யார் சாமர்த்தியசாலி?

வேலப்பன்: என்னவோ போங்க மருதப்பண்ணே… உலகம் போற போக்கப் பாத்தா பயமா இருக்கு. இன்னைக்கு எவனொருவன் அடுத்தவன் தலையில மிளகாய் அரைச்சு, பொய் சொல்லி, ஏமாத்தி காரியம் சாதிக்கிறானோ… அவனைத்தான் ஊரே ‘சாமர்த்தியசாலி’னு கொண்டாடுது. நேர்மையா இருக்கிற நம்மள மாதிரி ஆளுகளை ‘இளிச்சவாயன்’னு ஒதுக்கி வைக்குதுண்ணே!

 

மருதப்பன்: வேலப்பா… பதறாதே. நீ பாக்குறது வெறும் மேலூட்டமான காட்சி. ஆழமாப் பார்த்தா விஷயம் வேற இருக்கு. நீ யாரைச் சாமர்த்தியசாலினு சொல்றியோ, அவங்க உண்மையில் தங்களைத்தாங்களே அழிச்சுக்கிட்டு இருக்கிறவங்கப்பா.

 

வேலப்பன்: என்னண்ணே சொல்றீங்க? அவன் காசு பணம்னு செழிப்பாத்தானே இருக்கான்?

 

மருதப்பன்: தப்பு வேலப்பா!

 

“உலகில் எப்படியாவது தவறு செய்து காரியம் சாதிப்பவர்களைத் தான் சாமர்த்தியசாலி என்கிறார்கள். அது தவறு. உண்மையில் அவர்கள் சாமர்த்திய சாலிகள் அல்ல. ஏனென்றால் அவர்கள் தங்கள் ஆன்மாவிற்கு கெடுதல் செய்கிறார்கள்.”

 

கேளு வேலப்பா… ஒரு மரத்தோட கிளை பசுமையா தெரிஞ்சா மட்டும் போதாது, வேர் அழுகாம இருக்கணும். தவறு செஞ்சு சாதிக்கிறவன், வெளியில வேஷம் கட்டலாம். ஆனா அவன் மனசாட்சிங்கிற “ஆன்மா” ஒவ்வொரு நிமிஷமும் உள்ளுக்குள்ள செத்துக்கிட்டு இருக்கும். திருட்டுப் புத்தியில வந்த செல்வம், தாகத்துக்குக் குடிச்ச உப்புத் தண்ணி மாதிரி. குடிக்கக் குடிக்கத் தாகம் எடுக்கும், ஆனா அது உடம்பைக் கெடுக்கும். தன் ஆன்மாவைக் கறைப்படுத்துறவன் எப்படி சாமர்த்தியசாலியாக முடியும்? அவன் ஒரு வெறும் தரிசு நிலம்!

 

வேலப்பன்: அப்போ யாருண்ணே சாமர்த்தியசாலி? மத்தவங்க ஏமாத்தும்போது அமைதியாப் போறவனா?

 

மருதப்பன்: ஆமாம்பா…

 

2. “சாதுவாக உண்மைக்கு பயந்து ஒதுங்கிச் செல்பவர்கள்தான் சாமர்த்திய சாலிகள்.”

 

இங்க ‘பயந்து’னா கோழைத்தனம்னு நினைக்காதே. அது ‘பாவத்துக்குப் பயப்படுறது’. ஒரு சேத்துல கல்லெறிஞ்சா, அந்தச் சேறு நம்ம மேலதான் தெறிக்கும்னு தெரிஞ்சு, அந்த இடத்தை விட்டு விலகிப் போறவன் புத்திசாலி இல்லையா? உண்மையை உரக்கச் சொல்லாம ஒதுங்கிப் போறான் பாரு, அவன் தன் அமைதியைக் காப்பாத்திக்கிறான். இறைவனின் கணக்குல அவன் தான் பெரிய சாமர்த்தியசாலி. ஏன்னா, அவன் தன் நிம்மதியை எதற்காவும் அடகு வைக்கல.

 

வேலப்பன்: ஆனா அண்ணே, ஒருத்தன் நம்மள அநியாயமா ஒரு அடி அடிச்சா, நாமளும் பதிலுக்கு அடிக்க வேண்டாமா? “ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக் காட்டு”ன்னு சொல்லுவாங்களே… அது இந்த காலத்துக்கு ஒத்து வருமா?

 

மருதப்பன்: அங்கதான் நாம ஒரு பெரிய நுணுக்கத்தைப் புரிஞ்சுக்கணும்.

 

3. “ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டாம். ஆனால் அவனை திருப்பி அடிக்காமல் அவனை திருத்த முயற்சிப்பது உண்மையில் பொறுமை, சிறப்பு.”

 

புரியும்படி சொல்றேன் கேளு… ஒரு கன்னத்தை காட்டுறதுங்கிறது ஒரு உயர்ந்த குணம். ஆனா, அடிக்கிறவனுக்கு அடி வாங்க ஒரு ஆள் கிடைச்சா அவன் ஆட்டம் இன்னும் அதிகமாகும். அதே சமயம், நீ அவனைத் திருப்பி அடிச்சா, உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்? ரெண்டு பேரும் ஒண்ணுதான். மிருகத்துக்குத் தான் பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம். மனுஷன் என்பவன் ‘திருந்த வழி செய்பவன்’. நீ அவனைத் திருப்பி அடிக்காம, உன்னோட பொறுமையாலயும், மௌனத்தாலயும் அவனை குற்ற உணர்வு கொள்ளச் செய்யணும் பாரு… அதுதான் வீரம்! அவனைத் திருத்துறதுதான் நீ அவனுக்குக் கொடுக்கிற ஆகப்பெரிய தண்டனை.

