டு என்னை வாட்டுவாங்களே… இந்த அற்பப் பயலுக்கு விமோசனமே இல்லையா அண்ணே?
பெரியசாமி: முத்து… உன் மனசுல இருக்குறது பயம் இல்லை, அது ஒரு ஞானத்தோட ஆரம்பம். ‘தப்பு செஞ்சுட்டோம்’னு ஒருத்தன் என்னிக்கு நிஜமா வருத்தப்படுறானோ, அன்னைக்கே அவனுக்கு அந்த ஈசன் வழிகாட்ட ஆரம்பிச்சுடுறான். நீ சிவவாக்கியர் சொன்ன அந்த ஒரு பாட்டைப் படிச்சது இல்லையா?
முத்து: எந்தப் பாட்டுண்ணே?
பெரியசாமி: இதோ கேள்…
*அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்*
*நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்*
*பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்*
*பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.*
முத்து: இதுக்கு என்ன அர்த்தம்னே? அஞ்சும் மூணும் எட்டானா அது கணக்குத் தான அண்ணே? இதுல என்ன பெரிய ரகசியம் இருக்கு?
பெரியசாமி:அடப் பைத்தியக்காரப் பயலே! இது வெறும் கணக்கு இல்லடா, இதுதான் ‘பிரம்ம ரகசியம்’. அஞ்சுங்கிறது நமச்சிவாய – அந்த ‘சிவ பஞ்சாட்சரம்’. மூணுங்கிறது நாமத்திரயம் என்ற திருமால் மந்திரம். இன்னும் சில ரகசியங்களும் அடக்கம். சுருக்கமாச் சொன்னா, சிவமும் சக்தியும் சேர்ந்த அந்த மகா மந்திரத்தைத்தான் அய்யா சிவவாக்கியர் சொல்றாரு.
முத்து: அது எப்படி அண்ணே அஞ்சும் மூணும் எட்டாகாமப் போகும்? ‘எட்டாதாய்’னு சொல்றாரே?
பெரியசாமி: அங்கதான் வேதாந்தம் இருக்கு. இந்தக் கணக்கு உன் அறிவுக்கோ, புத்திக்கும் எட்டாது. இது ‘அநாதி’ – அதாவது உலகமே தோன்றுறதுக்கு முன்னாடியே இருந்த ஒலி. வேதங்கள் எல்லாம் ‘ஓம்’னு தொடங்குதே, அந்த ஓங்காரத்தோட உள்ளீடுதான் இது. நீ ‘ந-ம-சி-வா-ய’ன்னு சொல்லும்போது, உன் உடம்புல இருக்குற அஞ்சு பூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) சுத்தமாகுது.
முத்து: அண்ணே… ஆனா நான் செஞ்சது சாதாரணத் தப்பு இல்லண்ணே. பஞ்சமா பாதகங்கள்னு சொல்றாங்களே… அப்பிடிப்பட்ட தப்பைச் செஞ்சவனையும் அந்தச் சிவபெருமான் ஏத்துக்குவாரா?
பெரியசாமி: முத்து, இங்க பாரு. பஞ்சமா பாதகம்னா என்ன? கொலை, களவு, மது அருந்துதல், குரு நிந்தை, அப்புறம் இந்த நாலு பாவத்தைச் செய்றவங்க கூடச் சேர்றது. இதுதான் பெரிய பாவம்னு சாஸ்திரம் சொல்லுது. ஆனா, சிவவாக்கியர் என்ன சொல்றாரு பாரு… ‘நூறுகோடி’ செய்தாலும், அதாவது எண்ணவே முடியாத அளவுக்கு நீ பாவம் பண்ணியிருந்தாலும், இந்த ‘நமசிவாய’ங்கிற மந்திரத்தை மனசு உருகிச் சொன்னா, அது ‘பஞ்சு’ மாதிரிப் பறந்து போயிருமாம்!
முத்து: பஞ்சு மாதிரியா? அவ்வளவு பெரிய பாவ மூட்டை எப்படி அண்ணே லேசாப் போகும்?
பெரியசாமி: ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் கேளு. ஒரு பெரிய மலை அளவுக்குப் பஞ்சு மூட்டையை அடுக்கி வச்சிருக்காங்கன்னு வையி. அதை அப்புறப்படுத்த ஒரு ஆயிரம் வருஷம் ஆகுமா? இல்லைடா முத்து… ஒரே ஒரு நெருப்புக்குச்சி போதும். அந்த ஒரு குச்சி அந்தப் பஞ்சு மலை மேல விழுந்தா, அடுத்த நிமிஷம் அந்த இடத்துல சாம்பல் கூட இருக்காது. காத்துல பறந்து போயிரும். அந்த நெருப்புக்குச்சிதான் ‘சிவநாமம்’. உன் பாவம் பஞ்சு, அவனோட நாமம் நெருப்பு.
முத்து: அண்ணே… கேக்கவே மெய் சிலிர்க்குதுண்ணே.
பெரியசாமி: ‘நீருருச் செபிப்பீரேல்’னு அய்யா சொல்றாரு. அப்படின்னா என்ன தெரியுமா? உடம்புல நீரை (திருநீற்றை) பூசிக்கிட்டு மட்டும் சொன்னா போதாது. உன் கண்ணுல இருந்து நீர் வரணும். ‘சிவபெருமானே… உன்னைத் தவிக்க விட்டுட்டு நான் எங்கெங்கோ அலைஞ்சேனே… என்னை மன்னிச்சு ஏத்துக்கோ’ன்னு நீ மனம் உருகிச் சொன்னா, அந்தத் ‘தண்ணீருக்கு’ ஒரு சக்தி இருக்கு. பனி உருகுற மாதிரி உன் வினை எல்லாம் உருகி ஓடிடும்.
நான்மறைகள்னு சொல்றாங்களே – ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் – அந்த நாலு வேதத்தோட நடுவுல ‘ஸ்ரீ ருத்ரம்’ இருக்கு. அந்த ருத்ரத்தோட மையத்துல ‘நமசிவாய’ இருக்கு. வேதமே ஒரு நகையாவோ, கிரீடமாவோ இருந்தா, அதுல இருக்குற வைரம் தான் இந்த மந்திரம்.
முத்து: அப்போ நான் இப்போவே அந்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிக்கட்டுமா அண்ணே?
பெரியசாமி: சொல்லு முத்து… ஆனா ஒண்ணு. ஒரு பெரியவரிடம் கேட்டுக்கொண்டு, வெறும் உதட்டுல சொல்லாதே. ‘நெஞ்சிலே நினைந்துகொண்டு’னு பாட்டுல இருக்கு. உன் இதயத்துல சிவனை இருத்தி, ‘அப்பா… நீதான் நான், நான் தான் நீ’ன்னு அந்த அத்வைத உணர்வோட சொல்லு.
நம்ம ஊர்ல இருக்குற குளத்துல பாசி படிஞ்சிருக்குமே பார்த்திருக்கியா? கல்லை எறிஞ்சா பாசி விலகும், அப்புறம் மறுபடி மூடிக்கும். ஆனா, சூரியன் வந்தா அந்தப் பாசி எல்லாம் செத்து, தண்ணி பளிங்கு மாதிரி ஆயிரும். உன் பாவம்ங்கிற பாசியை நீக்க உன் ஞானச் சூரியனான சிவனை உள்ளே கூப்பிடு.
முத்து:அண்ணே… இவ்வளவு நாள் இது தெரியாம இருட்டுக்குள்ள கிடந்தேனே. ‘நமசிவாய’ன்னு சொன்னா எமதர்மன் கூடக் கிட்ட வரமாட்டான்ல அண்ணே?
பெரியசாமி: எமன் என்னடா பண்ணுவான்? காலனுக்கே காலன் அவன். மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைச்சவன் நம்ம அப்பன். நீ ‘சிவாயநம’ன்னு சொல்ல ஆரம்பிச்சா, உன் உடம்பு ஒரு கோயிலாயிடும்.
வேதங்கள் சொல்லுது: ‘தத்வமஸி’ – நீயே அதுவாய் இருக்கிறாய்னு. நீ பாவி இல்ல முத்து, நீ அந்தப் பரம்பொருளோட ஒரு துளி. அழுக்கு படிஞ்ச கண்ணாடியில முகம் தெரியாது. இப்போ ‘சிவ’ங்கிற துணியால உன் மனசத் துடைக்கிற… இனி உன் முகத்துல அவனோட ஒளி தெரியும்.
முத்து: அண்ணே… என் மனசு இப்போ லேசா இருக்குண்ணே. அந்தப் பஞ்சுப் பொதி பறக்குறது என் கண்ணு முன்னாடியே தெரியுது.
பெரியசாமி: பார்த்தியா முத்து? நாளை சிவ ராத்திரி. ராத்திரி ஆனாலும் இருட்டு ஓடிப் போச்சு. இதே மாதிரி உன் வாழ்க்கையிலயும் இருட்டு போயிருச்சு. அந்தச் சிவவாக்கியர் வாக்கு பொய்க்காது. நூறு கோடி பாவம் செஞ்சாலும், ‘சிவா’ன்னு ஒரு தரம் சொன்னா, அவன் செஞ்ச பாவமெல்லாம் காத்துல போன கற்பூரம் மாதிரி காணாமப் போயிரும். இது வேதம் சொன்ன உண்மை, நான் கண்ட அனுபவம்.
முத்து:
நமசிவாய… நமசிவாய… நமசிவாய!
அண்ணே… எனக்கு இப்போ சாகுறதுக்கும் பயம் இல்லை, வாழறதுக்கும் பயம் இல்லை. எல்லாம் அவனுக்கே வெளிச்சம்!
பெரியசாமி: போ முத்து… போய் அந்த ஆத்துல ஒரு முங்கு போட்டுட்டு, நெத்தியில திருநீற்றைப் பூசிக்கிட்டு, ‘அஞ்சும் மூணும்’ கலந்த அந்த அநாதி மந்திரத்தை மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இரு. இந்த உலகம் உனக்குச் சொர்க்கமாத் தெரியும்!
(முத்து நெகிழ்ந்து போய் ஆற்றுக்கு ஓடுகிறான். பெரியசாமி திருப்தியுடன் அந்தப் பாடலை மெல்ல முணுமுணுத்தபடி கோயிலை நோக்கி நடக்கிறார்.)
_வேதாந்தக் கவியோகி நாகசுந்தரத்தின் *சிவவாக்கியம் என்ற அருள் வாக்கியம்* தொகுப்பிலிருந்து…_