 

வேலப்பன்: இது கேக்க நல்லா இருக்கு அண்ணே… ஆனா அவன் நம்மள ரொம்பத் துன்புறுத்தினா? நாம பொறுமையா இருக்கிறது ஒதுங்கிப் போறது மாதிரி ஆகாதா?

 

மருதப்பன்: இல்லவே இல்லை வேலப்பா!

 

4. “பிறர் கெடுதல், ஊறு செய்தாலும் நாம் பொறுமையை கடை பிடிப்பதே சிறந்த முறை. அது ஒதுங்கி போவதாக ஆகாது.”

 

ஒரு கல்லை எடுத்துச் செதுக்கினாத்தான் அது சிலையாகும். அதுக்காகக் கல் அழுதுகிட்டா இருக்கு? அடி பொறுக்குது. பொறுமைங்கிறது ஒரு தவம். ஒருத்தன் உனக்குக் கெடுதல் செஞ்சா, அதை நீ தாங்கிக்கிட்டு, ‘சரி அவன் புத்தி அவ்வளவுதான்’னு விட்டுட்டுப் போறது கோழைத்தனம் கிடையாது; அது மன உறுதி. கடல்ல எத்தனையோ குப்பை விழுது, கடல் தன் நிலையை மாத்திக்கிதா? இல்லை. அது அலையால அந்த குப்பையை வெளியத் தள்ளிட்டுத் தன் கம்பீரத்தைக் காட்டுது. உன் பொறுமைங்கிற அலையால அவனோட கெடுதலை நீ ஓரங்கட்டணும்.

 

வேலப்பன்: அண்ணே… ஆனா இன்னைக்கு சத்தம் போடுறவனுக்குத் தானே மதிப்பு இருக்கு? யாராவது சத்தமா கத்துனா, அவனைத்தான் பெரிய ஆளுன்னு நினைக்கிறாங்க.

 

மருதப்பன்: அதுதான் உலகத்தின் மாயை வேலப்பா!

 

5. “குரல் உயர்த்தி பேசுவதால் அவன் சாமர்த்திய சாலி அல்ல. மெல்லிய குரலில் சொன்னதும் உண்மையான பட்சத்தில் பிறர் மனதை மாற்றும்.”

 

மேகம் இடி இடிச்சா மழை வராதுப்பா… அமைதியாத் தூறல் விழுந்தாதான் பூமி குளிரும். கத்துறவன் தன் பலவீனத்தை மறைக்கக் கத்துறான். ஆனா, மெல்லிய குரல்ல உண்மையைப் பேசுகிறவன் மனசுக்குள்ள ஊடுருவிப் பாயுவான். காந்திப் பெரியவர் என்ன கத்திக்கிட்டா இருந்தாரு? இல்லையே. மென்மையான சொல்லால இந்த நாட்டையே தன் பக்கம் திருப்பினாரு. உண்மையான சொல்லுக்குப் பின்னாடி ஆன்ம பலம் இருக்கும். அந்தப் பலம் கோடிக்கணக்கான பேரை வழிநடத்தும்.

 

வேலப்பன்: இப்பப் புரியுது அண்ணே. அந்த காலத்துல நீங்க எல்லாம் ஏன் இவ்வளவு நிம்மதியா இருந்தீங்கன்னு இப்போ விளங்குது. இந்த காலத்துல அவசரமும், ஆங்காரமும் தான் சாமர்த்தியம்னு நாங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

 

மருதப்பன்: ஆமா தம்பி. அந்தக் காலத்துல ‘மானம் பெரிது’னு வாழ்ந்தாங்க. இக்காலத்துல ‘பணம் பெரிது’னு வாழ்றாங்க. மானத்தைக் காப்பாத்த உண்மையும் பொறுமையும் தேவை. பணத்தைச் சேர்க்கப் பொய்யும் புரட்டும் தேவைப்படுது. ஆனா மனுஷன் நிம்மதியா கண்ணுறங்கப் பொறுமைதான் மருந்து.

 

நீ சாமர்த்தியசாலியா இருக்கணும்னு ஆசைப்பட்டா, மத்தவனை வீழ்த்த நினைக்காதே; உனக்குள்ள இருக்கிற தீய குணத்தை வீழ்த்தப் பழகு. அதுதான் உனக்கும் உன் ஆன்மாவுக்கும் நீ செய்ற பெரிய உதவி.

 

வேலப்பன்:ரொம்பச் சரியாச் சொன்னீங்க அண்ணே. என் குழப்பமெல்லாம் தீர்ந்துடுச்சு. இனிமேல், யாரிடமும் சத்தம் போடமாட்டேன். பொறுமையாலயும் உண்மையாலயும் இந்த உலகத்தை எதிர்கொள்வேன். அதுதான் உண்மையான சாமர்த்தியம்னு புரிஞ்சுக்கிட்டேன்.

 

மருதப்பன்: அதுதான் வேலப்பா… போ, இருட்டப் போகுது. உன் வீட்டு விளக்கு மட்டும் இல்ல, உன் மனசுக்குள்ள எரியுற அந்த உண்மையும் பொறுமையும் எப்பவும் அணையாமப் பாத்துக்கோ. அதுதான் உன்னை வாழ வைக்கும்!

 

(இருவரும் எழுந்து நடக்கிறார்கள். பின்னணியில் மெல்லிய புல்லாங்குழல் இசை ஒலிக்கிறது. ஆலமரம் மௌனமான சாட்சியாக நிற்கிறது.)

 

_கருத்தாக்கம், உரையாடல்: கவியோகி நாகசுந்தரன்_

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments